வடசென்னை மக்களவை தொகுதி: துறைமுகம், தொழிற்சாலைகள் மற்றும் மாறாத வாழ்க்கைதரம்

வட சென்னை படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/Getty Images

(வரவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் பற்றிய பிபிசி தமிழின் பார்வை)

திருவொற்றியூர், டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க நகர் (தனி), ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை கொண்டது வட சென்னை மக்களவை தொகுதி.

2008ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுசீரமைப்பிற்கு முன் வட சென்னை மக்களவை தொகுதியில், ராயபுரம் துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.

கூவம் ஆற்றின் வடக்கு பகுதியில் இருக்கும் சென்னையின் பகுதி வட சென்னை என்று அழைக்கப்படுகிறது. சென்னையின் பழமையான பகுதியாக வட சென்னை கருதப்படுகிறது. இங்குதான் சென்னை தொடங்கியது என்றும் சொல்லலாம்.

சென்னை துறைமுகம் மற்றும் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை ஆகிய முக்கிய இரண்டு அம்சங்களை கொண்டது வட சென்னை தொகுதி.

என்ன பிரச்சனை?

சென்னை துறைமுக விரிவாகத்துக்காக வட சென்னையின் முக்கிய பகுதியான காசிமேட்டில் இருக்கும் மீனவர்கள் இடம் பெயர கோரப்படுவது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக அங்குள்ள மீனவ மக்கள் தெரிவிக்கின்றனர்.

வட சென்னைக்குள் அடங்கிய திருவொற்றியூரிலிலும் அதன் ஒட்டிய பகுதிகளிலும் பல தொழிற்சாலைகள் இருப்பதால் இங்கு இருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், அதனுடன் காற்று மாசும் வந்தடைகிறது.

மிக குறுகிய சாலைகளையும், மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதியாகவும் உள்ளது வட சென்னை. இருப்பினும் மத்திய சென்னை தென் சென்னை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை இந்த பகுதிகளில் நாம் காணமுடியாது.

மேலும் இங்கு குடிநீர் பஞ்சம் ஒவ்வொரு கோடையும் தவறாமல் வந்துவிடும் அதுவும் பருவ மழை பொய்த்துப் போனால் தண்ணீர் பஞ்சம் உறுதியாக ஏற்படும். அது இந்த பகுதி மக்களின் பெரும் பிரச்சனையாக உள்ளது.

வட சென்னையை பொறுத்த வரையில் உழைக்கும் வர்க்கத்து மக்களே அதிகம் வசிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/Getty Images

வட சென்னை தொகுதியில் திமுக 10 முறை வெற்றிபெற்றுள்ளது. அதிமுக ஒரே ஒரு முறை மட்டுமே இங்கு வெற்றிபெற்றுள்ளது.

1967 -71ஆம் ஆண்டிலிருந்து 1984 -89ஆம் ஆண்டு வரையும், 1996-98ஆம் ஆண்டு முதல் 2009-2014 நடைபெற்ற தேர்தலிலும் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை பத்துமுறை திமுகவை சேர்ந்தவர்கள் அந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வட சென்னையை பொறுத்தவரை திமுகவின் வலுவான தொகுதி என்று கருத்தப்பட்ட நேரத்தில் அதிமுகவின் வெங்கடேஷ் பாபு 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிப் பெற்றார்.

ஜெயலலிதா தலைமையிலான அரசு, திமுகவின் வலுவான தொகுதியையும் அதிமுகவுக்கு சாதகமாக மாற்றியது.

தேர்தல் ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி இரண்டாம் இடம் வந்தவர் கட்சி
1957 அந்தோணி பிள்ளை சுயேட்சை டி.செங்கல்வராயின் இந்திய தேசிய காங்கிரஸ்
1962 பி. சீனிவாசன் இந்திய தேசிய காங்கிரஸ் அப்துஸ் சமத் முஸ்லிம் லீக்
1967 நாஞ்சில் கி. மனோகரன் திமுக எஸ்.சி.சி.ஏ.பிள்ளை இந்திய தேசிய காங்கிரஸ்
1971 நாஞ்சில் கி. மனோகரன் திமுக எஸ்.ஜி.விநாயகமூர்த்தி ஸ்தாபன காங்கிரஸ்
1977 ஏ. வி. பி. ஆசைத்தம்பி திமுக கே.மனோகரன் அதிமுக
1980 ஜி. லட்சுமணன் திமுக எம்.எஸ்.அப்துல் காதர் அதிமுக
1984 என்.வி.என். சோமு திமுக ஜி. லட்சுமணன் இந்திய தேசிய காங்கிரஸ்
1989 தா. பாண்டியன் இந்திய தேசிய காங்கிரஸ் என்.வி.என். சோமு திமுக
1991 தா. பாண்டியன் இந்திய தேசிய காங்கிரஸ் ஆலடி அருணா திமுக
1996 என்.வி.என்.சோமு திமுக தா. பாண்டியன் இந்திய தேசிய காங்கிரஸ்
1998 செ. குப்புசாமி திமுக ஆர்.டி.சபாபதி மோகன் மதிமுக
1999 செ. குப்புசாமி திமுக ஏ.செளந்தர ராஜன் சிபிஎம்
2004 செ. குப்புசாமி திமுக எம்.என்.நம்பியார் பாஜக
2009 டி.கே.எசு. இளங்கோவன் திமுக தா. பாண்டியன் சிபிஐ
2014 வெங்கடேஷ் பாபு அதிமுக ஆர்.கிரிராஜன் திமுக

தொடர்பான செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :