நரேந்திர மோதி, அருண் ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது: சுப்பிரமணியன் சுவாமி

நரேந்திர மோடி படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: 'மோதி, ஜேட்லிக்கு பொருளாதாரம் தெரியாது'

பிரதமர் நரேந்திர மோதிக்கும், நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் தெரியாது என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"உலக அளவில் இந்தியப் பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோதி பெருமிதமாக கூறி வருகிறார்.ஆனால், உண்மையில் நமது பொருளாதாரம் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்தில் உள்ளது.இருந்தாலும், பிரதமர் மோடி ஏன் 5-ஆவது இடத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார் என்பது புரியவில்லை.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சுப்பிரமணியன் சுவாமி

பிரதமருக்கு பொருளாதாரம் தெரியாததுதான் அதற்குக் காரணம். அவருக்கு மட்டுமல்ல, நமது நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் தெரியவில்லை. அந்நியச் செலாவணி மதிப்பை அடிப்படையாக வைத்து அவர்கள் இருவரும் நாட்டின் பொருளாதாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளதாகக் கூறுகிறார்கள்.

ஆனால், அந்த மதிப்பு தொடர்ந்து மாறக் கூடியது ஆகும். அதனை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிடுவது மிகவும் தவறாகவும்.

தற்போதைய நிலையில் அந்த விகிதத்தைக் கொண்டு கணக்கிட்டால், நாட்டின் பொருளாதாரம் 5-ஆவது இடத்தில் அல்ல; 7-ஆவது இடத்தில் இருக்கிறது.

உண்மையில், பொதுமக்களின் வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்டே நாட்டின் பொருளாதாரம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வாறு நிர்ணயித்தால், இந்தியப் பொருளாதரம் தற்போது உலக அளவில் 3-ஆவது இடத்தை வகிக்கிறது" என்று கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சுப்பிரமணியன் சுவாமி பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


இந்து தமிழ்: 'பயிற்சி விமானம் மாயமானதாக பரபரப்பு'

கிழக்கு தாம்பரம் பகுதியில் விமானப் படைக்குச் சொந்தமான விமானப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் பயிற்சிக்காக சென்ற விமானம் மாயம் என செய்தி வெளியானது. இதனால் தாம்பரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

இதுதொடர்பாக விசாரணையில், "புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதலில் பாகிஸ்தான் விமானங்களை வழிமறித்து சுட்டுத் தள்ளிய விங்கமாண்டர் அபிநந்தனின் விமானம் தாக்கப்பட்டு அவர் பாகிஸ்தான் கட் டுப்பாட்டு எல்லையில் தரையிறங்கினார்.

பின்னர் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி நாடு திரும்பினார். அது போல் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக விமானிகளை எப்படி மீட்பது, கட்டுப்பாட்டு அறையின் மூலம் விமானி விழுந்த இடத்தின் அருகிலுள்ள காவல் நிலையம், தீயணைப்புத் துறை மருத்துவம், வருவாய்த் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளுக்கு எப்படி தகவல் தெரிவிப்பது என பயிற்சி ஒத்திகை நடைபெற்றது" என்று காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் விமானப்படை அதிகாரிகள் தரப்பில் யாரும் தகவல் தர மறுத்துவிட்டனர்.

- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.தினத்தந்தி: 'சட்டவிரோத மணல் குவாரி'

சட்டவிரோத மணல் குவாரிக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் ரூ.75 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

அந்த செய்தி பின்வருமாறு விவரிக்கிறது,

சென்னையை சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் "திண்டுக்கல் மாவட்டத்தில் சவடு மணல் குவாரிக்கு கலெக்டர் அனுமதி வழங்கி உள்ளார். ஆனால் சவடு மணலுக்கு பதிலாக நீர்நிலைகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. எனவே சவடு மணல் குவாரிக்கு அனுமதி வழங்கி, திண்டுக்கல் கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நீர்நிலைகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறி இருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மணல் குவாரி (கோப்புப் படம்)

இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வக்கீல் கமிஷனராக லஜபதிராயை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அவர் குவாரிகளை ஆய்வு செய்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், "மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சித்தரேவு கிராமத்தில் அரசு நிலம் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது. அங்கு 10 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு மண் எடுக்கப்பட்டுள்ளது" எனக்கூறப்பட்டு இருந்தது.இதையடுத்து அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, "இயற்கை வளங்கள் கொள்ளை போவதால் நாம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் நிலைமை ஏற்படும். மணல் கொள்ளையை தடுக்க மனுதாரர் அதிகாரிகளிடம் பல தடவை புகார் மனு அளித்துள்ளார். ஆனால் அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இயற்கை வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு அரசு எந்திரம் துணைபோய் உள்ளது. மணல் கொள்ளையர்கள் மீது மட்டுமின்றி, அவர்களுக்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

ஏற்கனவே மணல் கடத்தலுக்கு உதவியாக இருக்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பும்படி தமிழக உள்துறை செயலாளருக்கு கடந்த 8.5.2018 அன்று உயர் நீதிமன்றம்டு உத்தரவிட்டது. அதன்படி எத்தனை அதிகாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவில்லை.

இது தொடர்பான தகவல்களை அதிகாரிகள் அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில்தெரிவிக்க வேண்டும்.

பழனி சித்தரேவு கிராமத்தில் உரிமம் பெறாத இடத்தில் சட்ட விரோதமாக மணல் குவாரி நடத்த அனுமதி வழங்கிய அதிகாரிகள் ரூ.75 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும்.

மேலும் தமிழகத்தில் மாவட்ட வாரியாக மணல், சவடு மண், புளூமெட்டல் மற்றும் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட இடங்கள் எத்தனை? தடை செய்யப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக குவாரி நடந்து வரும் பகுதிகள் எத்தனை?

மணல் கொள்ளைக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து, அவர் கள் கைது செய்யப்பட்டுள்ளனர்? அவர்கள் என்னென்ன பொறுப்புகளில் உள்ளனர்?

மணல் கொள்ளை தொடர்பாக என்னென்ன பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்படுகிறது? மணல் கொள்ளையர்களிடம் இருந்து கடந்த 10 ஆண்டுகளில் வசூலான அபராத தொகை எவ்வளவு? என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட தமிழக அரசின் அதிகாரிகளு க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.


படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'இந்திய கடல் எல்லையில் இந்தோனீசியா படகுகள்'

இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்த இந்தோனீசீயா படகை கைப்பற்றி மூன்று பேரை கைது செய்துள்ளது இந்திய கடலோர காவல் படை என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இந்திய கடலோர காவல் படை படகான ராஜ்வீர் தென் பிராந்தியத்தில் உள்ள தீவுகள் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போது, இந்தோனீசியா படகு இந்திய க்டல் எல்லையில் மீன் பிடித்து கொண்டிருந்ததை பார்த்திருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்ப்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால், இந்தோனீசியா படகில் இருந்தவர்கள் பதிலளிக்காமல் தப்பி செல்ல முயற்சித்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை துரத்தி சென்று பிடித்ததாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :