ஒடிசாவில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் - 2 பேர் பலி

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தீ வைக்கப்பட்ட கார் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தீ வைக்கப்பட்ட கார்

ஒடிசாவில் வேதாந்தாவின் அலுமினிய சுத்தகரிப்பு தொழிற்சாலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் ஒரு காவலரும், போராட்டக்காரர் ஒருவரும் கொல்லப்பட்டனர் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்டெர்லைட்டில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் 13 பேர் இறந்த சம்பவம் நடந்த பத்து மாதங்களுக்குள் ஒடிசாவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசாவின் மூத்த காவல்துறை அதிகாரி குப்தேஸ்வர் பாய் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் இருவர் இறந்ததை உறுதிப்படுத்தியிருக்கிறார். ''இறந்தவர்களில் ஒருவர் ஒடிஸா தொழிற்சாலைகள் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர் மற்றொருவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்'' என்கிறார் குப்தேஸ்வர்.

''பாதுகாப்பு படை எங்களை தடிகளை கொண்டு கடுமையாக தாக்கியது. '' என போராட்டத்தில் ஈடுபட்ட மஹேஸ்வர் பட்டி ராய்ட்டர்ஸ் முகமையிடம் கூறியிருக்கிறார். வேதாந்தாவிடம் நிலத்தை ஒப்படைத்துவிட்டு அந்நிறுவனத்தில் வேலை வேண்டி மூன்று சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும் மக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் என பட்டி கூறியுள்ளார்.

ஆனால் வேதாந்தா நிறுவனம் அந்த தொழிற்சாலையில் பணியாற்றும் 3000 தொழிலாளர்களில் 85 சதவீதத்தினர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்கிறது.

''ஆண்டுக்கு 1.9 மில்லியன் டன் அளவுக்கு சுத்திகரிக்கப்படும் அலுமினிய தொழிற்சாலைக்கு தேவையான பாக்சைட் கொண்டுவரப்படும் ரெயில்வே தடங்களை போராட்டக்காரர்கள் மறித்தனர். மேலும் தொழிற்சாலையின் முன் வாயில் மற்றும் பிற பகுதிகளுக்கு தீ வைத்தனர்'' என வேதாந்தா அலுமினிய வணிகத்தின் தலைமை நிர்வாகி அஜய் தீக்ஷித் ராய்ட்டர்ஸிடம் கூறியிருக்கிறார்.

ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆட்குறைப்பில் ஒரு பகுதியாக ஒரு ஊழியரை நீக்கியதாக கூறப்பட்டதையடுத்து நூற்றுக்கும் அதிகமானோர் போராட்டம் நடத்தியதாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறுகிறார். ஆனால் ''அந்த ஊழியர் வேலையை விட்டு நீக்கப்படவில்லை. ஒரு புகார் தொடர்பான விசாரணையையடுத்து அந்நபர் ராஜினாமா செய்துவிட்டார்'' என தீட்சித் தெரிவிக்கிறார் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி

''போராட்டத்தில் இறந்தவரும் இந்த தொழிற்சாலையில் வேலை செய்தவர்தான்'' எனக்கூறுகிறார் தீட்சித்.

ஒடிசா மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒடிசா பாதுகாப்பு படை இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்ககள் தங்களை நோக்கி கற்களை எறிந்ததாக கூறியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்