தினகரன் அலுவலக எரிப்பு வழக்கு: 'அட்டாக்' பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை

சித்தரிப்புப் படம் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புப் படம்

மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

2007ஆம் ஆண்டில் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு பணியாற்றிவந்த வினோத், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தி.மு.க. தொண்டரணி அமைப்பாளராக இருந்த அட்டாக் பாண்டி உள்பட 17 பேர் மீது மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்தது.

கலவரம் நடக்கும்போது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறி, ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. விசாரணை நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவர்கள் அனைவரையும் விடுவித்தது. இதனை எதிர்த்து நீண்ட காலமாக முறையீடு செய்யாமல் இருந்த சி.பி.ஐ. 118 நாட்கள் கழித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் முறையீடு செய்தது. கொல்லப்பட்ட வினோத்தின் தாயாரும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 17 பேரில் ஒருவர் இறந்துவிட மீதமுள்ள 16 பேர் மீது வழக்கு நடத்தப்பட்டுவந்தது. இவர்கள் ஒரு கட்டத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தபோது, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கடந்த சில நாட்களாக இறுதி விசாரணை நடந்துவந்த நிலையில், டி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. மொத்தமுள்ள 16 பேரில் 9 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிமன்றம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகக் கூறியது. உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

தாக்குதல் சம்பவம் நடந்தபோது அலட்சியமாக செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை டி.எஸ்.பி. ராஜாராம் மார்ச் 25ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் அவருக்கான தண்டனை விவரங்கள் அன்று அறிவிக்கப்படுமென்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் தயாநிதி, திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் ஆகிய இருவரும் தலைமறைவாகவே உள்ளனர்.

வழக்கின் பின்னணி

2007ஆம் ஆண்டு, சன் குழுமத்திற்குச் சொந்தமான தினகரன் நாளிதழ் 'மக்கள் மனசு' என்ற பெயரில் கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களில் சிறந்தவர் யார், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அடுத்த வாரிசு யார் என்பது போன்ற கேள்விகளை மக்களிடம் கேட்டு, அவர்களது கருத்தை வெளியிடுவதாக அந்த நாளிதழ் கூறியது.

மு. கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என்ற கேள்விக்கு மு.க. ஸ்டாலின்தான் அடுத்த வாரிசு என 70 சதவீதம் பேர் கருதுவதாகவும் வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே மு.க. அழகிரியை அடுத்த வாரிசு என கருதுவதாகவும் 2007 மே 9ஆம் தேதியன்று கருத்துக் கணிப்பு வெளியானது.

அன்று காலையிலேயே மதுரை நகரில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் நாளிதழை ஆங்காங்கே போட்டு தீ வைத்துக் கொளுத்தினர். மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், சில பேருந்துகளையும் தீ வைத்து எரித்தனர். இதில் 7 பேருந்துகள் எரிந்து சாம்பலாயின. இதற்குப் பிறகு ஒரு கும்பல் மதுரை - மேலூர் சாலையில் உத்தங்குடியில் உள்ள தினகரன் அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தது. பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன.

இந்தத் தாக்குதலில், அந்த நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டடர்களாக இருந்த கோபி (28), வினோத் (27), காவலாளி முத்துராமலிங்கம் ஆகியோர் பலியாகினர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தி.மு.கவின் தொண்டரணி அமைப்பாளரும் மு.க. அழகிரியின் ஆதரவாளருமான அட்டாக் பாண்டியின் தலைமையில் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர் தாக்குதல் நடத்திய படங்களும் ஊடகங்களில் வெளியாயின.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்