திருச்சி மக்களவைத் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

திருச்சி மக்களவை தொகுதி:

பட மூலாதாரம், Samuel Bourne

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை விட 4,59,286 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

2019 மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள்

  • திமுக கூட்டணி - காங்கிரஸ் வேட்பாளர் - திருநாவுக்கரசர்
  • அதிமுக கூட்டணி - தேமுதிக வேட்பாளர் - இளங்கோவன்
  • நாம்தமிழர் கட்சி வேட்பாளர் - வினோத்
  • மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் - ஆனந்த ராஜா
  • அமமுக வேட்பாளர் - சாருபாலா தொண்டை மான்

தொகுதி மறுசீரமைப்பு பணிக்கு பிறகு ஸ்ரீரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது திருச்சி மக்களவை தொகுதி.

திருச்சியைப் பொருத்தவரையில் பல்வேறு கட்சிகளும் இங்கே களம் கண்டுவென்றுள்ளன. திமுக ஒருமுறை மட்டுமே திருச்சி தொகுதியை வென்றுள்ளது. 2009 மக்களவை தேர்தலுக்கு பின் கடந்த 10 ஆண்டுகளாக திருச்சி தொகுதியை தனது வசம் வைத்திருக்கிறது அதிமுக.

திருச்சியில் அடைக்கலராஜ் அதிக முறை வென்ற நபராவார். சுமார் நான்கு முறை அவர் திருச்சியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 1991 தேர்தல் வரை திருச்சியில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை வைத்திருந்திருக்கிறது கம்யூனிஸ்ட் கட்சிகள்.

இம்முறை திமுக கூட்டணியில் திருச்சி மக்களவை தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

திருச்சி மக்களவை தொகுதியின் வரலாற்றை இங்கே படிக்கலாம்.

1. முதல் மக்களவை தேர்தலில் திருச்சியில் 60.75% வாக்குப்பதிவு நடந்தது. மதுரம் 43.82% வாக்குகளை வென்றார். ஹலஸ்யத்துக்கு 35.83% வாக்குகள் கிடைத்தது. அப்போது டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி சுயேச்சையாக போட்டியிட்டு 10% வாக்குகளை பெற்றிருக்கிறார்.

2. 1957 தேர்தலை பொருத்தவரை 51.64% வாக்குபதிவுதான் திருச்சியில் பதிவானது. இம்முறை காங்கிரஸ் கட்சி திருச்சி மக்களவை தொகுதியை வென்றது. சிபிஐ முதன் முதலாக திருச்சியில் இரண்டாமிடத்துக்கு வந்தது. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 41,125 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளர் ஆனந்த நம்பியாரை வென்றார்.

3. மூன்றாவது மக்களவை தேர்தலில் திருச்சியில் 76.60% வாக்குகள் பதிவாகியிருந்தது. 1957 தேர்தலில் வென்ற அப்துல் சலாம் சுமார் ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளரிடம் தோல்வி கண்டார். இம்முறை சிபிஐ வேட்பாளர் ஆனந்த நம்பியார் ஒரு லட்சத்துக்கு ஐம்பத்து ஆறாயிரத்து எழுநூற்று ஆறு வாக்குகள் பெற்றார்.

4. 1967 தேர்தலிலும் ஆனந்த நம்பியார் வென்றார். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வென்றார். இத்தேர்தலில் திருச்சியில் வாக்குப்பதிவு 77.07% ஆக உயர்ந்தது. காங்கிரஸ் வேட்பாளரை வெறும் சுமார் 1500 வாக்குகளில் வென்றார் நம்பியார்.

5. சுமார் நான்கரை லட்சம் பேர் வாக்களித்த 1971 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் திருச்சியை வென்றது. கடந்த இரு தேர்தல்களில் வென்றிருந்த ஆனந்த நம்பியார் '71 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு வெறும் 26 ஆயிரம் வாக்குகளை மட்டுமே வென்றார். பதிவான வாக்குகளில் சுமார் 5.97% வென்ற ஆனந்த நம்பியார் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் தங்கவேலு 44% வாக்குகள் பெற்றார். இத்தேர்தலில் 73.55% வாக்குகள் பதிவானது.

6. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கலியாணசுந்தரம் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 75 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இவ்விரு கட்சிகளை தவிர போட்டியிட்ட மற்ற எந்தவொரு சுயேச்சை வேட்பாளரும் சுமார் ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெறவில்லை. இத்தேர்தலில் 68.94% வாக்குகள் பதிவானது.

7. 1980 மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கராஜன் திமுக வேட்பாளரிடம் தோற்றுப்போனார். முதல் முறையாக திராவிட கட்சியொன்று திருச்சி மக்களவை தொகுதியை கைப்பற்றியது. செல்வராஜ் சுமார் 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இத்தேர்தலில் 71.94% வாக்குகள் பதிவானது.

8. எட்டாவது மக்களவை தேர்தலில் திருச்சி மக்களவை தொகுதியில் 58% வாக்குகள் பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் அடைக்கலராஜ். 1980 தேர்தலில் வென்ற செல்வராஜ் சுமார் ஒரு லட்சத்து மூன்றாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். இத்தேர்தலில் 76.07% வாக்குகள் பதிவானது.

பட மூலாதாரம், DEA / M. BORCHI

9. அடைக்கலராஜ் மீண்டும் திருச்சி மக்களவை தொகுதியில் வென்றார். இம்முறை 61% வாக்குகளை கைப்பற்றினார். 1989 தேர்தலில் திருச்சியில் 67.70% வாக்குகள் பதிவானது. ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களித்த இத்தேர்தலில் அடைக்கலராஜ் 4.29 லட்ச வாக்குகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.கே.ரங்கராஜன் 2.59 லட்ச வாக்குகளையும் கைப்பற்றினர். மூன்றாவது இடத்தில் 3,152 வாக்குகள் பெற்று ஜனதா கட்சியின் வேலுசாமி இடம்பெற்றார். பாமக 2,057 வாக்குகள் பெற்றது.

10. பத்தாவது மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் மீண்டும் வென்றார் இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அடைக்கலராஜ். இம்முறை 63.99% வாக்குகள் பெற்றார். தொடர்ச்சியாக மூன்று முறை திருச்சி தொகுதியில் வென்ற அடைக்கலராஜ் தனது வாக்கு வீதத்தையும் உயர்த்திக்கொண்டார். இந்த தேர்தலிலும் டி.கே.ரங்கரான்தோல்வியடைந்தார். ஆனால் பதிவான 6.6 லட்சம் வாக்குகளில் சுமார் 2.04 லட்ச வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளருக்கு இந்த தேர்தலில் மூன்றாவது இடம் கிடைத்தது. பாஜக சார்பில் போட்டியிட்ட பார்த்தசாரதி 13,872 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் 63.17% வாக்குகள் பதிவாயின.

11. 1996-ல் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அடைக்கலராஜ் நான்காவது முறையாக திருச்சியில் வெற்றி பெற்றார். இம்முறை 62.25% வாக்குகள் அவருக்கு கிடைத்தது. திருச்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு வங்கி கடுமையாக சரிந்தது. டி.கே. ரங்கராஜன் 7.53% வாக்குகள் மட்டுமே பெற்றார். அதே சமயம் பாஜக 2.13% வாக்குகள் பெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபால் சுமார் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அடைக்கலராஜிடம் தோற்றார். திருச்சி மக்களவை தொகுதியில் சுமார் 33 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் 67.31% வாக்குப்பதிவு நடந்தது.

12. அடைக்கலராஜ் முதல் முறையாக திருச்சி மக்களவை தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதே சமயம் பாஜக முதன் முறையாக திருச்சியை கைப்பற்றியது. அடைக்கலராஜ் 11,455 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் ரங்கராஜன் குமாரமங்களத்திடம் வீழ்ந்தார். இந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் 54.97% வாக்குகள் மட்டுமே பதிவானது

13. ஆறாவது முறையாக திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அடைக்கலராஜ் இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவினார். பாஜகவின் ரங்கராஜன் குமாரமங்களம் கிட்டத்தட்ட 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் நின்ற அடைக்கலராஜை வீழ்த்தினார். இந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகரன் 2.50% வாக்குகள் பெற்றார். 1999 தேர்தலை பொருத்தவரை திருச்சி மக்களவை தொகுதியில் 56.40% வாக்குகள் பதிவானது.

14. திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் நின்ற எல்.கணேசன் 2.16 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தினார். அதிமுக சார்பில் நின்ற பரஞ்சோதி 2.34 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றார். பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ரமேஷ் நான்காமிடம் பிடித்தார். அவருக்கு 4,418 வாக்குகள் கிடைத்தது.

15. திருச்சியில் 24 வேட்பாளர்கள் 2009 மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர். பா.குமார் சுமார் நான்காயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி ஐந்தாயிரம் வாக்குகள் பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 4897 வாக்குகள் பெற்றது. தேமுதிக வேட்பாளர் விஜய்குமார் 61,730 வாக்குகள் பெற்றார். 37 வயதிலேயே ப.குமார் நாடாளுமன்ற உறுப்பினரானது குறிப்பிடத்தக்கது.

16. ப குமார் மீண்டும் 2014 மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் வென்றார். இம்முறை திமுக வேட்பாளரை விட ஒன்றரை லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் நின்ற சாருபாலா தொண்டைமானுக்கு 51,537 வாக்குகள் கிடைத்தது. தேமுதிக வேட்பாளர் விஜய்குமார் 94 ஆயிரம் வாக்குகள் பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 17 ஆயிரம் வாக்குகள் பெற்றது.

நீங்கள் கீழ்கண்ட தொகுதிகளின் வரலாறையும் தெரிந்து கொள்ளலாமே

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :