ஆரணி மக்களவைத் தொகுதி: பட்டுப் போன பட்டுப் பொருளாதாரம் தேர்தலைத் தீர்மானிக்குமா?

பட்டு நெசவாளி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பட்டு நெசவாளி - சித்தரிப்புப் படம்

ஆரணி, பட்டுக்குப் பெயர் போன நகரம். அதிகம் பிரபலமாகாத இன்னொரு முகம் இந்தத் தொகுதிக்கு உண்டு. அதுதான் அரிசி உற்பத்தி.

களம்பூரைச் சுற்றி இருக்கும் 300க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் தமிழக நுகர்வுக்கான நயம் அரிசிகளை உற்பத்தி செய்து தமிழகம் முழுவதும் விநியோகிக்கிறது. தமிழகத்துக்கு வெளியேயும் செல்கிறது களம்பூர் அரிசி. இது தவிர தொகுதியின் பெரும்பான்மையான பகுதிகள் விவசாயத்தையும், சிறுவணிகம் சார்ந்து இயங்கும் சிறு நகரங்களையும் கொண்டிருக்கின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆரணி, போளூர், வந்தவாசி, செய்யாறு ஆகிய சட்டமன்றப் பிரிவுகளையும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த செஞ்சி, மயிலம் ஆகிய சட்டமன்றப் பிரிவுகளையும் உள்ளடக்கியிருக்கிறது ஆரணி மக்களவைத் தொகுதி.

சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் மிக அருகில் அமைந்துள்ள செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் ஷூ தொழிற்சாலை உள்ளிட்ட பெருந்தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன.

10-15 ஆண்டுகள் முன்புவரை முழுவதும் வளமான வேளாண் நிலங்களையும், நல்ல மழைப் பொழிவையும் பெற்று, நெல் விளைவிக்கும் பிரதானமான வேளாண் பகுதியாக இருந்த செய்யாறு திடீர் முக மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. தொழிற்பேட்டைக்காக பலவந்தமாக நிலத்தை இழந்தவர்களின் புகார்கள் ஒருபுறம். மறுபுறம், பெருந்தொகையான ஆலைத் தொழிலாளர்களைக் கொண்ட பகுதியாக இது உருமாறி வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புப் படம்.

அதே வேளை, ஆரணியின் முகமாகவும், பல்லாயிரம் நெசவாளர்களுக்கு வாழ்வாதாரமாகவும் இருந்து வந்த பட்டு கைத்தறித் தொழில் முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. கடுமையான பட்டு நூல் விலையேற்றம், வெள்ளி ஜரிகை விலேயேற்றம் ஆகியவை பட்டு சேலை நெசவுத் தொழிலில் பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

சேலை விலையைக் கட்டுப்படுத்துவதற்காக, வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை கைத்தறி நெசவாளர்களிடம் தராமல் விசைத்தறி நெசவாளர்களுக்குத் தரத் தொடங்கினார்கள். தற்போது ஆரணியில் விசைத்தறி பெருகி, கைத்தறி நெசவாளர்கள் நலிந்து கிடக்கிறார்கள்.

கடந்த தேர்தலில் ஆரணியில் பட்டு ஜவுளிப் பூங்கா அமைப்பதாக திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், அது தோற்றுப்போனது. பட்டு ஜவுளிப் பூங்கா கோரிக்கை நீண்ட காலமாக இருந்தாலும், அந்தக் கோரிக்கையை இதுவரை யாரும் நிறைவேற்றித் தரவில்லை.

வந்தவாசி பகுதியில் இருந்த பருத்தி கைத்தறி நெசவுத் தொழில் முடங்கிப் பலகாலமாகிவிட்டது. பெயர்போன வந்தவாசிப் பாய் நெசவுத் தொழிலும் நலிந்து கிடக்கிறது.

செஞ்சிக் கோட்டை

செஞ்சி, புகழ் பெற்ற கோட்டை நகரம். ஆனந்தக் கோன், கிருஷ்ணக் கோன் என்ற இரண்டு தமிழ் மன்னர்களால் மூன்று மலைக் குன்றுகளை இணைத்துக் கட்டப்பட்டு, ராஜா தேஜ்சிங்-கால் புகழ் பெற்ற இந்த பிரம்மாண்டக் கோட்டை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption செஞ்சிக் கோட்டையின் புகழ் பெற்ற கல்யாண மஹால்.

இது ஒரு முக்கியமான சுற்றுலா வாய்ப்பாக இருந்தபோதும், சென்னை-திருவண்ணாமலை சாலையில் அமைந்திருந்தபோதும், பெரிய அளவில் வெளிநாட்டு, வெளி மாநில சுற்றுலாப்பயணிகளைக் கவரவோ, அதன் மூலம் இந்த நகரில் சுற்றுலாப் பொருளாதாரத்தை மேம்படுத்தவோ இதுவரை முயற்சிகள் இல்லை. மயிலம் முருகர் கோயில் யாத்ரீகர்களைக் கவர்கிற ஒரு தலம். ஆனால், இந்த நகரமும் பெரிய அளவில் யாத்ரீகர்களால் பலன்பெற்று வளரவில்லை.

ஆரணி, செஞ்சி, மயிலம், போளூர், வந்தவாசி, செய்யாறு ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதி மையங்களுமே சிறு நகரங்களே. மயிலம் தவிர்த்த மற்ற ஐந்தும் வட்டத் தலைநகரங்களும்கூட. எனினும், இந்த நகரங்களில் திட்டமிட்ட குடிமை, வாழ்வாதார வளர்ச்சிகள் ஏற்படவில்லை.

வேளாண்மை, நெசவு, நெல் உற்பத்தி என்ற மூன்று பாரம்பரியத் தொழில்களிலுமே நெருக்கடி நிலவுகிறது. செய்யாறு பகுதியில் வளரும் நவீனத் தொழில் துறை இந்த வீழ்ச்சியை ஈடுகட்டப் போதுமானதாகவோ, பரவலானதாகவோ இல்லை.

ஆரணி மக்களவைத் தொகுதி
தேர்தல் ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி இரண்டாமிடம் பெற்றவர் கட்சி
2009 எம்.கிருஷ்ணசாமி காங்கிரஸ் என்.சுப்ரமணியன் அதிமுக
2014 சேவல் வி.ஏழுமலை அதிமுக ஆர்.சிவானந்தம் திமுக

ஆனால், இந்தப் பிரச்சனைகள், எந்த அளவுக்கு தேர்தலில் பிரதிபலிக்கும் என்று உறுதியாகத் தெரியவில்லை.

தொகுதி அரசியல்

தொகுதி மறுவரையறையில் உருவாக்கப்பட்டு முதல் முதலாக 2009-ம் ஆண்டு தேர்தலை சந்தித்த ஆரணி தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரான எம்.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றார். அப்போது காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புப் படம்.

2014-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக-வின் சேவல் ஏழுமலை திமுக-வின் ஆர்.சிவானந்தத்தை தோற்கடித்தார். சிவானந்தம், திமுக மாவட்டச் செயலாளராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர்.

இத்தொகுதியில் 14,34,313 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7,09,889 பேர் ஆண்கள், 7,24,352 பேர் பெண்கள், 72 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்