மக்களவை தேர்தலில் வாக்களிக்காதோருக்கு ரூ.350 அபராதம் என்ற செய்தி உண்மையா? #BBCFactCheck

இந்திய ரூ. 500 படத்தின் காப்புரிமை Getty Images

மக்களவை தேர்தலில் வாக்களிக்காதவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.350 கழிக்கப்படும் என்று தெரிவிக்கிற செய்தித்தாளில் வெளிவந்த செய்தியின் புகைப்படம் ஒன்று வடஇந்தியாவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 2019 மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே மாதம் 19ம் தேதி வரை பல கட்டங்களாக நடைபெறவுள்ளது. மே மாதம் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியின் புகைப்படம் சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. பிபிசியின் வாசகர்கள் அதனுடைய உண்மை தன்மையை கண்டறிய அதனை எமக்கு அனுப்பியுள்ளனர்.

இந்தி மொழியில் வெளியாகும் 'நவ்பாரத் டைம்ஸ்' செய்தித்தாளில் இது வெளியாகி இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். ஆனால், ஹோலி பண்டிகை நேரத்தில் "நகைச்சுவை பிரிவின்" கீழ் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

தகவல் கூறுவதென்ன?

ஓட்டுப்போடாதவர்கள் ஆதார் அட்டை மூலம் இனம்காணப்படுவர் என்றும், அதில் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக இதில் தெரிவிக்கப்படுகிறது.

Image caption நவபாரத் நாளிதழில் வெளியான செய்தி

தேர்தல் ஆணையத்தின்படி, ஓட்டுப்போடாத ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ.350 கழிக்கப்படும் என்றும், தங்களின் வங்கிக்கணக்கில் ரூ.350 வைத்திருக்காதவர்கள், தங்கள் செல்பேசிக்கு பணம் செலுத்தும்போது, இந்த அபராத தொகையை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்திடம் இருந்து தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அனுமதி பெற்றுவிட்டதால், இதற்கு எதிராக புகார் அளிக்க முடியாது என்று இந்த செய்தி குறிப்பிடுகிறது.

இந்த அறிவிப்பில் உண்மையில்லை என்று பொறுப்புத்துறப்பு அறிவிப்போடு, நகைச்சுவை பிரிவில் இந்த செய்தி வெளியாகியிருப்பதால், இந்த செய்தியில் உண்மை ஏதுமில்லை.

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வாக்களிப்பது கட்டாயம் என்று எந்தவொரு அறிவிப்பையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

"ஹோலி பண்டிகையின்போது, கவலையடைய வேண்டாம்" என்ற பிரபலமான பழமொழியோடு, இந்த பண்டிகையின்போது வேடிக்கையை கொண்டாடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பக்கத்தில் இந்த செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.

ஹபிஸ் சயீதை பாகிஸ்தான் இந்தியாவிடம் கையளித்து விட்டது என்பது இதில் வெளியாகியுள்ள இன்னொரு போலியான செய்தி.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையாவும், நீரவ் மோதியும், தங்களின் பாவங்களை போக்குவதற்காக, கும்பா கண்காட்சியில் நீராடியுள்ளனர் என்று மற்றொரு ஏமாற்று செய்தியும் வெளியாகியுள்ளது.

இந்த செய்திகள் எதிலும் உண்மையில்லை.

செய்தி: இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தலில் வாக்களிக்காதவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.350 கழிக்கப்படும் என்கின்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

முடிவு: தவறான தகவல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :