கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி: பொன்முடி மகனா? விஜயகாந்த் மைத்துனரா? வெற்றி யாருக்கு?

பொன்முடி மகனா? விஜயகாந்த் மைத்துனரா?

(வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை ஒட்டி, தமிழக மக்களவைத் தொகுதிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் அடிப்படைத் தகவல்கள் அடங்கிய கட்டுரைகளை வெளியிட்டுவருகிறது பிபிசி தமிழ். அதன் ஒரு பகுதியாக இன்று கள்ளக்குறிச்சி)

டதமிழகத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கள்ளக்குறிச்சி நகரம்.

விவசாயம், குச்சி வள்ளிக் கிழங்கில் மாவு தயாரித்து அதன் மூலம் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் சேகோ தொழிற்சாலைகள், சுற்றுலாத் தலமான ஏற்காடு, பழங்குடியினர் வாழும் கல்வராயன் மலை என கலவையான சமூக, பொருளாதார, நிலவியல் முகம் கொண்டது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி.

அதைப் போலவே தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றப் பிரிவுகளில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய மூன்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளன. ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய மூன்று சட்டமன்றுப் பிரிவுகளும் சேலம் மாவட்டத்தில் உள்ளன.

நில அமைப்பில், காடு, மலை, ஆறு என்று மாறுபட்ட தன்மைகளை தன்னகத்தில் கொண்டுள்ளது இத்தொகுதி. தலித்துகள், வன்னியர்கள், பழங்குடியினர், உடையார்கள், கார்காத்த வேளாளர்கள், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் என்று பல சாதிப்பிரிவினர் இத்தொகுதியின் வெவ்வேறு பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இது தவிர முஸ்லிம்கள், கிறித்துவர்கள் ஆகிய மதச் சிறுபான்மையினரும் கணிசமாக உண்டு.

ஆக, நிலம், மக்கள், தொழில், நிர்வாக அமைப்பு என்று எல்லா வகையிலும் நிலவும் பன்முகத் தன்மையே இந்தத் தொகுதியின் அடையாளம்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி
தேர்தல் ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி இரண்டாமிடம் பெற்றவர் கட்சி
1967 எம்.தெய்வீகன் திமுக கே.பார்த்தசாரதி இந்திய தேசியக் காங்கிரஸ்
1971 எம்.தெய்வீகன் திமுக கே.வீராசாமி ஸ்தாபனக் காங்கிரஸ்
2009 ஆதி.சங்கர் திமுக கே.தனராஜு பாட்டாளி மக்கள் கட்சி
2014 கே.காமராஜ் அதிமுக ஆர்.மணிமாறன் திமுக

மிகப் பெரியதாக பரந்து விரிந்திருக்கும் விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி தலைமையில் மாவட்டத்தை உருவாக்கவேண்டும் என்ற நீண்ட நெடுநாளையை கோரிக்கையை ஒரு வழியாக ஏற்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிமுக அரசு. ஆனால், இந்த உத்தரவு இன்னும் செயல்வடிவம் பெறவில்லை.

1967, 1971 ஆகிய இரண்டு தேர்தல்களில் முன்பு கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி இடம் பெற்றிருந்தது. அந்த இரண்டு முறையும் திமுக-வை சேர்ந்த எம்.தெய்வீகன் வெற்றி பெற்றார். பிறகு இந்த தொகுதியில் தற்போது இடம் பெற்றுள்ள சட்டமன்றப் பிரிவுகள் கடலூர், ராசிபுரம் மக்களவைத் தொகுதிகளில் நீண்டகாலம் இடம் பெற்றிருந்தன.

தொகுதி மறுவரையறையில் மீண்டும் 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் திருக்கோயிலூரைச் சேர்ந்தவரான திமுக-வின் ஆதி.சங்கர் பாமக-வின் கே.தனராஜுவை தோற்கடித்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக-வின் கே.காமராஜ் வெற்றி பெற்றார். திமுக-வின் ஆர். மணிமாறன் தோற்றார்.

ஆக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் இதுவரை நடந்த நான்கு தேர்தல்களில் மூன்று முறை திமுக-வும், ஒரு முறை அதிமுக-வும் வெற்றி பெற்றுள்ளன.

வறண்டு கிடக்கும் அணைகள்

கடந்த மூன்றாண்டுகளாக போதிய மழை இல்லாததால், கள்ளக்குறிச்சியை ஒட்டி அமைந்துள்ள கோமுகி அணைக் கட்டு, மணிமுத்தாறு அணைக்கட்டு இரண்டும் வறண்டு போயுள்ளன. அத்துடன், இந்த வறட்சியால் குச்சி வள்ளிக்கிழங்கு உற்பத்தியும் பாதிக்கப்பட்டு, அது சேகோ (ஜவ்வரிசி) தொழிற்சாலைகளையும் பாதித்துள்ளது. இத்துடன், ஜி.எஸ்.டி வரியினால் ஏற்பட்ட பாதிப்பும் இணைந்து சேகோ தொழில் நிறுவனங்களை தள்ளாட வைத்துள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption குச்சி வள்ளிக் கிழங்கு

வேளாண்மையிலோ, சோகோ தொழிற்சாலை எனும் வேளாண் சார் தொழிலிலோ போதிய வேலைவாய்ப்பு பெருகாத காரணத்தால் வேளாண் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து பெங்களூருக்கும், கேரளாவுக்கும் கூலி வேலைக்காக சென்றுள்ளனர்.

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பழைய அலகு அங்கிருந்து நெடுந்தொலைவில் தென்பெண்ணை கரையில் உள்ள மூங்கில்துறைப்பட்டில் அமைந்துள்ளது. இது தொகுதிக்கு வெளியே உள்ளது. மற்றோர் அலகு கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயபாளையத்தில் அமைந்துள்ளது.

கரும்பு விவசாயம் ஓரளவு வெற்றிகரமாக நடக்க இது ஒரு காரணம். கல்வராயன் மலையில் கடுக்காய் தொழிற்சாலை அமைப்பதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், அது நடக்கவில்லை.

வேளாண் நெருக்கடிகள், மாவட்ட உருவாக்கம் பற்றிய அறிவிப்பு, சேகோ தொழில் நசிவு ஆகியவை இந்த தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் உள்ளூர் காரணிகளாக இருக்கும்.

அரசியல்

திமுக அணியின் சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் பொன்.கௌதமசிகாமணி போட்டியிடுகிறார். அதிமுக அணியின் சார்பில் விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் போட்டியிடுகிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஏற்காடு படகுத் துறை

இரண்டுபேருமே வாரிசு வேட்பாளர்கள்தான். ஆனால், திமுக-வின் கௌதம சிகாமணிக்கு களம் முற்றிலும் புதிது. இந்த தொகுதிக்கு உட்பட்ட ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஏற்கெனவே இதே தொகுதியில் தேமுதிக போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றுள்ளது. எனவே ஒரு நட்சத்திரப் போட்டியைக் காணத் தயாராக உள்ளது கள்ளக்குறிச்சி தொகுதி.

கள்ளக்குறிச்சிக்கு ரயில் இணைப்பு கோருதல், வேளாண்மை சார்ந்த தொழில்களை மேம்படுத்துவது போன்றவை மக்களின் எதிர்பார்ப்புகளாக இருக்கும்.

இத் தொகுதியில் 15,11,972 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7,50,610 பேர் ஆண்கள், 7,61,191 பேர் பெண்கள், 171 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்