கன்னியாகுமரி மக்களவை தொகுதி; காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமார் வெற்றி

கன்னியாகுமரி

பட மூலாதாரம், Facebook

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து போட்டியிட்ட ஹெச். வசந்த குமார் 6 லட்சத்து 20 ஆயிரத்து 594 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த முறை வென்ற பாரதிய ஜனதா கட்சியின் பொன். ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 62 ஆயிரத்து 976 வாக்குகளே பெற்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா கட்சியும், இந்திய தேசிய காங்கிரஸூக்கும் இடையே மிக பெரும் போட்டி நிலவியது.

2019 மக்களவைத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள்

2019ம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பொன். ராதாகிருஷ்ணன், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹெச். வசந்தகுமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் லெட்சுமணன், மக்கள் நீதி மய்யத்தின் எபினேசர், நாம் தமிழர் கட்சியின் ஜெயன்றீன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு நிலத்திணைகளை கொண்டது கன்னியாகுமரி மாவட்டம்.

இயற்கை வளம் கொழிக்கும் இதன் பெயரிலான மக்களவை தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.

ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இது திகழ்கிறது.

இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலமும், வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன.

திருவிதாங்கூர் கொச்சின் சமஸ்தானம்

பட மூலாதாரம், Facebook

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1951ம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சின் சமஸ்தானத்தின் ஒரு தொகுதியாக நாகர்கோவில் இருந்தது.

1951ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஏ.நேசமணி வெற்றி பெற்றார்.

அதோடு திருவனந்தபுரம், சிராயின்கில், கொய்லோன் மற்றும் மாவல்லிகரா, ஆலப்பி, திருவல்லா, மீனாச்சில். கோட்டயம், எர்ணாகுளம், கரங்கனூர், திருச்சகூர் ஆகியவை இந்த திருவிதாங்கூர் கொச்சின் சமஸ்தானத்தின் பிற தொகுதிகளாக இருந்தன.

கன்னியாகுமரி மாவட்டம் 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தமிழ் நாட்டோடு இணைந்தது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைந்து கன்னியாகுமரி மாவட்டம் உதயமானது.

பட மூலாதாரம், kanniyakumari.nic.in/

படக்குறிப்பு,

மாத்தூர் தொட்டில் பாலம்

நாகர்கோவில் மக்களவை தொகுதி

1951ம் ஆண்டு தொடங்கி இருந்து வந்த நாகர்கோவில் மக்களவை தொகுதி 2009ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக கன்னியாகுமரி மக்களவை தொகுதி என பெயர் மாற்றம் பெற்றது.

நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியிருந்தன.

ஆனால், கன்னியாகுமரி தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றபோது, திருவட்டார் சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டது.

நாகர்கோவில் தொகுதியில், 1951 முதல் 1991-ம் ஆண்டு வரை நடந்த 10 தேர்தல்களிலுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.

1996, 1998 ஆகிய இரு தேர்தல்களிலும் தமிழ் மாநில காங்கிரஸ் வென்றது. பாரதிய ஜனதா கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலா ஒரு முறையும் வென்றுள்ளன.

பட மூலாதாரம், kanniyakumari.nic.in

படக்குறிப்பு,

பத்மநாமபுரம் அரண்மனை

கன்னியாகுமரி மக்களவை தொகுதி

கன்னியாகுமரி மக்களவை தொகுதியாக பெயர் மாற்றம் பெற்ற பின்னர், திராவிட முன்னேற்ற கழகம் ஒரு முறையும், பாரதிய ஜனதா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

பொதுவாக பார்த்தால், தேசிய கட்சிகளே அதிக முறை வென்றுள்ளன. அதிக கல்வியறிவு கொண்ட மாவட்டமாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் தேசிய கட்சிகளின் கோட்டையாகவே இதுவரை இருந்து வந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :