மக்களவை தேர்தல் 2019: அதிக விமான நிலையங்களை கட்டியுள்ளதா பாஜக அரசு? #RealityCheck

விமானம் படத்தின் காப்புரிமை Getty Images

அதிகளவிலான இந்தியர்கள் விமானப் பயணம் மேற்கொள்ள விரும்புவதால், அதனை விரிவாக்கி மேம்படுத்துவோம் என்று 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது உறுதிமொழி அளித்திருந்தது.

பிராந்திய விமான சேவைகளை விரிவுபடுத்தி, சிறிய இடங்களையும், நாட்டின் பெரும் நகரங்களையும் இணைக்க, லட்சியத்திட்டம் ஒன்றை அவர்கள் தொடங்கினார்கள்.

இந்தியாவில் இயங்கும் விமான நிலையங்களின் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்திருப்பதாக, பாஜக அறிவித்தது.

ஏப்ரல் 11ஆம் தேதி இந்திய மக்களவை தேர்தல் தொடங்கவுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா என்பதை பிபிசி ரியாலிட்டி செக் தொடர் ஆய்வு செய்து வருகிறது.

கூற்று: 2014ல் 65 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருந்த நிலையில், தற்போது அது 102ஆக உயர்ந்திருப்பதாக ஆளும் பாஜக கூறுகிறது.

மேலும், 2017ஆம் ஆண்டில், 10 கோடி பயணிகள் உள்ளூர் விமானங்களில் பயணித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் முதல் முறையாக, ரயிலின் குளிர்சாதன பெட்டிகளில் பயணித்த நபர்களைவிட, விமானங்களில் அதிகம் பேர் பயணம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீர்ப்பு: அரசாங்கம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையத்தின் தரவுகள்படி, 2014லிருந்து விமான நிலையங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. ஆனால், சரியான எண்ணிக்கையில் மாற்றம் இருக்கிறது. விமான பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்று கூறுவது உண்மைதான்.

சரியான எண்ணிக்கை என்ன?

102 விமான நிலையங்கள் இயங்கி வருவதாக, கடந்த மாதம் பாஜக தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருந்தது. 2014ஆம் ஆண்டில் 65 விமான நிலையங்கள் மட்டுமே இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரயிலில் பயணம் செய்வதைவிட, விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டது.

ஆனால், அதே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு ட்வீட்டில், 100 விமான நிலையங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், 2014ல் அது 75ஆக இருந்ததாகவும் கூறப்பட்டது.

2014ஆம் ஆண்டில் இருந்த அதிகாரப்பூர்வ தரவுகள் இது குறித்து என்ன சொல்கிறது?

2014ஆம் ஆண்டைவிட, 2015ல் என்ன எண்ணிக்கை இருந்தது என்பதற்கு இரண்டு ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகம், கீழே உள்ள தரவுகளை வைத்துள்ளது:

  • மார்ச் 2015ல் மொத்தம் 97 விமான நிலையங்கள் பயன்பாட்டில் இருந்தன (65 உள்நாட்டு, 24 சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் எட்டு சுங்கத்துறைக்கான விமான நிலையங்கள்)
  • மார்ச் 2018ல், இது 109 விமான நிலையங்களாக அதிகரித்தது. (74 உள்நாட்டு, 26 சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் ஒன்பது சுங்கத்துறைக்கான விமான நிலையங்கள்)

ஆனால், சிவில் விமான போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு பொறுப்பான இந்திய விமானநிலைய ஆணையத் தரவுகள் வேறு எண்ணிக்கையை குறிப்பிடுகின்றன.

இந்திய விமான நிலையத்தின் 2013-14 அறிக்கையின்படி, 68 விமான நிலையங்கள் பயன்பாட்டில் இருந்தது.

அதற்கு அடுத்த ஆண்டே, 125 விமான நிலையங்களை சொந்தமாக வைத்து பராமரித்து வருவதாக கூறியது. ஆனால், அதில் 69 விமான நிலையங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்ததாக கூறப்பட்டது.

மார்ச் 2018ல், மொத்தம் 129 விமான நிலையங்கள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதில் எத்தனை இயங்கியது என்று கூறவில்லை.

எனினும், 2018 ஜூலை மாதம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசின் அறிக்கையில், 101 விமான நிலையங்கள் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதனால், இந்திய விமானநிலைய ஆணையத்தின் எண்ணிக்கையை பாஜக குறிப்பிட்டிருக்கலாம்.

முந்தைய அரசாங்கம் என்ன கூறியது?

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 2014ஆம் ஆண்டுக்கு அக்கட்சி அதிகளவிலான எண்ணிக்கையையே கொடுத்திருந்தது. பிப்ரவரி 2014ல், நாடாளுமன்றத்தில் பேசிய அவர், அந்தாண்டு 90 விமான நிலையங்கள் பயன்பாட்டில் இருந்ததாக தெரிவித்தார்.

அதே ஆண்டுக்கான சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் வருடாந்திர அறிக்கை, 94 இயங்கும் விமான நிலையங்கள் இருப்பதாக குறிப்பிட்டது.

படத்தின் காப்புரிமை Rajiv Srivastava
Image caption சிக்கிமில் கட்டப்பட்ட புதிய விமான நிலையம்

விமான பயணத்தை ஊக்குவிப்பதற்காக 2016ஆம் ஆண்டு பாஜக தொடங்கிய புதுத்திட்டம் ஒன்றின் தரவுகள் குறித்த கேள்விகளும் இங்கு எழுகின்றன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பிப்ரவரி 2019 வரை, 38 விமான நிலையங்கள் இயங்கத் தொடங்கியதாக பாஜக கூறுகிறது.

ஆனால், இதில் சில விமான நிலையங்கள் ஏற்கனவே ராணுவ விமான நிலையங்களுக்குள், இவை பயணிகள் விமானத்துக்கான பகுதிகளாக செயல்பட்டு வந்தன என்று ஆவணங்கள் தெரிவிக்கிறது.

மேலும், சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தபோது, கடந்த ஐந்து ஆண்டுகளில், வெறும் நான்கு புதிய விமான நிலையங்கள் மட்டுமே தொடங்கப்பட்டது என்றார்.

தற்போது எத்தனை விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன?

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. விமான சேவை நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

10 கோடிக்கும் மேலான மக்கள் உள்ளூர் விமானங்களை பயன்படுத்துகிறார்கள் என்று பாஜக கூறியது உண்மைதான்.

கடந்தாண்டு பிப்ரவரியில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 2016 - 17 நிதியாண்டில் உள்ளூர் விமான போக்குவரத்தை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 103.75 மில்லியன் பேர்.

ரயிலை விட விமான பயணங்களை தேர்வு செய்யும் மக்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

பெரும்பாலான இந்தியர்கள், நீண்ட தூர பயணத்திற்கு இன்னும் ரயில் சேவையையே தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வளவு வசதியாகவும், விரைவானதாகவும் இல்லை என்றாலும் ரயில் சேவையே விலை குறைவானது.

2017ஆம் ஆண்டில், ரயில்களின் குளிர்சாதன பெட்டிகளில் பயணித்த மக்களின் எண்ணிக்கையை விட, விமானம் மூலம் பயணித்தவர்கள் அதிகமா?

அப்படித்தான் தெரிகிறது.

இந்திய ரயில்வேயின் 2016-17 வருடாந்திர அறிக்கைப்படி, அந்த ஆண்டில் ரயிலின் குளிர்சாதன பெட்டிகளில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை 145.5 மில்லயன் ஆகும்.

இந்தியாவில் 2017ல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணங்களில் மொத்தம் 158.43 மில்லியன் பயணிகள் பயணித்து புதிய சாதனையை படைத்ததாக சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் தெரிவித்தது.

2037ஆம் ஆண்டிற்குள் பயணிகளின் எண்ணிக்கை 520 மில்லியனாக உயரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு தெரிவிக்கிறது.

பாஜக தனது விமான போக்குவரத்து துறைக்கான "விஷன் 2040"-இன் ஒரு பகுதியாக, 2040 ஆம் ஆண்டிற்குள் பில்லியன் கணக்கான மக்களுக்கு ஏற்றவாறு போதிய விமான நிலையங்களை கட்டப்படும் என்று நம்புகிறது.

ஆனால், அதற்கு ஆகும் செலவினங்கள் குறித்த கவலைகள் உள்ளன. மேலும், இந்த வேகமான வளர்ச்சிக்கு ஏற்றவாறு உள்கட்டமைப்பை விரைந்து கட்ட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்