கரூர் மக்களவைத் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி

தம்பிதுரை

பட மூலாதாரம், Hindustan Times

கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை விட 4,20,546 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

2019 மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள்

  • திமுக கூட்டணி - காங்கிரஸ் வேட்பாளர் - ஜோதிமணி
  • அதிமுக கூட்டணி - தேமுதிக வேட்பாளர் - தம்பிதுரை
  • நாம்தமிழர் கட்சி வேட்பாளர் - கருப்பையா
  • மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் - ஹரிஹரன்
  • அமமுக வேட்பாளர் - தங்கவேல்

கரூர் மக்களவை தொகுதியில் வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), மணப்பாறை, விராலிமலை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இந்த தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக ஒரு முறை கரூரில் வென்றுள்ளது. 1989-லிருந்து தம்பிதுரை நான்கு முறை கரூர் மக்களவை தொகுதியிலிருந்து நாடாளுமன்றம் சென்றிருக்கிறார்.

ஆறு முறை திமுக - அதிமுக நேரடியாக மோதியுள்ளன.இதில் ஒரே ஒரு முறை மட்டுமே திமுக வென்றது.

இதுவரை ஆறு முறை காங்கிரஸ் கட்சி இங்கே வென்றுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இம்முறை கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். தம்பிதுரை டெல்லியில் அதிமுகவின் முகங்களில் ஒருவர். இதனால் கரூர் மக்களவை தொகுதியில் வரும் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தொகுதி ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. செந்தில் பாலாஜியின் வருகை திமுக கூட்டணிக்கு எந்த அளவுக்கு பலன் அளிக்கப்போகிறது? ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் கரூர் அதிமுகவின் பிடியிலேயே இருக்குமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு வரும் மே 23 அன்று விடை தெரியவிருக்கிறது,

கரூர் மக்களவை தொகுதியின் வரலாறு

1. 1957-ல் மதராஸ் மாகாணத்தில் கரூர் மக்களவை தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வென்றது. இத்தேர்தலில் 58.45% வாக்குகள் மட்டுமே பதிவானது. சுயேச்சையாக போட்டியிட்ட சேஷய்யனை இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் பெரியசாமி கவுண்டர் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

2. 1962 தேர்தலில் மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கரூர் மக்களவை தொகுதியை வென்றது. இத்தேர்தலில் 64.15% வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளில் 48.59% காங்கிரஸ் வேட்பாளர் ராமநாதன் செட்டியார் வென்றார். ராஜாஜியின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் ஒரு லட்சத்துக்கு அதிகமான வாக்குகளை வென்றது. இத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட கருப்பையா 16.47% வாக்குகள் வென்றார். அதாவது 47,232 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.

3. சுதந்திர கட்சி 1967 தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியை கைப்பற்றியது. 1962-ல் வென்ற ராமநாதன் செட்டியார் சுமார் 24 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். இத்தேர்தலில் கரூரில் 73.62% வாக்குகள் பதிவானது.

4. சுமார் 73 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமநாதனை தோற்கடித்தார் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கோபால். 1971 தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியில் 71.18% வாக்குகள் பதிவாகியிருந்தது.

5. கோபால் மீண்டும் 1977 தேர்தலில் வென்றார். இம்முறை 62.26% வாக்குகள்பெற்றார். ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மீனாட்சி சுந்தரம் சுமார் 1,45,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இத்தேர்தலில் 70.67% வாக்குப்பதிவு நடந்தது. சுமார் 5 லட்சம் பேர் வாக்களித்தனர்.

6. அதிமுக வேட்பாளர் கனகராஜை சுமார் 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் துரை செபாஸ்டியன். இத்தேர்தலில் 67.44% வாக்குகள் பதிவானது.

7. எட்டாவது மக்களவை தொகுதியில் 68.36% வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் கந்தசுவாமியை தோற்கடித்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முருகையா. பதிவான சுமார் ஆறு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளில் முருகையா 4.13 லட்சம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். கந்தசுவாமி இரண்டு லட்சத்து முப்பத்து மூன்றாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். 1984 தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியில் 77.25% வாக்குப்பதிவு நடந்தது.

8. 1989 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தம்பிதுரை வென்றார். பதிவான 7.48 லட்ச வாக்குகளில் தம்பிதுரைக்கு 4.84 லட்ச வாக்குகள் கிடைத்தது. திமுகவின் கே.சி. பழனிசாமி 2.45 லட்ச வாக்குகள் பெற்றார். பாமக 3,679 வாக்குகள் பெற்றது. இந்த தேர்தலில் கரூரில் 71.21% வாக்குப்பதிவு நடந்தது.

9. பத்தாவது மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் பதிவான ஏழு லட்சம் வாக்குகளில் 4.75 லட்சம் வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் திருநாவுக்கரசு 2.05 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று இரண்டாமிடம் பிடித்தார். பாமக 4,388 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்தது.

10. மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நட்ராயன் கரூரில் 56.12% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் தம்பிதுரை 2.41 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். மதிமுக சார்பில் போட்டியில் டி.பி.மூர்த்தி 8.38% வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளருக்கு ஒரு சதவீத ஓட்டு கூட கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் 71.20% வாக்குகள் பதிவாகியிருந்தது.

11. 1998-ல் நடந்த மக்களவை தேர்தலில் காட்சிகள் மாறின. முந்தைய தேர்தலில் வென்றிருந்த நட்ராயன் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டார். தம்பிதுரை 43,673 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தேர்தலில் 59.84% வாக்குகள் பதிவாகியிருந்தது.

12. 1999-ல் மீண்டும் மக்களவை தேர்தல் நடந்தது. இதில் அதிமுக வேட்பாளர் சின்னசாமி வெறும் மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியை வென்றார். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நட்ராயன் 6.33% வாக்குகள் அதாவது 45 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். இந்த தேர்தலில் 62.94% வாக்குகள் பதிவானது.

13. இரண்டு முறை கரூர் மக்களவை தொகுதியில் தோல்வியைத் தழுவியிருந்த கே.சி.பழனிசாமி தனது 69-வது வயதில் 2004 மக்களவை தேர்தலில் கரூரில் வென்றார். இம்முறை அதிமுக வேட்பாளரை சுமார் 1.91 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

14. 2009 மக்களவை தேர்தலில் .சுமார் 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட தம்பிதுரை வென்றார். தேமுதிக வேட்பாளர் ராமநாதன் 51 ஆயிரம் வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

15. கடந்த 2014 மக்களவை தேர்தலிலும் தம்பிதுரை வென்றார். இம்முறை சுமார் 1.95 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சின்னசாமியை வீழ்த்தினார். தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணன் 76 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் நின்ற ஜோதிமணிக்கு 30 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. 13,733 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.

கீழ்கண்ட தொகுதிகளின் வரலாறையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :