"நாட்டை நாக்பூரிலிருந்து கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்": ராகுல் காந்தி

"நாட்டை நாக்பூரிலிருந்து கட்டுப்படுத்த நினைக்கிறார்கள்": ராகுல் காந்தி

நாகர்கோவிலில் தனது தமிழக தேர்தல் பிரசாரத்தைத் துவக்கியிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு செல்வதற்கு முன்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவதற்கு முன்பாகப் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் எப்படி இதுவரை செய்தியாளர் சந்திப்பை நடத்தாமல் இருக்கிறார். எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துகிறார்கள். ஆனால், பிரதமர் செய்தியாளர்களைச் சந்திப்பதில்லை என்று குறிப்பிட்டார். அந்தப் பேட்டியிலிருந்து:

கே. பல மாநிலங்களில் காங்கிரசிற்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமையவில்லை. தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால், அதிக இடங்களைப் பிடித்த கட்சியையே குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிடிப்பதற்கு அழைப்பார். இந்த சூழலை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்..? இந்தியாவை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் என்ன இருக்கின்றன?

ப. பல மாநிலங்களில் கூட்டணிகள் இறுதிசெய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், பிஹார், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் கூட்டணிகள் இறுதிசெய்யப்பட்டிருக்கின்றன. ஆகவே காங்கிரசிற்கு கூட்டணி அமையவில்லை என்பது தவறான கருத்து. உண்மையில் பா.ஜ.கவுக்குத்தான் கூட்டணி அமையவில்லை. எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு தேர்தலை சந்திக்கிறோம்.

வேலை வாய்ப்பை் பொறுத்துவரை சில விஷயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பொருளாதார வளர்ச்சி என்பது தேசத்தின் மனநிலையோடு நேரடியாகத் தொடர்புடையது.

இதனை பா.ஜ.கவோ, பிரதமரோ புரிந்துகொள்ளவில்லை. உள்ளுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஒரு தேசம் பெரிய பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. தேசத்திற்குள் ஒரு ஒருங்கிணைந்த உணர்வை கொண்டுவருவதான் எங்கள் முதல் பணியாக இருக்கும். தமிழர்கள் உட்பட இந்த நாட்டில் உள்ள அனைவரும் தாங்கள் இந்த தேசத்தின் ஒரு பகுதியினர் என உணர வேண்டும். அவர்கள் துன்புறுத்தப்படுவதாக உணரக்கூடாது. தங்கள் மொழியும் கலாச்சாரமும் தாக்கப்படுவதாக உணரக்கூடாது. இந்தியா எல்லோருக்குமானது.

நாங்கள் வங்கிகளை எல்லோருக்குமாக திறப்போம். தொழில்துறை ஜிஎஸ்டியாலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையாலும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது. குறுதொழில் துறையினர், நடத்தரத் தொழில்துறையினரின் தொழில் செய்வதை எளிதாக்குவோம்.

கே. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, உங்கள் அரசியல் வியூகத்திற்கு புதிய சவால் உருவாகியிருக்கிறதா?

ப. நம்முடைய ஆட்கள் 45 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களை பாதுகாக்க அரசு என்ன செய்தது? பாகிஸ்தானியர்கள்கள் குண்டு வைப்பதைத் தடுக்க என்ன செய்தது? குண்டுவைத்தவர், மசூத் அசார். பா.ஜ.கவால் விடுதலைசெய்யப்பட்டவர். பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தேவல் இதில் சம்பந்தப்பட்டிருந்தார். எதற்காக பயங்கரவாதிகளை விடுதலை செய்தார்கள் என்பதுதான் என் கேள்வி.

இந்தத் தேர்தலில் இரண்டு, மூன்று விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும். வேலை வாய்ப்பின்மை விவகாரத்தில் நரேந்திரமோதி மிக மோசமாக செயல்பட்டிருக்கிறார். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, விவசாயிகள் விவகாரம். தமிழ் விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடினார்கள். ஆகவே விவசாயிகள் விவகாரம் மிக முக்கியமானது. மூன்றாவதாக, இந்தியாவின் முக்கியமான அமைப்புகளைச் சிதைத்த விவகாரம். சிபிஐயின் தலைவர் இரவு 1.30 மணிக்கு மாற்றப்படுகிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை விவகாரத்தில் ரிசர்வ் வங்கி நடந்துகொண்டவிதம், அதையடுத்து அதன் தலைவர் ராஜினாமா செய்தது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படையாக பேசுவது போன்றவை, நம் அமைப்புகளின் மீது நடக்கும் தாக்குதலைச் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நாட்டை நாக்பூரிலிருந்து ஆள முடியாது. எல்லோருக்கும் குரல் இருக்கிறது. அதை முடக்க முடியாது. இந்த மாநிலத்தை தில்லியிலிருந்து பிரதமர் கட்டுப்படுத்துகிறார். இது தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய அவமானம். இதை என்னால் ஏற்க முடியாது. கடைசியாக, பொருளாதார நிலைமை. இவைதான் தேர்தலில் முக்கியமான விவகாரமாக இருக்கும். எல்லோரையும் அவர்களுக்குள்ளாகவே சண்டையிட வைத்துவிட்டார் மோதி. அவர் ஏன் உரையாடல்களுக்கு பயப்படுகிறார். என்னோடு பேச வேண்டாம். மாணவர்களோடு பேசுங்கள்.

கே. தமிழகத்தில் உங்கள் வாக்குறுதி என்னவாக இருக்கும்?

ப. உள்ளூர் பிரச்சனைகளைப் பற்றி இங்கிருக்கும் பிற தலைவர்கள் முடிவெடுப்பார்கள். நான் தேசிய அளவிலான பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே பேசுவேன். பொருளாதாரத்தை சரியான பாதைக்குத் திருப்ப வேண்டும். எங்களிடம் ஒரு புரட்சிகரமான திட்டம் இருக்கிறது. அதை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். அதாவது குறைந்தபட்ச அடிப்படை வருமானத் திட்டம். எல்லோருக்கும் அந்த வருவாய் கிடைப்பதை உறுதிசெய்வோம். அந்தத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் கிடைக்கச் செய்வோம். இது தமிழகத்திற்கு உதவியாக இருக்கும்.

தமிழ்நாடு உற்பத்தித் துறையில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம். 2019ல் ஆட்சிக்கு வந்தால் உங்கள் திறனுக்கு ஆதரவளிக்கப்படும். வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சிக்கு ஊக்கமளிக்கப்படும்.

கே. 14 -15வது நிதி ஆணையத்தின் மூலம் வளர்ந்த மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன. தி.மு.க. தொடர்ந்து இந்த பிரச்சனையை எழுப்பியிருக்கிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களை தண்டிக்கும் வகையில் 1971ஆம் ஆண்டு கணக்கெடுப்பை பயன்படுத்துவதற்குப் பதிலாக 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பை பயன்படுத்துகிறார்கள். இதில் உங்கள் பார்வை என்ன?

ப. துவக்கத்திலிருந்தே எல்லா அமைப்புகளையும் கட்டுப்படுத்துவதுதான் பா.ஜ.கவின் திட்டமாக இருந்தது. நாட்டை நாக்பூரிலிருந்து வழிநடத்த விரும்புகிறார்கள். திட்டக் கமிஷனை, ரிசர்வ் வங்கியை, உச்ச நீதிமன்றத்தை, தேர்தல் ஆணையத்தை அழித்தார்கள். நாங்கள் இந்தியாவை பல கலாச்சாரங்களும் மொழியும் உள்ளடக்கிய ஒரு தேசமாகப் பார்க்கிறோம். எல்லா மாநிலங்களும் கலாச்சாரங்களும் பாதுகாக்கப்படும்படி நாங்கள் நடந்துகொள்வோம்.

தாங்கள் ஆளும் மாநிலங்களுக்கும் ஆட்சி செய்த மாநிலங்களுக்கும் இடையில் பா.ஜ.க. பாரபட்சம் காட்டுகிறது. அது தேச விரோதமானது. நாங்கள் அப்படிச் செய்வதில்லை.

நான் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதை நம்புபவன். நாட்டை பிரதமர் அலுவலகத்திலிருந்து வழிநடத்துவதை விரும்பாதவன். பிரதமர் அலுவலகம், முதலமைச்சர் அலுவலகம், பஞ்சாயத்து என எல்லா அமைப்புகளாலும் தேசத்தை வழிநடத்த வேண்டும்.

கே. நீங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வீர்களா?

ப. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சண்டீகர் மாநிலங்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்து பத்தே நாட்களில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தோம். விவசாயிகள் இந்த தேசத்தின் முக்கியமான அங்கம் என நினைக்கிறோம். அவர்கள் இல்லாமல் இந்த தேசம் வளராது. பா.ஜ.க. அப்படி நினைக்கவில்லை. ஆகவே எந்த விதத்தில் அவர்களை ஆதரிக்க முடியுமோ, அந்த விதத்தில் ஆதரிக்கிறோம்.

கே. ரஃபேல் விமானங்களின் முதல் சில விமானங்கள் இந்தியாவுக்கு வந்துசேரும்போது, என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்..

ப. ரஃபேல் விமானங்களின் திறன் மீது எங்களுக்கு சந்தேகமில்லை. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் அனில் அம்பானி 30 ஆயிரம் கோடிகளை எடுத்திருக்கிறார். பாகிஸ்தான் மீது குண்டுவீசிய நம் விமானிகளின் பாக்கெட்டிலிருந்து எடுத்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா என்று கேட்கிறீர்கள். அதனை ஆவணங்களைப் பார்த்துதுதான் சொல்ல முடியும். ஆனால், ஊழல் நடந்திருக்கிறது என்பது தெளிவு.

கே. மீனவர் விவகாரம், ஏழு தமிழர் விடுதலை, காவரி விவகாரம் ஆகியவற்றில் உங்கள் நிலை என்ன?

ப. மீனவர்களுக்கென தனி துறையை உருவாக்கி, அந்த விவகாரத்தை கவனிப்போம். காவிரி விவகாரத்தை பேசித் தீர்க்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் நாங்கள் அதனை எதிர்கொண்டுவிட்டோம். சட்ட விவகாரத்தைப் பொறுத்தவரை, அதில் என்ன நடந்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான். நாங்கள் மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். யாரோடும் எங்களுக்கு பகைமை இல்லை.

கே. நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு தருவீர்களா? நீட் தேர்வு தமிழகத்தில் கவலைக்குரிய விவகாரமாக இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்?

ப. பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை மாநிலங்களிடம்தான் இருக்க வேண்டும். ஆனால், உயர்கல்வியின் சில அம்சங்கள் மத்திய அரசிடம் இருக்க வேண்டும். நீட் தேர்வைப் பொறுத்தவரை நாங்கள் திறந்த மனதோடு இருக்கிறோம். அவற்றைப் பேசித் தீர்க்கலாம்.

கே. இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு நீங்களும் தி.மு.கவும் பொறுப்பாக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் பதில் என்ன?

ப. இது அபத்தமான கேள்வி. தமிழகத்தில் யாரும் அப்படி நினைக்கவில்லை. இது என்னை அவமானப்படுத்துகிறது.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு புறப்பட்ட ராகுல்காந்தி, நாகர்கோவிலில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கூட்டணிக் கட்சியனரின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்த கூட்டதில் தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியின் தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதியை கடுமையாக குற்றம்சாட்டிப் பேசினார்.

முதலில் மறைந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி குறித்து புகழாரம் சூட்டிய ராகுல் காந்தி, அவர் ஒரு போதும் மரணிக்க மாட்டார் என்று குறிப்பிட்டார். "கலைஞர் நம்முடன் வாழ்கிறார் என தமிழகத்தின் அடுத்த முதல்வராக வரக்கூடிய மு.க. ஸ்டாலின் கூறினார். நான் சில முறை கலைஞரை சந்தித்திருக்கிறேன். ஆனால், அவரோடு அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. கலைஞர் தற்போது வாழமட்டுமில்லை, அவர் மரணிக்கவே மாட்டார். அவர் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதால், அவர் ஒருபோது மரணிக்க மாட்டார். அவர் தமிழர்களின் மொழியை பிரதிபலிக்கிறார். தமிழர்களின் வரலாற்றை பிரதிநிதித்துவம் செய்தவர்" என்றார் ராகுல் காந்தி.

இதற்குப் பிறகு தொடர்ந்து பேசிய ராகுல், "காமராஜரைப் பற்றியும் இதேபோல சொல்ல முடியும். இந்த பெருந்தலைவர்கள், தமிழர்களின் இதயத்தில்இருந்ததை பிரதிபலித்ததால் அவர்கள் எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். இன்றைக்கு பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். நம்மை காமராஜர், கலைஞர் போன்றவர்களுடன் ஒப்பிட முடியாது. இது வெறும் அரசியல் கூட்டணி மட்டுமல்ல; இது இதயத்தின் உணர்வுகளின் கூட்டணி.

தமிழ் கலாச்சாரம், தமிழ் வரலாறு, மொழி ஆகியவற்றுக்கு நரேந்திர மோதியாலும் ஆர்எஸ்ஸாலும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் நாம் ஒன்றிணைந்திருக்கிறோம். 2019ஆம் ஆண்டின் தேர்தலில் தமிழர்களின் உணர்வுகள் பேசும். தற்போது தமிழகத்தில் உள்ள அரசை பிரதமரின் அலுவலகம் கட்டுப்படுத்துகிறது.

கடந்த காலத்தில் தி.மு.கவும் அதிமுகவும் மோதியிருக்கின்றன. இரு பக்கமும் பெரிய தலைவர்கள் இருந்தார்கள். ஆனால், ஒருபோதும் தில்லியிலிருந்து தமிழக அரசு கட்டுப்படுத்தப்பட்டதில்லை. இது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே நடக்கிறது.

இந்தியாவின் எந்த அமைப்பையும் எந்த மாநிலத்தையும் மிரட்டி பணியவைக்கலாம் என நினைக்கிறார். தில்லியிலிருந்தபடி எந்த மாநிலத்தையும் அடக்கலாம் என நினைக்கிறார். ஆனால், தமிழர்களின் உணர்வுகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. தமிழகம் எப்போதும் உண்மைக்காக நின்றிருக்கிறது. உங்களுடைய போராட்டம் எப்போதும் பொய்க்கு எதிராக, உண்மைக்கானதாக இருந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இதற்காக உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.

நரேந்திர மோதி பேசுவதெல்லாம் பொய்தான். இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் அளிப்பதாகச் சொன்னார். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகள் உறுவாக்கப்படும் என்றார். ஆனால், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை உருவாகியிருக்கிறது. விவசாயிகளைப் பாதுகாப்பேன் என்று சொன்னார் நரேந்திர மோதி. ஆனால், விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடியதைப் பார்த்தேன். அவர்களை நேரில் சந்தித்து அவர்கள் வலிகளைப் பகிர்ந்துகொண்டேன்.

ஒவ்வொரு மாநிலமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கிறது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஒட்டுமொத்த இன்சூரன்ஸ் துறையையும் நரேந்திர மோதி தன் தொழில்துறை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டார். ஜம்மு - காஷ்மீரில் இன்சூரன்ஸ் துறையை தன் நண்பர் அனில் அம்பானிக்குக் கொடுத்துவிட்டார். விவசாயிகள் தங்கள் பணத்தை இன்சூரன்சில் செலுத்தினார்கள். பேரழிவு ஏற்பட்டபோது பணம் மிகப் பெரிய கார்ப்பரேட்டுகளுக்குச் சென்றது. இந்த நாட்டில் எல்லா ஏற்பாடுகளுமே பணக்காரர்களை பாதுகாப்பதற்காகவே இருக்கின்றன.

நரேந்திர மோதி இரண்டு இந்தியாக்களை உருவாக்க விரும்புகிறார். ஒரு இந்தியாவில் ஆளும் வர்க்கத்திற்கு நெருக்கமான முதலாளிகள் எதையும் செய்யாமல், பணம் சம்பாதித்து தனி விமானங்களில் பறப்பார்கள். மற்றொரு இந்தியாவில், இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், விவசாயிகளுக்கு எதிர்காலமில்லை, மக்கள் பெரும் வலியில் தவிக்கிறார்கள்.

தான் இந்த நாட்டின் காவலராக இருக்க விரும்புவதாக பிரதமர் என்று சொன்னார். எல்லா கூட்டங்களிலும் இப்படிப் பேசிவிட்டு, 30000 கோடியை அனில் அம்பானிக்குக் கொடுத்துவிட்டார். அவர்களின் ஒட்டுமொத்த அடிப்படையும் பொய்யின் மேல் கட்டமைக்கப்பட்டது. அனில் அம்பானி தன் வாழ்வில் ஒருபோதும் விமானங்களை உருவாக்கியதில்லை. எச்ஏஎல் நிறுவனம் கடந்த 70 ஆண்டுகளாக விமானங்களை உருவாக்கிவருகிறது. உலகின் மிகப் பெரிய பாதுகாப்புத் துறை ஒப்பந்தத்தை எச்ஏஎல்லுக்குத் தர காங்கிரஸ் அரசு விரும்பியது.

நாங்கள் ஒரு விமானத்தை 526 கோடி ரூபாய்க்கு வாங்க விரும்பினோம். நரேந்திரமோதி பிரதமரான பிறகு, அந்த ஒப்பந்தத்தை எச்ஏஎல்லிடமிருந்து பறிந்து அனில் அம்பானியிடம் கொடுத்தார். நாம் 26 கோடி ரூபாய்க்கு வாங்க இருந்த விமானத்தின் விலை 1600 கோடியாக உயர்ந்தது.

இந்திய பேச்சு வார்த்தைக்குழு இது தொடர்பாக பேச்சு வார்த்தைகளை நடத்திக்கொண்டிருந்தபோது, பிரதமரும் மற்றொரு பக்கம் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருந்தார். அனில் அம்பானிக்கே இந்த ஒப்பந்தத்தைத் தர வேண்டுமென மோதி கூறியதாக பிரெஞ்சு அதிபர் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். பாதுகாப்புத் துறையின் 30,000 கோடி ரூபாய் அனில் அம்பானிக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது.

இந்தியா தற்போது எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை, வேலைவாய்ப்பின்மை. லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள். பிரதமர் கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, மரபுசாரா துறைகளை நாசம் செய்துவிட்டது. வேலை வாய்ப்பின்மையை கொண்டுவந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் ஜிஎஸ்டி வரியை சீரமைப்போம். ஒரே வரி, எளிமையானவரி, குறைந்த அளவிலான வரி. இந்த முட்டாள்தனமான ஜிஎஸ்டி வரியால் மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வோம்.

உலகின் உற்பத்தி தலைநகரமாக மாறும் வாய்ப்பு தமிழகத்திற்கு உள்ளது. செல்போன்கள், சட்டைகள் சீனாவில் உற்பத்தியாகின்றன. அவை தமிழகத்தில் உற்பத்தியாகும் நிலை வர வேண்டும்.

மோடி நீரவ் மோடிக்கும் அனில் அம்பானிக்கும் பெருமளவில் பணத்தை அள்ளிக்கொடுத்தார். நாங்கள் இளைஞர்களுக்கு வங்கியிலிருந்து பெரிய அளவில் நிதியுதவி செய்வோம். ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தைக் கொண்டுவருவோம். நாங்கள் நிர்ணயிக்கும் வருவாய்க்குக் குறைவாக இருப்பவர்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் நேரடியாக வழங்கப்படும். அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எந்த மொழி பெசினாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் இந்த வருவாய் வழங்கப்படும்.

நிலையில்லாத வாழ்வை நடத்தும் மீனவர்களுக்கென தனியாக ஒரு அமைச்சகம் அமைக்கப்படும். இந்த அமைச்சகம் மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும். 2019ல் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவோம். நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு தருவோம். மத்திய அரசுப் பணிகளில் 33 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கப்படும்" என்று பேசினார்.

ராகுல் காந்தியின் உரையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு மொழிபெயர்த்தார். ஆனால், அவருடைய மொழிபெயர்ப்பு மிக மோசமாக இருந்ததால், சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்துவருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :