''வேட்பாளர்கள் மட்டன் பிரியாணிக்கு ரூ.200 மட்டுமே செலவு செய்யலாம்'' - இந்திய தேர்தல் ஆணையம்

பிரியாணி படத்தின் காப்புரிமை Boston Globe

இந்திய நாளிதழ்களில் இன்று (வியாழக்கிழமை) வெளியான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்

தினத்தந்தி - வேட்பாளர் செலவின பட்டியலில் பிரியாணி விலை 200 ஆக நிர்ணயம்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தல் செலவினங்களுக்கு அதிகபட்சம் 70 லட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பாக பயன்படுத்தும் பொருள்களின் அதிகபட்ச விலை விவரங்களை தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது . அதன்படி வேட்பாளர்கள் நாளொன்றுக்கு 2 படுக்கை வசதி கொண்ட அறை 5 நட்சத்திர ஓட்டலில் எடுத்தால் வரிகளோடு சேர்ந்து ரூ9300க்குள் இருக்க வேண்டும். மூன்று நட்சத்திர ஓட்டல் ரூ5800(வரிகள் உள்பட) இருக்க வேண்டும்

மட்டன் பிரியாணி உண்டால் விலை ரூ 200க்குள் இருக்க வேண்டும். அதுவே சிக்கன் பிரியாணி எனில் ரூ180 மற்றும் காய்கறி சைவ பிரியாணி எனில் ரூ100க்குள் இருக்க வேண்டும். முழு சாப்பாடுக்கு ரூ100, சிற்றுண்டிக்கு ரூ 100, தேநீர் ரூ10, இளநீர் ரூ40, காய்கறி சாதம் ரூ50 என்ற அடிப்படையில் விலை இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பூசணிக்காய்க்கு ரூ120, சேலைக்கு 200, டீ சர்ட்டுக்கு ரூ175, வாழை மரம் ரூ700, சால்வை ரூ150, பிளீச்சிங் பவுடர் கிலோ ஒன்றுக்கு ரூ90 என தேர்தல் ஆணையம் விலை நிர்ணயம் செய்துள்ளது.

வேட்பாளர்களுடன் செல்லும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 8 மணி நேரத்துக்கு ரூ450, டிரைவருக்கு ரூ 695 வழங்கப்பட வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் என்கிறது தினத்தந்தி நாளிதழின் செய்தி.

தினமணி - ''வாரிசுகள் அரசியலுக்கு வரக்கூடாது என சட்டம் இல்லை''

தேனி மக்களவை தொகுதியில் தமிழகத்தின் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார்.

நேற்று ஓபிஎஸ் தேனியில் தேர்தல் பிரசாரத்தை துவக்கி பேசியபோது ''அவரவர் தகுதியின் அடிப்படையில் மக்கள் ஏற்றுக்கொண்டால் வாரிசுகள் அரசியலுக்கு வருவதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது'' எனக் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ''லோக்சபா தேர்தலில் போட்டியில்லை'' - மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருக்கிறார்.

தாம் போட்டியிடுவதை விட பகுஜன் சமாஜ் - சமாஜவாதி - ராஷ்டிரிய லோக் தளம் கூட்டணியின் வெற்றியே முக்கியம் என தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Hindustan Times

''மக்களவைக்கு நான் செல்லும் தேவை ஏற்பட்டால் கட்சியின் எம்.பி ஒருவரை ராஜிநாமா செய்யச் சொல்லி அந்தத் தொகுதியில் போட்டியிடுவேன். மக்களவை தேர்தலில் நான் ஒருவேளை போட்டியிட்டால் அந்தத் தொகுதிக்கு மட்டும் கூடுதலாக தொண்டர்கள் உழைப்பார்கள். இதனால் மற்ற தொகுதிகள் பாதிப்படையககூடும். உத்தர பிரதேசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் எங்கள் கூட்டணி வெற்றியடைவதே முக்கியம்'' என்கிறார்.

தினகரன் - ''அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு இடம்பெறாறது ஏன்?'' - ராஜேந்திர பாலாஜி விளக்கம்

அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு இடம்பெறாறது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராஜேந்திர பாலாஜி பிரசாரத்தில் பேசும்போது '' தமிழகத்தில் மது அருந்துபவர்கள் உடனடியாக நிறுத்தினால் நரம்பு தளர்ச்சி ஏற்படும். அவர்கள் உயிரை காப்பதற்காக படிப்படியாகத் தான் மதுக்கடைகளை மூட முடிவு செய்துள்ளோம். மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகி உயிர் பலி ஏற்படும்'' என்றார் .

மெகா கூட்டணி உருவாக்க வேண்டுமென்பதற்காகவே அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியையும் விட்டுக்கொடுத்தோம் என அவர் பேசியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்