ராகுல் காந்தி வட இந்தியப் பெண்களை அவமதித்தாரா? உண்மை என்ன? - #BBCFactCheck

ராகுல் படத்தின் காப்புரிமை MAIL TODAY

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தென் இந்தியாவில் வாக்குகளை பெற வட இந்தியர்களை அவமானப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பலர் கூறிவருகின்றனர்.

இந்த கூற்றை நிரூபிக்க வலதுசாரி சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் 20 நொடி வீடியோ ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர்.

வைரலான அந்த விடியோவில், "இந்த விஷயத்தில் வட இந்தியாவைக் காட்டிலும் தென் இந்தியா சிறந்து விளங்குகிறது. நீங்கள் உத்தரப்பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களுக்கு சென்று பெண்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்று பார்க்க வேண்டும். நீங்கள் அதிர்ச்சி அடைந்து விடுவீர்கள்" என்று கூறுகிறார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி இந்தியாவை பிராந்திய ரீதியாக பிரிக்க நினைக்கிறார் என்று சிலர் கூறுகின்றனர்.

இந்தி திரைப்பட இயக்குநரான விவேக் அக்னிகோத்ரியும் இந்த மாதிரி ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

ஆனால் நமது ஆய்வில் ராகுல் காந்தியின் வீடியோ ஒரு பெரிய வீடியோவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒன்று என தெரியவந்துள்ளது.

இது ராகுல் காந்தி சென்னையின் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பேசியபோது எடுக்கப்பட்டது.

ராகுல் காந்தியின் கூற்றுகள்

ராகுல் காந்தி ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார்

அதில் அவர் பல விஷயங்கள் குறித்து பேசினார் அதில் "பெண்கள் முன்னேற்றம் குறித்த விஷயமும்" ஒன்று.

கல்லூரி மாணவி ஒருவர், "பெண்களை சமமாக நடத்தாமை மற்றும் பாகுபாடு காட்டுதல் ஆகியவை குறித்து கேள்வி கேட்டபோது, நமது நாட்டில் பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து அதிகம் சிந்திக்க வேண்டும். இந்த விஷயத்தில் வட இந்தியாவைக் காட்டிலும் தென் இந்தியா சிறந்து விளங்குகிறது. நீங்கள் வட இந்தியாவில் உத்தர பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு சென்றால் அங்கு பெண்களை நடத்தும் விதம் கண்டு அதிர்ச்சியடைவீர்கள். இதில் கலாசாரமும் சம்பந்தப்பட்டுள்ளது. பெண்களை சிறந்து நடத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. இது நல்ல விஷயம் ஆனால் பொறுங்கள். நீங்கள் மகிழ்ச்சியடைவதற்கு முன் தமிழ்நாட்டிலும் அதிக முன்னேற்றம் தேவை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் ராகுல் காந்தி.

அவர் மேலும், "எந்த விஷயத்திலும் பெண்கள் ஆணுக்கு கீழ் என்று நான் நினைக்கவில்லை. எல்லா விதத்திலும் பெண்கள் ஆண்களுக்கு நிகர். நான் நாடளுமன்றம், சட்டமன்றம் மற்றும் பல மாநிலங்களை பார்க்கிறேன் அங்கு தலைமை பொறுப்புகளில் பெண்கள் அதிகம் இல்லை. 2019ஆம் ஆண்டு நாம் முடிவு செய்தது என்னவென்றால், மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவருவதே; பெண்களுக்கு தேசிய அளவில் அனைத்து அரசு பணிகளிலும் 33% ஒதுக்கீடு வழங்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை TWITTER / CONGRESS

இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் குறித்து அதிகம் பேசிய ராகுல், பெண்கள் தலைமைப் பதவிகளில் நியமிக்கப்படக்கூடியவர்கள் என நான் நம்புகிறேன். மேலும் பொதுவாக ஆண்களைக்காட்டிலும் பெண்கள் சமயோசிதமாக யோசிக்கக்கூடியவர்கள் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் பதவிக்கு வந்தால், 2019-24ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கான செலவு 6 சதவீதமாக உயர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.

ராகுலின் கூற்று உண்மையா?

உத்தரப் பிரதேசம் மற்றும் பிகாரை தமிழ்நாட்டுடன் ராகுல் ஒப்பிட்டது தகவல்களின் அடிப்படையில் சரியே.

2017ஆம் ஆண்டின் ஐ.நாவின் மனித வளர்ச்சிக் குறியீடுகளின்படி, கேரளா, புதுச்சேரி, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களை ஒப்பிட்டால் உத்தர பிரதேசம், பிகார், ஜார்கண்ட மற்றும் மத்திய பிரதேசதம் ஆகிய மாநிலங்களின் நிலைமை மோசமாகும்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தகவல்கள்படியும், தென் மாநிலங்களைக் காட்டிலும் பிகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள், வரதட்சணை பிரச்சனைகள் அதிகமாக நடைபெறுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்