பாலகோட் தாக்குதல்: 200 தீவிரவாதிகள் உயிரிழந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதா? #BBCFactCheck

பாலகோட் தாக்குதலில் 200 தீவிரவாதிகள் உயிரிழந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதா? படத்தின் காப்புரிமை FACEBOOK

பாலகோட்டில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதியன்று இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 200 தீவிரவாதிகள் உயிரிழந்ததை பாகிஸ்தான் கர்னல் ஒப்புக் கொண்டதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

ஆனால், இத்தாக்குதல் குறித்து இரு நாடுகளும் இரு வேறு கருத்துகளை வெளியிட்டன. இத்தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறி வரும் நிலையில், இந்திய அமைச்சர்கள் பலர் இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறி வருகின்றனர்.

20 நொடிகள் இருக்கும் அந்த காணொளியில், பாகிஸ்தான் கர்னல் பைசலை போன்று தோற்றமளிக்கும் ஒருவர் ஒரு குழந்தையிடம் பேசுகிறார்.

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் ராணுவத்தின் உயரதிகாரியே ஒப்புக்கொண்டுவிட்டதாக கூறி நேற்று முன்தினம் (புதன்கிழமை) இந்த காணொளியை இந்தியாவிலுள்ள பல்வேறு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.

முன்னதாக இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை NASUR ULLAH/FACEBOOK

வலதுசாரி கொள்கை கொண்டவர்களால் நடத்தப்படும் பல்வேறு ஃபேஸ்புக் குழுக்களில், "பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரம்" என்று குறிப்பிட்டு இந்த காணொளி பகிரப்பட்டது.

"இந்திய இராணுவத்தின் துணிச்சலை கண்டு பாகிஸ்தான் அழுகிறது. இந்திய விமானப்படை தாக்குதல் தொடுத்ததற்கான ஆதாரங்களைக் கோரும் நாட்டின் துரோகிகளுக்கு இது ஒரு ஆதாரம்" என்று தெரிவித்து இந்த காணொளியை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த காணொளி ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் என பல்வேறு சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.

இருப்பினும், அந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்த சந்தேகம் எழுகிறது.

இதுகுறித்த பிபிசி மேற்கொண்ட ஆய்வில், பாலகோட் தாக்குதலில் 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரி ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

காணொளியில் சொல்லப்பட்டது என்ன?

இதுகுறித்து பாகிஸ்தானை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான ரஹீமுல்லாஹ் யூசுப்சாயிடம் கேட்டபோது, "இந்த காணொளியில் ராணுவ அதிகாரியிடம் உரையாடும் முதியவர் பாஸ்ட்டோ எனும் மொழியில் பேசுகிறார். ஆனால், இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறும் பாலகோட் பகுதியில் பரவலாக பேசப்படும் மொழி ஹிந்த்கோ ஆகும்" என்று கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, அந்த காணொளியில் 200 பேரில் உயிரிழந்த ஒருவர் குறித்தே உரையாடல் நடப்பதாக அவர் கூறுகிறார்.

"அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிராக போரிடுபவர் யார் என்பது எங்களுக்கு தெரியும். அதனால்தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என்று அந்த காணொளியில் ராணுவ அதிகாரி கூறுகிறார்.

அதே வேளையில், அங்கிருக்கும் மற்றொருவர், "நேற்று 200 பேர் மலையேறி சென்றதில், இவர் ஒருவர் மட்டுமே வீர மரணம் அடைந்துள்ளார். நாங்கள் ஒவ்வொரு நாளும் மலையேறுவோம், அன்றே திரும்பி வந்து விடுவோம். ஆனால், சில அதிர்ஷ்டசாலிகள் மட்டுந்தான், அல்லாவின் ஆசீர்வாதம் பெற்று வீரமரணத்தை அடைகின்றனர்" என்று அந்த காணொளியில் கூறுவதை போன்றுள்ளது.

ஆனால், அந்த குரல் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியினுடதா அல்லது உள்ளூரை சேர்ந்த மற்றொருவருடதா என்பதில் தெளிவில்லை.

இருந்தபோதிலும், இந்திய விமானப்படையின் பாலகோட் தாக்குதலில் 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி ஒப்புக்கொண்டுவிட்டதாக கூறி இந்த காணொளி இந்தியாவில் பரப்பப்பட்டு வருகிறது.

படத்தின் காப்புரிமை FARMAN ULLAH KHAN/FACEBOOK

இது பாலகோட்டில் எடுக்கப்பட்டதல்ல

ஃபேஸ்புக்கில் இந்த காணொளி எப்போது முதல் முறையாக பதிவேற்றப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தபோது, உருது மொழியில், இறந்துபோன அந்த பாகிஸ்தான் ராணுவ வீரரின் பெயர் ஏசானுல்லாஹ் என்றும் அவர் மேற்கு கைபர் பகுதியை சேர்ந்தவர் என்றும் மார்ச் 1, 2019 அன்று பதிவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர், இந்த காணொளி பாலகோட்டிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேற்கு கைபர் பகுதியிலுள்ள டிர் என்னுமிடத்தில் எடுக்கப்பட்டுள்ளதை போன்று உள்ளதாக தெரிவித்தார்.

இதே சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு காணொளியை ஜாவித் இக்பால், பாரமனுல்லாஹ் கான், ரெஹ்மான் டுராணி ஆகியோர் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

அந்த மூன்று பேரின் ஃபேஸ்புக் பதிவுகள் மூலம், அந்த குறிப்பிட்ட கிராமத்தை பாகிஸ்தான் ராணுவத்தின் பிரிகேடியர் ஹலீம் மற்றும் கர்னல் பைசல் ஆகியோர் பார்வையிட்டுள்ளது உறுதிசெய்யப்படுகிறது.

படத்தின் காப்புரிமை FACEBOOK

பாகிஸ்தானின் நிலைப்பாடு என்ன?

இந்தியா தனது தாக்குதலில் தீவிரவாதிகளை கொன்றுவிட்டதாக கூறுவதற்கு கையில் எடுத்துள்ள மற்றொரு போலியான காணொளியே இது என்று பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், அந்த காணொளியின் பின்னணியாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலும் தவறு என்பது தெரியவந்துள்ளது. அதாவது, இருநாடுகளுக்கிடையான போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி நடைபெற்ற சண்டையில் கொல்லப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்களான அப்துல் ரவ் மற்றும் நயக் குர்ரம் ஆகியோரை அந்த காணொளி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆனால், 'ரேடியோ பாகிஸ்தானின்' ட்விட்டர் பதிவில், அந்த காணொளி பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாணத்தில் உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களுடையது என்று குறிப்பிடுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்