பொள்ளாச்சி பாலியல் தாக்குதல்: “இருநூறு ஆண்டுகளாக தொடரும் துயரம்” (பகுதி 2)

பொள்ளாச்சி பாலியல் தாக்குதல்: “இருநூறு ஆண்டுகளாக தொடரும் துயரம்” படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புப் படம்

பொள்ளாச்சி பாலியல் தாக்குதல் குறித்து பிபிசி தமிழ் இரண்டு பகுதிகளாக கட்டுரைகளை வெளியிடுகிறது. முதல் பகுதியில் கள நிலவரம், வழக்கு ஆகியவை குறித்து விளக்கி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவத்தின் பின்னால் உள்ள சமூக அரசியல் காரணிகள் குறித்து பேசி இருக்கிறோம்.

பொள்ளாச்சி பாலியல் தாக்குதல் தொடர்பாக பல்வேறு தளங்களில் செயல்படும் செயற்பாட்டாளர்களை சந்தித்து உரையாடினோம். அவர்கள், "இது வெறும் கிரிமினல் வழக்கு அல்ல. இதில் பல்வேறு அடுக்குகள் உள்ளன. அதை புரிந்து கொள்ள தவறினால் எதிர்காலம் சூனியமாகும்" என்றனர்.

'இருநூறு ஆண்டு துயரம்'

"இது ஏழு ஆண்டுகளாக நடக்கும் கொடுமை என்கின்றனர். என் அறிவுக்கு எட்டிய வரையில் இந்த துயரமானது இரு நூறு ஆண்டுகளாக இந்த பகுதியில் நடக்கிறது" என்கிறார் தமிழர் அவையம் என்ற அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் செ. இளங்கோவன்.

பல நூற்றாண்டாக ஒரு சமூகத்திடம் நிலம் இருந்தது. அந்த நிலம் இவர்களை வளமாக்கியது. அந்த வளம் இவர்களிடம் அதிகாரத்தை கொண்டு வந்து சேர்த்தது. அந்த அதிகாரத்தை கொண்டு அனைத்தையும் ஒரு சாரார் சூறையாடினர். குறிப்பாக பெண்களை. அந்த நிலக்கிழார் மனோபாவத்தின் நீட்சிதான் இந்த சம்பவம் என்கிறார் இளங்கோவன்.

மேலும் அவர், பொள்ளாச்சி பகுதியை வெறும் கேளிக்கை நகரமாக மாற்றியதும் இவ்வாறான சம்பவத்திற்கு காரணம் என்கிறார்.

இதையே செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளருமான வழக்கறிஞர் இரா. முருகவேளும் சுட்டிக்காட்டுகிறார்.

'கேளிக்கை விடுதிகளான மலைகள்'

படத்தின் காப்புரிமை Facebook

இரா. முருகவேள், "இந்த பகுதியில் உள்ள மலைகளின் மக்களை அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து அப்புறப்படுத்தி முழுக்க முழுக்க இந்த பகுதியினை கேளிக்கை விடுதியாக மாற்றிவிட்டோம். இதன் காரணமாகதான் இங்கே இவ்வாறான குற்றங்கள் நடக்கிறது." என்கிறார்

"நுகர்வு கலாசாரத்தில் ஊன்றி நின்று வெறும் கேளிக்கைக்காக மட்டும் இந்த பகுதிக்கு வரும் ஒரு சாராருக்கு மேலும் மேலும் கேளிக்கை தேவைப்படுகிறது. அதற்காக பெண்கள் தேவைப்படுகிறார்கள். இந்த தேவைதான் திருநாவுக்கரசு போன்ற நபர்களையும் உருவாக்குகிறது." என்று பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் முருகவேள்.

'பண்டமா பெண்கள்?'

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தை சேர்ந்த கீதா பிரகாஷ், "இந்த பாலியல் தாக்குதல் சம்பவம் வெளியே வந்தபின் இந்த பகுதியில் மட்டுமே மூன்று திருமணங்கள் நின்று இருக்கிறது. மேலும், பொள்ளாச்சி பெண்களை சித்தரித்து மிக மோசமான மீம்ஸுகள் பகிரப்படுகின்றன. இதனை எப்படி புரிந்து கொள்வது? பெண்கள் வெறும் நுகர வேண்டிய பண்டம் எனும் பார்வைதானே இதற்கு காரணம். இந்த பார்வையை மாற்றாமல் எதனையும் சரி செய்ய முடியாது. அந்த மாற்றம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நிகழ வேண்டும்" என்கிறார்.

எழுத்தாளர் சரவண சந்திரனும் திருமண விஷயத்தை சுட்டிக்காட்டியே தனது உரையாடலை தொடங்குகிறார்.

'யாருக்கு மணம் முடிக்க விரும்பி இருப்போம்?'

"இந்த பசங்க இவ்வாறான பிரச்சனையில் சிக்கவில்லை என்றால், இவர்களின் இந்த முகம் வெளியே தெரியவில்லை என்றால், இந்த சமூகம் இவர்களுக்குதானே தங்கள் வீட்டு பிள்ளைகளை மணம் முடித்து கொடுக்க முந்தி அடித்து இருக்கும்?" என்கிறார் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் சரவணன் சந்திரன்.

படத்தின் காப்புரிமை facebook/saravanan.chandran.77

அவர், "நான் குறிப்பிட விரும்புவது இவர்களின் பொருளாதார வளத்தை. எப்படி பொருளாதார செழிப்பு வந்தது என எதையும் யோசிக்காமல், சொந்த வீடு இருக்கிறது, கார் இருக்கிறது என இவர்களுக்குதானே பெண் கொடுக்க அனைவரும் முந்தி அடித்திருப்பார்கள்." என்கிறார்.

"நான் யாரையும் குற்றஞ்சாட்டுவதற்காக இதனை சொல்லவில்லை. சமூக எதார்த்தத்தை சொல்கிறேன். எல்லாவற்றையும், எல்லோரையும் பொருளாதார வசதி கொண்டே மதிப்பிட தொடங்கிவிட்டோம். அதன் விளைவுதான் இவை. பணம் வேண்டும். பணம் மட்டுமே கெளரவம் அளிக்கும். அதற்காக எந்த வழியில் வேண்டுமானாலும் செல்லலாம் என்று அறம் பிறழந்து யோசிக்க தொடங்கியதன் விளைவுதான் இது" என்கிறார் சரவணன் சந்திரன்.

மேலும் அவர், "சந்தையை முழுக்க திறந்துவிட்டுவிட்டோம். அனைத்தும் எந்த தங்குதடையுமின்றி உள்ளே வர தொடங்கிவிட்டது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்தது, பத்து ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடந்தது. இப்போது பொள்ளாச்சியில் நடந்து இருக்கிறது. நாளை ஏதாவது குக்கிராமத்திலும் நடக்கலாம். ஒரு குற்றத்தை எப்படி அணுகுகிறோம் என்பதில் ஒரு சமூகத்தின் மேதமை அடங்கியிருக்கிறது. இந்த விவகாரத்தை எப்படி அணுகி தீர்வு தேடுகிறோம் என்பதில்தான் பல பிரச்னைகளுக்கான தீர்வு அடங்கி இருக்கிறது" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: