பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புள்ளவர்களுக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு: கனிமொழி குற்றச்சாட்டு

கனிமொழி

பொள்ளாச்சியில் பெண்கள் மீது நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நான்கிற்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இவர்களுக்கு நிச்சயம் அரசியல் பின்னணி உண்டு என பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டினார்.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக தலைமையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக மாநில மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி மற்றும் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய எம்.பி. கனிமொழி, இந்த ஆர்ப்பாட்டம், தமிழ்நாட்டை தலைகுனிய செய்திருக்கும் ஒரு சம்பவத்துக்காக நடத்தப்படுவதாகவும், இது தமிழனின் புகழையோ பெருமையோ சொல்லும் ஆர்பாட்டம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

பெண்கள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது ஒவ்வொருவரும் தலைகுனிந்து நிற்க வேண்டும் என தெரிவித்தார்.

ஏழு ஆண்டுகளாக ஒரு கும்பல் இதை செய்து வருகிறது, 250 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறை நான்கு பேரை மட்டுமே கைது செய்துள்ளனர்,

காவல்துறை யாரை காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள் என தெரியவில்லை என குற்றஞ்சாட்டினார்.

புகார் கொடுத்த பெண்ணின் துணிச்சலுக்கு பாராட்டு தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண் பெயரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டது, பாதிக்கப்பட்ட 250 பெண்களும் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையை வெளியே சொல்லவிடாமல் அச்சுறுத்தும் செயல் என சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறினார்.

ஆளும் கட்சிக்கு தொடர்பு இல்லை என மாவட்ட கண்காணிப்பாளர் தானாக முன்வந்து பேட்டி அளிக்கிறார் என குறிப்பிட்ட கனிமொழி, குற்றவாளிகளிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணொளிகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என குறிப்பிட்டார்.

இது நான்கு பேரின் வக்கிரம் என்று மக்களை நம்ப சொல்கிறார்களா என கேள்வி எழுப்பிய அவர், இது நிச்சயமாக நாலு பேருக்காக செய்தது இல்லை, இதை தொடர்ந்து 7 ஆண்டுகளாக செய்ய பின்னணி இருக்கிறது, இவர்களுக்கு பாதுகாப்பாக சிலர் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

அரசியல் பின்னணி இருக்கிறது என கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு வீடியோவில் கூறி இருந்தார் என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த சுற்று வட்டாரத்தில் ஒரு பெண் தற்கொலையோ, கொலையோ செய்யப்பட்டு இருந்தால் அது தொடர்பாக மறுவிசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மக்களையும், ஊடகத்துறையும் மிரட்டாதீர்கள் என கூறிய அவர், பாதிக்கப்பட்ட 250 பெண்கள் யாருமே புகார் கொடுக்க பயப்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது என தெரிவித்தார்.

இப்போது வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றும் நீங்கள், இவ்வளவு நாட்கள் என்ன செய்தீர்கள் எனவும் அப்போது கேள்வி எழுப்பினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை அடித்தவருக்கு எஸ்.பி யாக பதவு உயர்வு அளித்தது இந்த ஆட்சி எனவும் அவர் விமர்சித்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் பி டீம்தான அதிமுக ஆட்சி என விமர்சித்த கனிமொழி, இங்குள்ள மகளிர் ஆணையம் அமைதியாக இருக்கிறது எனவும் சாடினார்.

கைது செய்ய வலியுறுத்திய கனிமொழி

பின்னர் காவல்துறையினர் ஆர்பாட்டத்திற்கு அனுமதி அளித்து கைது நடவடிக்கை இல்லை எனக் கூறினார். ஆனால் கனிமொழி கைது செய்ய கோரி அருகில் இருந்த பேருந்தில் கனிமொழியும் தொண்டர்களும் ஏறினர்.

இதனால் கனிமொழி கைது செய்யப்பட்டதாக எண்ணி தொண்டர்கள் முழக்கமிட்டனர். காவல்துறையினர் கனிமொழி மற்றும் தொண்டர்களை பேருந்தில் இருந்து கீழ இறங்க வலியுறுத்தினர்.

கீழே வந்த கனிமொழி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஏன் கைது செய்யவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும்போது கைது எனக் கூறிவிட்டு ஆர்பாட்டம் முடிந்தவுடன் கைது இல்லை என்பது கேலிக்கூத்தான செயல் என விமர்சனம் செய்தவர், பொள்ளாசியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :