கந்தஹாருக்கு மசூத் அசாருடன் சென்றாரா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்? #BBCFactCheck

மசூத் அசார் படத்தின் காப்புரிமை Getty Images

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார், 1999-ம் ஆண்டு ஜம்மு & காஷ்மீரி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு அழைத்து செல்லப்பட்ட விமானத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசரான அஜித் தோவல் இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, "புல்வாமாவில் ராணுவத்தினர் சென்ற பேருந்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம். அந்த தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரைதான் தற்போதைய பாஜக அரசாங்கம் கடந்த 1999ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்தது. இந்தியாவிலிருந்து மசூத் அசாரை ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாருக்கு அழைத்து சென்ற விமானத்தில் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலும் உடனிருந்தார்" என்று அவர் கூறியுள்ளார்.

"புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பும் காரணமாக இருக்கலாம். ஆனால், மசூத் அசாரை இந்திய சிறையிலிருந்து விடுதலை செய்தது பாஜக அரசாங்கம். காங்கிரஸ் கட்சியின் இரண்டு பிரதமர்கள் கொல்லப்பட்டனர். எங்களுக்கு எவ்வித பயமும் இல்லை" என்று அவர் மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption ராகுல் காந்தி

இருப்பினும், ராகுல் காந்தி தனது பேச்சின்போது, 'மசூத் அசார் ஜி' என்று கூறும் பகுதி மட்டுந்தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த காணொளியை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த காணொளி பல்லாயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் முழு உரையை கேட்டவர்கள், இந்தியாவிலிருந்து கந்தகாருக்கு மசூத் அசார் கொண்டுச்செல்லப்பட்டதில் அஜித் தோவலின் பங்கை அறிந்துகொள்வதற்கு பலரும் ஆர்வமாக உள்ளனர்.

"மசூத் அசார் இந்தியாவிலிருந்து கந்தஹாருக்கு அழைத்துச்சென்ற விமானத்தில் அஜித் தோவல் இருந்தார்" என்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் கூற்று தவறானது என்பதை கண்டறிந்துள்ளோம்.

நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த விமானத்தைக் கடத்தி ஆப்கானிஸ்தானுக்கு தலிபான் தீவிரவாதிகள் கொண்டு சென்றபோது, அவர்களிடமிருந்து விமானப் பயணிகளை பத்திரமாக மீட்கும் பேச்சுவார்த்தையில், மசூத் அசார் அங்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்னதாகவே ஈடுபட்டிருந்தார் அஜித் தோவல்.

மசூத் அசார் கந்தஹாரை அடைந்தது எப்படி?

படத்தின் காப்புரிமை SAEED KHAN/AFP/GETTY IMAGES

மசூத் அசார் முதல் முறையாக 1994ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி டாக்காவிலிருந்து விமானம் மூலம், போர்த்துக்கீசிய கடவுச்சீட்டை பயன்படுத்தி (பாஸ்போர்ட்) டெல்லிக்கு வந்தார்.

பிறகு, நாடுமுழுவதும் தீவிரவாத செயல்பாடுகளில் காஷ்மீரின் இளைஞர்களை ஈடுபட வைப்பதற்குரிய பல்வேறு நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். காஷ்மீரின் பிரிவினைவாத தலைவர்களில் முக்கியமானவரான சஜ்ஜத் ஆப்கானியுடன், அவர் ஆட்டோ ஒன்றில் பயணித்து கொண்டிருந்தபோது காவல்துறையினரால் அனந்தநாக் என்னும் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

மசூத் அசார் சிறையில் அடைக்கப்பட்ட பத்தாவது மாதமே, டெல்லியில் வெளிநாட்டினர் சிலரை கடத்திய தீவிரவாதிகள் மசூத் அசாரை விடுதலை செய்தால்தான் வெளிநாட்டவர்களை விடுவிக்க முடியுமென்று மிரட்டல் விடுத்தனர்.

இருப்பினும், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச காவல்துறையினர் இணைந்து கடத்தப்பட்ட வெளிநாட்டவர்களை மீட்டெடுத்ததால் மசூத் விடுதலை செய்யப்படவில்லை.

இனி மிரட்டல் விடுக்கும் செயல்பாடு பலனளிக்காது என்ற முடிவுசெய்து, மசூத் அசார் அடைக்கப்பட்டிருந்த ஜம்முவின் கோட் பல்வாள் சிறைச்சாலையில் 1999ஆம் ஆண்டு ரகசியமாக சுரங்கம் அமைத்தார்கள் தீவிரவாதிகள். பருமனான உடலமைப்பை கொண்ட மசூத் சுரங்கப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது சிக்கிக்கொண்டதால், சிறை அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

அடுத்த சில மாதங்களிலேயே, அதாவது 1999 டிசம்பர் மாதம், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தை நடுவானில் கடத்திய தீவிரவாதிகள், மசூத் அசார் உள்ளிட்ட இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள மூன்று தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுமென்று நிபந்தனை விதித்தனர்.

அச்சமயத்தில் ஆப்கானிஸ்தான் தங்கள் முழுக் கட்டுப்பாட்டிலிருந்ததால், இந்தியாவின் அமிர்தசரஸ், பாகிஸ்தானின் லாகூர், துபாய் என பல இடங்களுக்கு விமானத்தை அலைக்கழித்த கடத்தல்காரர்கள், கடைசியாக விமானத்தை ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகருக்கு கொண்டுசென்றனர். பிறகு, தீவிரவாதிகளின் சொன்னபடி, இந்திய அரசாங்கமும் அவர்களை விடுதலை செய்தது.

ஸ்ரீநகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சர்க்காரும், ஜம்முவிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த மசூத் அசாரும் ஸ்ரீநகருக்கு அழைவரப்பட்டு, அங்கிருந்து இந்திய புலனாய்வு அமைப்பின் சிறிய ரக விமானத்தில் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.

"இரண்டு தீவிரவாதிகளின் கண்களும் கட்டப்பட்டிருந்தன. நான் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர், அவர்கள் இருவரும் விமானத்தின் பின்பகுதியில் இருந்த இருக்கையில் அமர வைக்கப்பட்டனர். அதாவது, விமானத்தின் இடையே திரைச்சீலை ஒன்று போடப்பட்டிருந்தது. அதன் ஒரு முனையில் அவர்கள் இருவரும், மறுமுனையில் நானும் அமர்ந்திருந்தோம்" என்று இந்திய புலனாய்வு அமைப்பின் அன்றைய தலைவரான அமர்ஜீத் சிங் டுலாட் சிங் கூறுகிறார்.

தாங்கள் ஸ்ரீநகரிலிருந்து டெல்லியை நோக்கி புறப்படுவதற்கு ஒரு சில நொடிகளுக்கு முன்னதாக, நாங்கள் விரைந்து டெல்லிக்கு வர வேண்டுமென்றும், அங்கு ஏற்கனவே காத்திருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், விமான நிலையத்திலிருந்து நேரடியாக கந்தஹாருக்கு புறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.

"டெல்லி சென்றடைந்தவுடனேயே மசூத் அசாரும் , சர்க்காரும் கந்தகாருக்கு அழைத்து செல்லப்படவிருந்த விமானத்தில் ஏற்கனவே மற்றொரு தீவிரவாதியான உமர் ஷேக்கும் இருந்தார்," என்று அமர்ஜீத் சிங் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மூன்று தீவிரவாதிகளை காந்தஹாருக்கு அழைத்துச்சென்று ஒப்படைத்தவுடன், தீவிரவாதிகள் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துள்ள விமானப் பயணிகளை அங்கிருந்து அழைத்து வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தபோது, இந்திய வெளியுறவுத்துறை, புலனாய்வுத்துறை உள்ளிட்டவற்றை சேர்ந்த உயரதிகாரிகள், ஒவ்வொரு முடிவையும் எடுப்பதற்கும் டெல்லியை அணுகுவதை விடுத்து, மிகப் பெரிய முடிவையும் எடுக்கும் வகையிலான ஒருவரை மட்டும் அனுப்பி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

அதையடுத்து, பொறுப்பை ஏற்றுக்கொண்ட அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜஸ்வந்த் சிங், தீவிரவாதிகளுடன் கந்தஹாருக்கு சென்றார். எனினும், நீண்ட நேரத்திற்கு தீவிரவாதிகள் பேச்சுவார்த்தைக்காக ஜஸ்வந்த் சிங் வந்த விமானத்தை அணுகவில்லை.

"வெகு நேரத்திற்கு பிறகு, எங்களது விமானத்திலிருந்த வாக்கி-டாக்கில் ஒலி கேட்டது. அப்போது, என்னிடம் வந்த வெளியுறவுத்துறையின் இணை செயலரான விவேக் கட்ஜு, 'ஐயா, அவர்கள் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு முன்னர், நாம் முதலில் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டுமா?' என்று கேட்டார். எனக்கு எந்தவொரு வழியுமில்லாததால், தாலிபன்களின் சொல்லை ஏற்றுக்கொண்டேன்" என்று தனது சுயசரிதையான 'ஏ கால் டூ ஹானர் - இன் சர்விஸ் ஆஃப் எமெர்ஜென்ட் இந்தியா'வில் (A Call to Honor - In Service of Emergent India) ஜஸ்வந்த் சிங் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஜம்மு & காஷ்மீரின் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மசூத் அசார் மற்றும் முஸ்தாக் அஹ்மத் சர்கார் ஆகியோரை விடுவிப்பதற்கு அம்மாநில முதலமைச்சர் பரூக் அப்துல்லாஹ் சம்மதிக்காததால், சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக மத்திய அரசு சார்பில் இந்திய புலனாய்வு அமைப்பின் அப்போதைய தலைவரான அமர்ஜீத் சிங் டுலாட் ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் கருத்துத் தெரிவித்துள்ள அப்துல்லாஹ், "தற்போது எங்களை துரோகிகள் என்று அழைப்பவர்களிடம், மசூத் அசாரை விடுவிக்க வேண்டாம் என்று நாங்கள் 1999ஆம் ஆண்டே கூறியிருந்தோம். பாஜக அரசின் அன்றைய முடிவுக்கு அன்று மட்டுமல்ல, இன்றும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே செய்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :