நாய்களுக்கு இரையான பச்சிளம் குழந்தை - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

வெறிநாய் படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - நாய்களுக்கு இரையான பச்சிளம் குழந்தை

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள மாமிடிபாளையம் ஏரிக்கரை அருகே சில நாய்கள் ஏதோ மாமிசத்தை தின்று கொண்டிருந்தன. இதை பார்த்தவர்கள் நாய்களை விரட்டிவிட்டனர்.

பின்னர் அருகில் சென்று பார்த்தபோது நாய்கள் தின்றது பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் உடல் என்பதை அறிந்து அதிர்ந்து போயினர் என் விவரிக்கிறது தினத்தந்தி செய்தி.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், நாய்கள் தின்றது போக எஞ்சி கிடந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பச்சிளம் குழந்தையை பெற்றோர் வேண்டாம் என வீதியில் வீசி சென்று, நாய்கள் குழந்தையை கடித்து கொன்றதா? அல்லது இறந்து போன குழந்தையை புதைக்காமல் அலட்சியமாக வீதியில் வீசி சென்றார்களா? என்கிற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்கிறது அந்த செய்தி.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - சிறுவனைக் கொன்ற தீவிரவாதிகள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வியாழன் மதியம் முதல் வெள்ளி மதியம் வரை காவல் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பிக்கிச் சண்டை நடந்தது. (கோப்புப்படம்)

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பந்திப்போராவின் தீவிரவாதிகளால் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 12 வயது சிறுவனை, வெள்ளியன்று, தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

தமது மகனை எதுவும் செய்ய வேண்டாம் என அவனது தாய் ஷரீஃபா ஜன் தீவிரவாதிகளுக்கு ஒலிபெருக்கி மூலம் வைத்த கோரிக்கை நிறைவேறவில்லை.

காவல் படையினருடன் 24 மணிநேரத்துக்கும் மேலான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது, 12 வயதாகும் ஆதிஃப் மிர் எனும் அந்த சிறுவன் உள்பட இருவரை தீவிரவாதிகள் சிறைப்பிடித்தனர்.

அந்த சிறுவனுடன் சிறை பிடிக்கப்பட்ட அவரது உறவினர் வியாழன்று மீட்கப்பட்டார்.

துப்பாக்கிச்சூட்டின்போது லஷ்கர்-இ-தய்பா அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக அம்மாநில காவல் துறை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

தி இந்து - 1800 கோடி ரூபாய் லஞ்ச குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பி.எஸ். எடியூரப்பா

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுக்கு, அக்கட்சியின் கர்நாடக மாநில மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ். எடியூரப்பா 1800 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள டைரி தொடர்பாக லோக்பால் அமைப்பு விசாரணை செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

போலியான ஆவணங்கள் மூலம் பொய்யான விவகாரங்களை எழுப்புவதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

இந்த டைரி விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

தினமணி - பாஜகவில் இணைந்தார் கம்பீர்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கெளதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார் என தினமணி செய்தி தெரிவிக்கிறது.

புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அவர் களமிறக்கப்படலாம் என அந்த செய்தி கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :