பெண் ராணுவ அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை - ராணுவ உயரதிகாரியிடம் விசாரணை

பெண் ராணுவ அதிகாரிக்கு வன்கொடுமை - மேஜரிடம் விசாரணை படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் - "பெண் ராணுவ அதிகாரிக்கு வன்கொடுமை - மேஜரிடம் விசாரணை"

பெங்களூருவில் பெண் ராணுவ அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேஜர் பதவியில் இருக்கும் அதிகாரியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"பெங்களூருவில் உள்ள ஏ.எஸ்.சி மையத்தில் கடந்த மாதம் 4-ம் தேதி ராணுவ அதிகாரி ஒருவர் ஓய்வு பெற்றதையொட்டி இரவு விருந்து நிகழ்ச்சி நடந்தது.

அந்த விருந்து முடிந்த பிறகு, மேஜர் அமித் சவுத்ரி என்பவர் தன்னுடன் பணியாற்றும் 29 வயதான பெண் அதிகாரியை வீட்டில் விடுவதற்காக தனது காரில் அழைத்து சென்றுள்ளார்.

மது போதையில் இருந்த அவர், பழைய விமான நிலைய சாலையில் காரை நிறுத்தி, பெண் ராணுவ அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, அதற்கு மறுநாள் இந்த சம்பவம் குறித்து தமது ராணுவ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ராணுவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, இச்சம்பவம் தொடர்பாக விவேக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அமித் சவுத்ரிக்கு மார்ச் 23-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் அவரை கைது செய்யவில்லை" பெங்களூரு மாநகர கிழக்கு உதவி ஆணையர் ராகுல் குமார் கூறியுள்ளதாக அந்த செய்தி விவரிக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - "தேர்தல் நடத்தை விதிகளில் மாற்றம்"

படத்தின் காப்புரிமை AFP

தேர்தல் நடத்தை விதிமுறைகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் திருத்தும் கொண்டுவந்துள்ளது. இதன்படி வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேரங்களில் தேர்தல் அறிக்கையை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்கு முந்தைய கடைசி 72 மணிநேரங்களில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதைத் தடை செய்வது குறித்து கருத்து கேட்டு சமாஜ்வாதி கட்சி, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனா, லோக் ஜனசக்தி கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

இந்த மாற்றத்துக்கு காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்த நாளன்று பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. எனினும், விதிகள் எதுவும் இல்லாததால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எதையும் அப்போது எடுக்க இயலவில்லை.

தினத்தந்தி: பொள்ளாச்சி இளம்பெண்ணின் பெயரை வெளியிட்ட போலீஸ் மீது நடவடிக்கை?

படத்தின் காப்புரிமை Twitter
Image caption கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்

பாலியல் புகார் கூறிய மாணவியின் பெயரை வெளியிட்டதால் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி பாலியல் வன்முறை விவகாரம் தொடர்பாக திருச்சியை சேர்ந்த இளமுகில் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் 'பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்ப்பட்ட சம்பவத்தில் புகார் அளித்த கல்லூரி மாணவி தொடர்பான விவரங்களை மாவட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் முன்பு விசாணைக்கு வந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'அதிகாரியின் இந்த செயல்பாட்டால் சம்பந்தப்பட்ட பெண்ணின் மன நிலை பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே அவரை வெளி மாவட்டத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்று மன நல ஆலோசனை வழங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அவருக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சத்தை வழங்க வேண்டும். அவருடைய பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாக காரணமாக இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி இருந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அவர் அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்காதபட்சத்தில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இட மாற்றம் செய்யப்படுவார் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டது.

தினமணி: பத்ம விருதுகள் வழங்கும் விழா

படத்தின் காப்புரிமை Facebook

தமிழகத்தைச் சேர்ந்த பெண் விவசாயி சின்னப்பிள்ளை, திருநங்கை நடன கலைஞர் நர்த்தகி நடராஜ், விஞ்ஞானி நம்பி நாராயணன், மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி உள்ளிட்ட 54 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை வழங்கியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 112 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதில் 47 பேருக்கான விருதுகள் கடந்த 11-ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில், எஞ்சிய நபர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஹர்ஷ் வர்தன், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், விஜய் கோயல், பாஜக மூத்த தலைவர் அத்வானி மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்