இந்திய தேசிய அரசியலில் மீண்டும் திருப்புமுனையை ஏற்படுத்துபவர் சோனியா காந்தியா?

படத்தின் காப்புரிமை Getty Images

(கட்டுரையில் வெளியாகியிருக்கும் கருத்துகள் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். அவை பிபிசி-யின் கருத்துகள் அல்ல-ஆசிரியர்)

சோனியா காந்தி இப்போது தலையிடுவாரா அல்லது 2004ல் செய்ததைப்போல பொதுத் தேர்தல்கள் முடிந்த பிறகு, நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்துவதற்காக அப்போது தலையிடுவாரா?

பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகும்கூட, மே 2019 தேர்தல்களில் நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காது என்ற ஊகங்கள் உலா வரும் நிலையில் சோனியா காந்தி அப்போது என்ன செய்வார் என்பது குறித்த அனுமானங்களும், விவாதங்களும் நடக்கின்றன.

இப்போது காங்கிரஸ் கட்சியின் வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை. ஆனால் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ்,, பிஜு ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி போன்ற பிராந்திய கட்சிகள், தங்களுடைய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்பதில் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றன.

இருந்தபோதிலும், பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத அணிக்கு பொதுவான ஒரு தலைமை தேவைப்படுகிறது. பிடிவாதமும், ஆவேசமும் மிக்க பிராந்திய தலைமைகளை ஒருங்கிணைப்பதற்கு, ஜெயப்பிரகாஷ் நாராயண், வி.பி. சிங், ஹர்கிஷண் சிங் சுர்ஜித் போன்ற ஒரு தலைமை தேவைப்படுகிறது.

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES

பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோதியை நீக்கியே தீர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சியுடன் சேர மறுப்பது, முக்கியத்துவத்தை, இடங்களை பகிர்ந்துகொள்ள மறுப்பது மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தியாகங்கள் செய்ய முன்வர வேண்டும் என்று ராகுல் காந்தி, அஹமது பட்டேல் உள்ளிட்ட தலைவர்களுக்கு கூறும் உரிமையும், செல்வாக்கும் சோனியா காந்திக்கு மட்டுமே இருக்கிறது.

பாலாகோட் தாக்குதலுக்குப் பிறகு, தீவிர செயல்பாடும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் நரேந்திர மோதியும், அமித்ஷாவும், அதிருப்தியில் இருந்த அனுப்ரியா பட்டேலின் அப்னா தள் போன்ற சில கூட்டணி கட்சிகளுடன் கூட்டணியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, டெல்லியில் தொகுதிப் பங்கீடு ஏற்படுத்திக் கொள்வதில் காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.

உத்தர பிரதேசத்தில் கூட்டணியை மாற்றி அமைப்பதற்காக, பிரியங்கா காந்தி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆகியோரிடம் இருந்து அழைப்பு வர வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் காத்திருக்கின்றன.

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, பிரபலமான முஸ்லிம் மத குரு தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகள் நெருக்கடியில் இருப்பதைக் காட்டும் அறிகுறியாக இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

கூட்டணியை உருவாக்கும் வேகத்தை அதிகரிக்க முடியாமல் ராகுலும், அவருடைய குழுவினரும் திண்டாடும் நிலையிலும், இப்போது தலையிடுவதில் சோனியா ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுலின் அனுபவமின்மை மற்றும் அவருடைய வரையறைகளை, ஒரு தாய் என்ற வகையில் சோனியா அறிந்திருக்கலாம்.

ஆனால் அதே நேரத்தில், அரசியலில் தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றே தெரிகிறது. இது சிக்கலான, புரிந்து கொள்ளக்கூடிய சூழ்நிலையாக இருக்கிறது.

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதில் முன்பு சோனியா காந்தி உறுதி காட்டினார். ஆனால் இப்போது மறுயோசனை செய்கிறார்.

உண்மையில், இந்திரா காந்தி குடும்பத்தவர்கள் அரசியலுக்கு வருவதில்லை என்று சொல்வது ஒருபோதும் சாத்தியமானதாக இருக்கவில்லை.

தனது கணவர் பெரோஸ் காந்தியின் மறைவுக்குப் பிறகு, 1950களில் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இல்லத்தைவிட்டு வெளியேறி, வெளிநாட்டுக்குச் சென்றுவிட வேண்டும் என்று இந்திரா காந்தி பல முறை முயற்சி செய்தார்.

ஆனால் உள்நாட்டு அரசியல் சூழ்நிலைகள் 1959ல் அவரை தீவிர அரசியலுக்குக் கொண்டு வந்துவிட்டன. (அப்போது அவர் காங்கிரஸ் தலைவராக இருந்தார்).

நேருவின் காலத்துக்குப் பிறகு, 1984ல் அவருடைய மரணம் வரையில் இந்த நிலைதான் இருந்தது. ராஜீவ் காந்தியும் அரசியலில் விருப்பம் இல்லாமல் இருந்தார்.

படத்தின் காப்புரிமை SHEKHAR YADAV/INDIA TODAY GROUP/GETTY IMAGES

தம்பி சஞ்சய் காந்தி விமான விபத்தில் மரணம் அடைந்ததால் அரசியலுக்கு வர வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட இந்திரா காந்தியின் உடல், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையிலும், ராஜீவ் காந்தி பிரதமர் பொறுப்பை ஏற்கக் கூடாது என்று சோனியா காந்தி உறுதியாக இருந்தார் என்று சொல்லப்பட்டது.

நரசிம்ம ராவும், சீதாராம் கேசரியும் காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக பலவீனப்படுத்தி, கொள்கை அளவில் வலு குறைந்த நிலையை ஏற்படுத்திவிட்ட நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் விடுத்த வேண்டுகோள்களை 1998ல் சோனியா ஏற்க வேண்டியதாயிற்று.

வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற விமர்சனங்களை மீறி, ராகுலின் அணுகுமுறைகளை மாற்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத கட்சிகளை அணுகி, வேகமான செயல்பாடுகளைக் காட்டுவது வரையில், சோனியாவின் பயணம் நெடியதாக இருந்தது.

கூட்டணி அரசியல் சூழ்நிலையில், கூட்டணிக் கட்சிகள்தான் சரியான வழிமுறையாக இருக்கும் என்பதை அவர் சீக்கிரத்திலேயே அறிந்து கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பல ஆண்டுகளுக்கு முன்னால் சோம்நாத் சாட்டர்ஜியின் இல்லத்தில் நடந்த டின்னரில் சோனியாவும், முலாயம் சிங் யாதவும் கலந்து கொண்டனர். சோனியா மீன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ``மேடம், கவனமாக இருங்கள், மீன் முள் குத்திவிடப் போகிறது'' என்று முலாயம் கூறினார். ``முட்களை எப்படி கையாள்வது என்று எனக்குத் தெரியும்'' என்று உடனடியாக பதில் அளித்தார் சோனியா.

ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமான, இலங்கையைச் சேர்ந்த விடுதலைப் புலிகளுடன் இணக்கமான போக்கை கையாள்வதாக 1997ல் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் புகாருக்கு ஆளான திமுகவுடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட உறவுக்கு விளக்கம் தருவதாக இது இருக்கிறது.

இருந்தபோதிலும், 2004 முதல் 2014 வரையில், கூட்டணிக் கட்சிகளுடன் புதிய அணுகுமுறைகளை அவர் கையாண்டார்.

தாங்கள்தான் பெரிய கட்சி என்ற பிடிவாதம் கொண்ட தேசியவாத கட்சி போன்ற கட்சிகளும் கூட இந்த அணியில் சேர்ந்தன.

சரத்பவார், மாயாவதி, கருணாநிதி போன்ற கூட்டணித் தலைவர்களிடம் அவர் காட்டிய அணுகுமுறைகள், அடல் பிகாரி வாஜ்பாயி அல்லது பி.வி. நரசிம்ம ராவின் அணுகுமுறைகளைவிட சிறந்ததாகவே இருந்தது.

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES

அப்படிப் பார்த்தால், வாழ்க்கை என்னும் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில், தேறிய முதலாவது பட்டதாரி என்பவரைப் போல சோனியா இருக்கிறார்.

``அரசியல் வாழ்க்கை: இந்தியா எனக்கு எதை கற்றுக் கொடுத்தது'' என்ற தலைப்பில் 1997ல் நெதர்லாந்து நாட்டில் தில்பர்க்கில் நெக்சஸ் கல்வி நிலையத்தில் உரையாற்றிய சோனியா காந்தி, ``அரசியல் வகுப்பறையில் எனது முதலாவது அனுபவம் நினைவுக்கு வருகிறது. இரண்டு சம்பவங்கள் என் மனதைவிட்டு அகலாமல் உள்ளன. 1971ல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், திருமதி காந்தி சிறந்த நிர்வாகியாக உருவெடுத்தது முதலாவது சம்பவம்.

நாட்டில் பஞ்சத்தை ஒழிப்பதிலும், உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்து மாற்றி தற்சார்பை எட்டுவதிலும் ஓர் அரசியல்வாதியாக அவர் காட்டிய உறுதி என் மனதில் நிற்கிறது. கடுமையான முடிவுகளை அவர் எடுத்த காரணத்தால் பசுமைப் புரட்சிக்கு வித்திடப்பட்டது, அதனால் நமது பொருளாதார நிலைமை மாறியது'' என்று கூறினார்.

சோனியாவின் தில்பர்க் உரை, பலன் தரக் கூடிய வகையில் கவனிப்புக்கு ஆளானது. தன்னுடைய உரை பற்றி விவரித்த சோனியா, ``என்னுடைய உரையின் மையக் கருத்து பற்றி, ஈர்ப்புமிக்க இந்த நாட்டில் நான் பேசுவது பொருத்தமானதாக இருக்கும்.

ஏனென்றால் நான் சொல்லப் போகும் விஷயங்கள் உங்களுடைய இரண்டு அற்புதமான கலைஞர்களின் வார்த்தைகளைப் போல இருக்கும். ரெம்பிராண்ட் கூறுவதைப் போல, இது தலையெழுத்தின் ஒளியும் இருளும், புதிர்களும் நிறைந்த ஒரு கதை.

வான் கோக் கூறுவதைப்போல இது போராட்டங்கள் மற்றும் மனவேதனை பற்றிய கதை, இழப்புகளின் அனுபவங்கள் எப்படி வாழ்வில் ஆழமான பொருள்களைக் கற்பிக்கிறது என்ற கதை'' என்று கூறினார்.

இத்தாலி நாட்டில் பிறந்த தாம், ரிசோர்கிமென்டோ, மாஜினி, மற்றும் கரிபால்டி, இத்தாலி ஒருங்கிணைக்கப்பட்டது பற்றி படித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை FRANCIS APESTEGUY

ஆனால் இந்தியாவைப் பற்றி, அதனுடைய வரலாறு, நவீனமாக்கப்பட்ட நாடாக மாறியது போன்றவை குறித்து எதுவும் கற்பிக்கப்படவில்லை. ``இந்தியாவைப் பற்றி நான் அறிந்து கொண்டது மாறுபட்ட சூழ்நிலையில் தான்'' என்று அவர் குறிப்பிட்டார்.

எனது மாமியாரின் மரணம் எங்களுடைய வாழ்வை புரட்டிப் போட்டுவிட்டது. நேசத்துக்குரிய ஒருவரை இழக்கும் போது வழக்கமாக ஏற்படுவதைப் போல இது நடந்தது. அவருடைய எழுத்துகள் மூலம் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். அவருக்கும் அவருடைய தந்தைக்கும் இடையில் நடந்த கடிதப் பரிமாற்றங்களின் இரண்டு தொகுப்புகளை உருவாக்கும் பணியில் நான் மூழ்கி இருந்தேன்.

அவருடைய இளமைக் காலத்தில் பெரும்பகுதி, அவருடைய தந்தை பிரிட்டிஷாரின் சிறைகளில் இருந்தார். அப்போது பாசம் மிகுந்த நெருக்கமான உறவுகளை விவரிப்பதாக இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் இருந்துள்ளன.

துடிப்புமிக்க இரண்டு மனங்களுக்கு இடையில் இருந்த பல்வேறு அம்சங்களை அந்தக் கடிதங்கள் காட்டுகின்றன'' என்று சோனியா கூறியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை அப்படியே நினைவுகூர்வதாக நேரு - இந்திரா இடையிலான கடிதங்கள் உள்ளன.

``நான் ஏற்கெனவே நிறைய படித்திருக்கும் ஜவஹர்லால் நேருவின் புத்தகங்களுடன், எனது கணவரை கவனிக்கும் நேரடி அனுபவத்தில், முக்கிய தத்துவார்த்த மற்றும் வரலாற்று விஷயங்களைக் காட்டுவதாக இருந்தன.

இந்தியா குறித்த தொலைநோக்கு சிந்தனையை எனது கணவர் முன்னெடுத்துச் செல்வதன் அடிப்படையை அறிந்து கொள்ள முடிந்தது'' என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமரின் மருமகள் என்ற நிலையிலான தன்னுடைய வாழ்க்கை, அரசியலில் சூறாவளிகள் வீசிய காலங்களாக இருந்தன என்று சோனியா விவரித்தார்.

``குடும்பத்தின் தனிப்பட்ட வாழ்க்கை என்ற நிலையில் இருந்து பார்த்தால், அரசியல் என்ற பொது வாழ்க்கை என் நினைவுக்கு வருகிறது: அரசியல் மற்றும் நிர்வாகம் தொடர்பான விஷயங்கள் குறித்தும், சித்தாந்தங்கள் மற்றும் நம்பிக்கைகள் குறித்த விஷயங்கள் பற்றி கையாளும் மக்களுடன் நெருக்கமாக இருப்பது அன்றாட வாழ்வில் அங்கமாகிவிட்டிருந்தது'' என்று சோனியா கூறினார்.

அரசியல் குடும்பத்தில் வாழ்வது, இளம் மணமகள் என்ற வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வேறு அம்சங்களும் இருந்தன என அவர் குறிப்பிட்டார்.

``பொது மக்களை அணுகும் வகையில் என்னை நான் மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. அது எனது விஷயத்தில் தலையிடுவதாகவும், கடினமானதாகவும் கருதினேன். தன்னிச்சையாக, உள்ளார்ந்த கருத்துகளை மாற்றிக் கொள்வதற்கு நான் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, பொய்கள், வீண் பழிகள் வரும்போது நேருக்கு நேராக பதில் சொல்லக் கூடாது என்பதை நான் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. குடும்பத்தில் மற்றவர்கள் செய்ததைப் போல, அந்தச் சூழ்நிலைகளை கடந்து செல்வதற்கு நான் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது'' என்று சோனியா தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை RAVEENDRAN

``இந்தியா பற்றி அறிந்தவர்களுக்கு, நாங்கள் படபட என பேசுபவர்கள் என்பதை அறிந்திருப்பீர்கள். நோபல் பரிசு பெற்ற, நெக்சஸ் பேராசிரியரான அமர்தியா சென் தன்னுடைய 'தி ஆர்கியூமென்டேடிவ் இந்தியன்' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதைப்போல, மரணம் வருவதால் பெரும்பாலான இந்தியர்கள் வருந்துவதற்கு இருக்கும் ஒரே காரணம், இனிமேலும் வாக்குவாதம் செய்ய முடியாது என்பதாகத் தான் இருக்கும்! எனவே இந்தியாவில் பொது வாழ்க்கை என்பது தீவிரமான வாக்குவாதங்கள் மற்றும் தீவிரமாக கருத்துகளை வெளிப்படுத்துதல் ஆகியவை இணைந்ததாக இருப்பதில் ஆச்சர்யம் கிடையாது. அரசியலில் மாறுபட்ட நிலைகள் என்பது தான் எங்கள் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது'' என்று நிறைவாக சோனியா கூறினார்.

2016-ல் 70 வயதை எட்டியபோது, அரசியலில் இருந்து விலகி விடுவது என்று சோனியா உறுதியாக இருந்தார். இருந்தபோதிலும், மோதியின் வளர்ச்சியும், மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னொரு முறை ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தோன்றுவதும், ``சோனியா காந்தி மீண்டும்'' என்ற நிலையை உருவாக்கக் கூடும்.

உண்மையில், இது இரண்டு அம்சங்களைக் கொண்டது. தாய் என்ற வகையில் ராகுலை வெற்றியாளராக உருவாக்குவது. திமுக, ஆர்.ஜே.டி., திரிணாமூல், தேசியவாத கட்சி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற கட்சிகளைக் கொண்ட பெரிய கூட்டணியை ஒருங்கிணைக்க சோனியா என்ற நபரால் தான் முடியும் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.

மம்தா பானர்ஜி, மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ், மு.க. ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், சரத்பவார் போன்ற தலைவர்களுக்கு இடையில் தாங்கள்தான் பெரியவர் என்ற கருத்து இருப்பது நிதர்சனமான உண்மை.

1975 - 77 களில் ஜெயப்பிரகாஷ் நாராயண் அல்லது 1989, 1996 மற்றும் 2004ல் ல் வி.பி. சிங் மற்றும் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் போல, முட்டி மோதிக் கொண்டிருக்கும் கட்சிகளை ஒன்று சேர்ப்பதில் உயர்ந்த மதிப்பும், ஏற்பும் சோனியாவுக்கு இல்லைதான். ஆனால், மோதிக்கொள்ளும் தரப்புகளை ஒன்று சேர்க்கும் அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருக்கிறது.

அரசியல் பதவியை, அதிகாரத்தை ஏந்திக்கொள்வதில் ராகுல் மற்றும் சோனியாவுக்கு பெரிய ஆர்வம் இல்லை என்பதையும், அதிகாரத்தின் காப்பாளர்களாக இருப்பதிலேயே அவர்களுக்கு ஆர்வம் என்பதையும் மீண்டும் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரதமராக இல்லாமலேயே அனைத்து அதிகாரங்கள் கொண்டவராக இருக்க முடியும் என்பதை 2004 முதல் 2014 வரையில் சோனியா நிரூபித்துக் காட்டியுள்ளார்.

மன்மோகன் ஆட்சியில், அமைச்சராகும் வாய்ப்புகளை ராகுலும் தவிர்த்துவிட்டார். 49 வயதாகும் அவர், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டிய அவசரத்தில் இல்லை. சோனியாவுக்கு அது துருப்புச் சீட்டாக மாற வாய்ப்பிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :