கடன் தள்ளுபடி விவசாயிகள் பிரச்சனையைத் தீர்க்குமா? #RealityCheck

விவசாயி படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் பல விவசாயிகள் கடன் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமா?

வரும் ஏப்ரலில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வி அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் இடையில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

கூற்று: விவசாயிகளின் கடனை அவ்வப்போது தள்ளுபடி செய்வது, தீர்வு இல்லை என்று தெரிவித்த பிரதமர் மோதி, அதனை தேர்தல் நேரத்தில் விநியோகிக்கப்படும் மிட்டாய் என்று குறிப்பிட்டார்.

தீர்ப்பு: கடந்த காலத்தில் அமல்படுத்தப்பட்ட கடன் திட்டங்கள், விவசாயிகளின் வேரூன்றிய பிரச்சனைகளை தீர்க்கவில்லை என்பதே உண்மை.

மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கு முன்பு கடன் தள்ளுபடி செய்திருக்கின்றன. 2014ஆம் ஆண்டு முதல் 2018 வரை காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியால் 11 மாநிலங்களில் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. ஏனெனில், பல தொகுதிகளில் விவசாயிகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

இந்த திட்டங்களுக்கான செலவு 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாகும்.

விவசாயிகள் என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்?

இந்தியாவின் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத்துறையில் பணியாற்றுகிறார்கள்.

சில சமயங்களில் விதைகள், உபகரணங்கள் மற்றும் பிற தேவையான பொருட்களை வாங்க விவசாயிகள் அதிகளவில் கடன் வாங்கி, அதனை அடைக்க போராடுகிறார்கள்.

பருவ மழை பொய்த்து போகும் பட்சத்தில், சரியாக அறுவடை செய்ய முடியாமல் போக, கடனை திரும்ப கட்ட முடியாமல், சில விவசாயிகள் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள்.

சமீபத்திய காலத்தில் இந்திய கிராமப்புறங்களில் கடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கடந்த ஆண்டின் ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக விவசாயக் குடும்பங்கள் வாங்கும் கடன்கள்.

ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், ஊதியத் தொகை அதிகரிப்பு, பயிர் விலையில் வீழ்ச்சி உள்ளிட்ட சில காரணங்களால் விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளது.

கடன் தள்ளுபடி செய்வது பிரச்சனையை தீர்க்குமா?

கடன் நிவாரண திட்டங்கள், துயரத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு உதவுமா என்று தெளிவாக தெரியவில்லை.

ஆனால், கடன் மற்றும் விவசாயிகள் தற்கொலைக்கும் உள்ள தொடர்பு சற்று சிக்கலானதே. பணக்கார மாநிலங்களில்தான் பெரும்பாலும் அதிக தற்கொலைகள் நிகழ்கின்றன. அப்படிப்பட்ட மாநிலங்களில் ஏழை விவசாயிகளைவிட, சற்று சிறந்த நிலையில் இருக்கும் விவசாயிகள்தான் கடன் இருப்பதால் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்கிறது இந்த புளூம்பெர்க் கட்டுரை.

மகாராஷ்டிராவில் 2014-18 ஆண்டுகளில் நிகழ்ந்த 14,034 தற்கொலைகளில் 30 சதவீதத்திற்கும் மேலானவை, 2017ஆம் ஆண்டு, கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பின்னர்தான் நிகழ்ந்திருக்கின்றன என்பதைக் காட்டுகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒரு பதில்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும், கடன் நிவாரணத் திட்டங்களின் எந்த அளவிற்கு உதவுகின்றன என்பது குறித்து வேறு கேள்விகளும் உள்ளன.

1990ல் இந்தியா முழுவதும் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பின்னர், நிதி நிறுவனங்களின் கடனை திரும்பப் பெறும் விகிதம் குறைந்துவிட்டதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.

எதிர்காலத்திலும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவானதால், கடன் தொகையை கட்டுவதற்கு ஊக்கம் இர

ஒரு மாநிலத்தில் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட ஓராண்டிற்கு பின், கடனை திரும்பப் பெறும் விகிதம் அங்கு 75 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக குறைந்துவிட்டது.

2009ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஓராண்டு முன்பு 2008ஆம் ஆண்டு, 52,516 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாயக்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

ஆனால், இது தொடர்பாக தாங்கள் ஆராய்ந்த பயனாளர்களில் 22 சதவீதத்துக்கும் அதிகமானோர் விஷயத்தில் கடன் தள்ளுபடியை செயல்படுத்திய விதத்தில் தவறுகள் இருப்பதாக அரசாங்க தணிக்கையாளர்கள் கண்டறிந்தனர்.

தகுதியற்ற விவசாயிகள் சிலர் பயன் பெற்றதும், தகுதியான சில விவசாயிகள் பயன் பெறத் தவறியதும் இதில் அடங்கும்.

வங்கிகளில் அல்லது அதிகாரபூர்வமான சில நிதி நிறுவனங்களில் வாங்கியுள்ள கடன் தொகையை மட்டும்தான் இந்த நிவாரணத்திட்டங்கள் அடைக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் சிலரிடம் இருந்துதான் பெரும்பாலான விவசாயிகள் கடன் வாங்குகிறார்கள்.

கிராமப்புற பொருளாதாரத்துக்கு உதவுவது

அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் விவசாய பொருளாதாரத்துக்கு எப்படி சிறப்பாக உதவ வேண்டும் என்பதை மீண்டும் சிந்திக்க வேண்டும் என்றும் விவசாயிகள் அமைப்புகளும், அவர்களுக்காக பேசுவோரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆனால், அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்தால் அதற்காக பெரும் தொகையை செலவழிக்க வேண்டிவரும்.

அப்படி நாடு முழுவதும் உள்ள விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றால், அதற்கு மூன்று லட்ச கோடி ரூபாய் வரை ஆகும் என முன்னாள் விவசாயத்துறை செயலாளர் சிரஜ் ஹுசைன் மதிப்பிடுகிறார்.

"பிற நலத்திட்டங்களை கைவிட்டால்தான் இந்தத் தொகையை ஈடுகட்ட முடியும்" என்றும் பிபிசியிடம் பேசிய அவர் தெரிவித்தார்.

தற்போது வேறு சில யோசனைகள் செயல்படுத்தப்படுகின்றன.

தெலங்கானா மாநில அரசால் தொடங்கப்பட்ட விவசாயத்திட்டத்தினை வல்லுநர்கள் பலர் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு அறுவடைக்காலத்திலும், ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிக்கு 4000 ரூபாய் பணம் கட்டாயம் வழங்கப்படும் என்பதே இத்திட்டம்.

இந்தியாவில் இரண்டு முக்கிய போகங்களில் சாகுபடி நடக்கும் நிலையில், ஆண்டுக்கு இரண்டு முறை இத்தொகையை விவசாயிகள் பெறுவார்கள்.

ஒடிஷா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் உள்ளன.

கடந்த பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு உதவ ஆண்டுக்கு 6.000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கோடிக்கணக்கான விவசாயிகள் முதல் தவணை உதவித் தொகையை தற்போது பெற்றுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :