திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் இல்லை மற்றும் பிற செய்திகள்

ஸ்டாலின் எடப்பாடி படத்தின் காப்புரிமை FACEBOOK/ GETTY IMAGES

மக்களவை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியானது. முன்னதாக திமுக வேட்பாளர் பட்டியலும் வெளியானது. இரண்டு கட்சிகளின் வேட்பாளர் பட்டியலிலும் முஸ்லிம்கள் யாரும் இல்லை.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் ஏதும் இடம்பெறாத நிலையில், முஸ்லிம்கள் யாருக்கும் போட்டியிடவும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர்கள்
1. திருவள்ளூர் (தனி) வேணுகோபால்
2. காஞ்சிபுரம் (தனி) மரகதம் குமரவேல்
3. கிருஷ்ணகிரி கே.பி.முனுசாமி
4. திருவண்ணாமலை எஸ்.எஸ். அக்ரி கிருஷ்ணமூர்த்தி
5. ஆரணி செஞ்சி வெ.ஏழுமலை
6. சேலம் கே.ஆர்.எஸ்.சரவணன்
7. நாமக்கல் பி.காளியப்பன்
8. ஈரோடு வெங்கு ஜி.மணிமாறன்
9. திருப்பூர் எம்.எஸ்.எம். ஆனந்தன்
10. நீலகிரி(தனி) எம். தியாகராஜன்
11. பொள்ளாச்சி சி. மகேந்திரன்
12. கரூர் மு. தம்பிதுரை
13. பெரம்பலூர் என்.ஆர். சிவபதி
14. சிதம்பரம் (தனி) பொ. சந்திரசேகர்
15. மயிலாடுதுறை எஸ்.ஆசைமணி
16. நாகப்பட்டினம்(தனி) தாழை ம.சரவணன்
17. மதுரை வி.வி.ஆர். ராஜ சத்யன்
18. தேனி ப.ரவீந்திரநாத்குமார்
19. சென்னை (தெற்கு) ஜெ.ஜெயவர்தன்
20. திருநெல்வேலி பி.ஹெச்.மனோஜ் பாண்டியன்

அதிமுகவில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் பி.எச். மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி. ராஜன் செல்லப்பாவின் மகன் வி.வி.ஆர். ராஜ் சத்யன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகிறார். 2015ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதி அதிமுக வேட்பாளர்கள்
1. பூந்தமல்லி (தனி) ஜி.வைத்தியநாதன்
2. பெரம்பூர் ஆர்.எஸ்.ராஜேஷ்
3. திருப்போரூர் எஸ்.ஆறுமுகம்
4. சோளிங்கர் ஜி.சம்பத்
5. குடியாத்தம் (தனி) கஸ்பா ஆர்.மூர்த்தி
6. ஆம்பூர் ஜெ. ஜோதிராமலிங்கராஜா
7. ஓசூர் எஸ்.ஜோதி
8. பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி
9. அரூர் (தனி) வி.சம்பத்தகுமார்
10. நிலக்கோட்டை (தனி) எஸ். தேன்மொழி
11. திருவாரூர் ஆர்.ஜீவானந்தம்
12. தஞ்சாவூர் காந்தி
13. மானாமதுரை (தனி) எஸ்.நாகராஜன்
14. ஆண்டிபட்டி லோகிராஜன்
15. பெரியகுளம் முருகன்
16. சாத்தூர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன்
17. பரமக்குடி(தனி) சதன் பிரபாகர்
18. விளாதிக்குளம் சின்னப்பன்

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என அறிய - மக்களவை தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது திமுக

இந்தியாவின் முதல் ஐஐடி பட்டதாரி முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்

மனோகர் பாரிக்கரின் இறப்பு கோவாவின் சமூக அரசியல் சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

இந்தியாவின் முதல் ஐஐடி பட்டதாரி முதலமைச்சர் பாரிக்கர். கோவாவின் ஆட்சி நிர்வாகத்தில் ஒரு அழிக்க முடியாத இடத்தை உருவாக்கியவர்.

நாட்டின் பிற பகுதிகளில் வலுவான இந்துத்துவா கொள்கையை பாஜக கடைபிடிக்கும் போது, அக்கட்சியை சேர்ந்த மனோகர் பாரிக்கர், மிதமான ஒரு கொள்கையை கடைபிடித்து கோவாவின் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து சென்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மனோகர் பாரிக்கர்

அதிகமான மதச்சார்பற்ற கொள்கைகளை கடைபிடிக்கும் ஒரு மாநிலத்தில், அவர் அரசியல் செய்ய வேண்டியிருந்தது. அங்கு அவர் கொண்ட கொள்கையைக் காட்டிலும் பிராந்தியத்திற்கு ஏற்றார் போல் அவரை மாற்றிக் கொள்ளும் தேவையும் இருந்தது.

ஆனால் உத்தர பிரதேசம் போன்ற மாநிலத்தில் அவர் அரசியல் செய்ய வேண்டும் என்றால் இம்மாதிரியான தாராளவாத கொள்கையை கடைபிடிப்பாரா என்பது நமக்கு தெரியாது.

அதிகாரம் அனைவரையும் மாற்றும். மனோகர் பாரிக்கரையும் அது மாற்றியது.

மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து பிரமோத் ஆச்சார்யா எழுதிய கட்டுரையை விரிவாக படிக்க - கோவா மக்களுக்கு நம்பிக்கையை கொடுத்து தகர்த்த மனோகர் பாரிக்கர்

இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த இடம் அழிந்து வருவதாக மக்கள் கவலை

இலங்கையின் கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சங்கமன் கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஏராளமான புராதன சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில சின்னங்கள் கிறிஸ்துவுக்கு முன்னர் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், சில சின்னங்கள் கிறிஸ்துவுக்குப் பின்னர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும் அறியப்படுகின்றன.

வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வேந்தருமான எஸ். பத்தமநாதன், இந்த தொல்லியல் சின்னங்கள் மேற்குறிப்பிட்ட காலங்களுக்குரியவைதான் என்பதை, பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.

விரிவாக படிக்க - இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம்; அழிந்து வருவதாக மக்கள் கவலை

கிராமத்து இளைஞரின் முயற்சியால் மீண்டும் உயிர்பெறும் நகர்ப்புற ஏரிகள்

பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி என்பது, உலகிலுள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்திய முகவரி போன்றது .

கான்கீரிட் கட்டடங்களுக்கு இடையில் சுமார் ஐந்து கி.மீ தொலைவில் "காய்சனஹள்ளி " என்ற கிராமம் உள்ளது.

அங்கு சுமார் 36 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஏரி நீர்வாழ் உயிரினங்கள், காடு போன்று மரங்கள், பறவை இனங்கள் என கண் குளிர காட்சி தரும் பகுதியாக உள்ளது..

இந்த காட்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் காண முடிகிறது. இதற்கு முன்பு 36 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் மட்டுமே தண்ணீர் இருந்தது.

மற்ற நிலபரப்பில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடவும், ஆக்கிரமிப்பு செய்து சிலர் விவசாயம் செய்யும் பயன்படுத்தி வந்தனர்.

இன்று இந்த அளவிற்கு மாற்றம் பெறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர், ஆனந்த் மல்லிகாவத் என்ற இளைஞர். இந்த காய்சனஹள்ளி ஏரியின் மாற்றம், தற்போது அழியும் நிலையில் உள்ள மற்ற ஏரிகளையும் புதுப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

"நான் கிராமத்தில் பிறந்தவன். என்னால் ஏரிகளை புதுபிக்க முடியும்போது எல்லோராலும் முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை," என்கிறார் ஆனந்த்.

விரிவாக படிக்க - கிராமத்து இளைஞரின் முயற்சியால் மீண்டும் உயிர்பெறும் நகர்ப்புற ஏரிகள்

கன்னியாகுமரி - தேசிய கட்சிகளின் கோட்டையா?

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு நிலத்திணைகளை கொண்டது கன்னியாகுமரி மாவட்டம்.

இயற்கை வளம் கொழிக்கும் இதன் பெயரிலான மக்களவை தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.

ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இது திகழ்கிறது.

இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலமும், வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தமிழ் நாட்டோடு இணைந்தது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைந்து கன்னியாகுமரி மாவட்டம் உதயமானது.

படத்தின் காப்புரிமை Facebook

951ம் ஆண்டு தொடங்கி இருந்து வந்த நாகர்கோவில் மக்களவை தொகுதி 2009ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக கன்னியாகுமரி மக்களவை தொகுதி என பெயர் மாற்றம் பெற்றது.

நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியிருந்தன.

ஆனால், கன்னியாகுமரி தொகுதியாக பெயர் மாற்றம் பெற்றபோது, திருவட்டார் சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்டது.

நாகர்கோவில் தொகுதியில், 1951 முதல் 1991-ம் ஆண்டு வரை நடந்த 10 தேர்தல்களிலுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியாக பெயர் மாற்றம் பெற்ற பின்னர், திராவிட முன்னேற்ற கழகம் ஒரு முறையும், பாரதிய ஜனதா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் வரலாறைத் தெரிந்து கொள்ள - கன்னியாகுமரி மக்களவை தொகுதி; தேசிய கட்சிகளின் கோட்டையா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்