பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி - அதிமுக வலுவாக இருந்த தொகுதியில் சரிகிறதா?

  • விக்னேஷ்.அ
  • பிபிசி தமிழ்
பொள்ளாச்சி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

கோப்புப்படம்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம், ஏற்கனவே அங்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அதிமுகவின் மகேந்திரனை வென்றுள்ளார்.

சண்முக சுந்தரம் அதிமுகவை சேர்ந்த மகேந்திரனை 1,75,880 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். பொள்ளாச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 5.52% வாக்குகளை பெற்றுள்ளது.

சமீப காலங்களில் செய்தியில் அதிகம் இடம் பிடித்த தமிழக நகரம் பொள்ளாச்சியாகத்தான் இருக்கும். சுற்றுலா, படப்பிடிப்பு, தென்னை வேளாண்மை போன்ற நேர்மறையான காரணங்களுக்காக அறியப்பட்ட பொள்ளாச்சி இந்த முறை, ஒரு எதிர்மறையான காரணத்துக்காக செய்தியானது.

சமீபத்தில் அதிர்வலைகளை உருவாக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அதிமுக பிரமுகர். மற்றவர்கள் அவரது நண்பர்கள்.

அவர் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாலும், அனைத்துக் கட்சியினரும் நடத்திய போராட்டங்களில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்கு கட்சியினர் கலந்துகொள்ளாதது, பொள்ளாச்சியில் மட்டுமல்லாது அருகில் அமைந்துள்ள கோயம்புத்தூர் தொகுதியிலும் அதிமுக கூட்டணிக்கு எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கவே வாய்ப்புள்ளது.

இதுவரை நடந்துள்ள 16 மக்களவைத் தேர்தல்களில் அதிகபட்சமாக ஏழு முறை இந்தத் தொகுதியில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. கிராமப்புறங்களை அதிகம் உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் சமீப காலம் வரை அதிமுக வலுவாக இருப்பதாகவே தோன்றியது.

அதிகம் வென்ற அதிமுக

பாலியல் விவகாரம் வெளியானதும், அதில் அதிமுகவைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதால், அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் எதுவும் அத்தொகுதியில் போட்டியிட நாட்டம் காட்டவில்லை என்றும் அதே சமயத்தில், பொள்ளாச்சியை கூட்டணிக்கு கட்சிகளுக்கு ஒதுக்கவே அதிமுக தலைமை விரும்பியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

படக்குறிப்பு,

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானபின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 'பார்' நாகராஜ் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன்.

அந்தச் செய்திகளின் உண்மைத் தன்மையை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த இயலவில்லை.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான போராட்டங்களில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் முதல் முறையாக 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்கள்.

சமூக ஊடகங்களும் தேர்தல் வெற்றியை முடிவு செய்யும் இந்தக் காலகட்டத்தில், இந்த இளைஞர்கள் பரவலாக சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்குபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை (தனி) , உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

1977 தேர்தல் முதல் 2004இல் நடந்த தேர்தல் வரை பொள்ளாச்சி தனித் தொகுதியாக இருந்தது. 2009ஆம் நடந்த தேர்தல் முதல் பொள்ளாச்சி மீண்டும் பொதுத் தொகுதியானது.

பெண் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தத் தொகுதியில் 7,36,632 ஆண்கள் , 7,63,777 பெண்கள் மற்றும் 160 மூன்றாம் பாலினத்தவர்கள் என 15,00,569 வாக்காளர்கள் உள்ளனர்.

பொருளாதாரம் மற்றும் பிரச்சனைகள்

காடுகள், மலைகள்,அணைகள், சமவெளி உள்ளிட்டவை பரவலாக உள்ள இந்தத் தொகுதியில், சுற்றுலா, வேளாண்மை, ஊரகத் தொழில்கள் ஆகியன பொருளாதாரத்தின் பின்புலமாக உள்ளன.

பட மூலாதாரம், tiruppur.nic.in

படக்குறிப்பு,

திருமூர்த்தி அணைக்கட்டு

தென்னை மரத்தின் பாகங்களில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டு உற்பத்திப்பொருட்களை அதிகம் தயாரிக்கும் ஊரக தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இந்தத் தொகுதி, அதே சரக்குகளை சத்தமில்லாமல் ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி மதிப்பில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தும் வருகிறது.

வால்பாறை மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதிகளில் மலைவாழ் மக்கள் குடியிருப்புகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் உள்ளன.

எனினும், சில மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் நூற்றுக்கும் குறைவான வாக்குகளே உள்ளன. தொழில் துறையில் முன்னேறிய கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ள இந்தத் தொகுதியில் இயற்கை அமைப்பு மற்றும் நிர்வாகத்தின் போதிய நடவடிக்கை இன்மை ஆகிய இரு காரணிகளாலும், மின்சாரம், சாலைகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் போதாமை உள்ளது. எனினும், வெற்றியைத் தீர்மானிக்கும் எண்ணிக்கையில் மலைவாழ் மக்கள் இல்லாமல் இருப்பது அவர்களுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

பெரும்பான்மை வாக்காளர்களாக உள்ள வேளாண் நிலம் மற்றும் ஊரகத் தொழில் நிறுவனங்களை வைத்துள்ளவர்கள் பரவலாக ஓரிரு சாதிகளைச் சார்ந்தவர்களாக மட்டுமே இருப்பது அந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கான அரசியல் செல்வாக்கை நிலைநாட்ட உதவி வருகிறது.

பட மூலாதாரம், Atrpollachi.com

படக்குறிப்பு,

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி பகுதியின் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளது.

மேற்குத் தமிழகத்தின் முக்கிய அணைகளான அமராவதி அணை, திருமூர்த்தி அணை, ஆழியாறு ஆணை உள்ளிட்டவை இந்தத் தொகுதியில் அமைந்துள்ளன என்பதால் பாசன வசதிகளுக்கான உள்கட்டமைப்பு மற்றும் நீர் மின்சார உற்பத்தி ஒப்பீட்டளவில் பரவலாகவே உள்ளது.

எனினும், விவசாயிகளுக்கு, குறிப்பாக தலித் விவசாயிகளுக்கு என்று இருக்கும் திட்டங்களும், மானியங்களும் அவர்களை முழுமையாகச் சென்றடவதில்லை எனும் குற்றச்சாட்டும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் காற்றாலை மின்சார உற்பத்தி செய்வது இந்தப் பகுதியில் அதிகரித்து வருவது நேரடியாகவும், மறைமுகமாகவும் கணிசமான வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வளர்ச்சியையும் உண்டாக்கியிருந்தாலும் விளைநிலங்களின் பரப்பைக் குறைத்து வருகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள இந்தத் தொகுதியின் வால்பாறை பகுதி மனித-விலங்குகள் மோதலுக்கான இடமாக பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது.

காடுகளின் பரப்பு குறைந்து, அவை மலைப்பயிர்களுக்கான தோட்டங்களாக மாற்றப்பட்டு வருவதே இந்த மோதல்களின் முக்கியக் காரணியாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி என்பது இங்கு நிலவினாலும் அதற்கான விலையாக இயற்கையை தொடர்ந்து உடுமலை-பொள்ளாச்சி-வால்பாறை பகுதி கொடுத்து வருகிறது.

பட மூலாதாரம், coimbatore.nic.in/

படக்குறிப்பு,

வால்பாறை பகுதியில் பல ஆண்டுகளாகவே வன விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே மோதல்கள் அடிக்கடி உண்டாகின்றன

எனினும், தேர்தல் சமயங்களில் இந்த பிரச்சனைகள் விவாதப்பொருளாக இருப்பதில்லை என்பதே உண்மை நிலவரம்.

சமீபத்திய தேர்தல்கள்

கடைசி இரு தேர்தல்களிலும் திமுக இந்தத் தொகுதியை இழக்கவும், அதிமுக வெல்லவும் மும்முனைப் போட்டி ஒரு முக்கியக் காரணியாக இருந்துள்ளது.

2009இல் பொள்ளாச்சியில் போட்டியிட்ட கொங்குநாடு முன்னேற்ற கழகத் தலைவர் ராமசாமி 13.3% வாக்குகள் பெற்றது திமுகவின் தோல்விக்கு வழிவகுத்ததாக கூறப்பட்டது. இந்தத் தேர்தலில் திமுகவின் சண்முகசுந்தரம் சுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சுகுமாரிடம் தோல்வி அடைந்தார். அப்போது ராமசாமி பெற்ற வாக்குகள் 1,02,83. ஒருவேளை கொங்குநாடு முன்னேற்ற கழகம் போட்டியிடாமல் இருந்திருந்தால் அப்போது முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கலாம்.

2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக பதிவான வாக்குகளில் 41% வாக்குகள் பெற்று வென்றது. திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி மூன்றாம் இடம்தான் பெற்றார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் இரண்டாம் இடம் பெற்றார். இப்போது அவர் திமுக கூட்டணியில் உள்ளார்.

சுவாரசிய தகவல்கள்

பொள்ளாச்சி தொகுதியின் முதல் மக்களவை உறுப்பினர் ஜி.ஆர்.தாமோதரன் பின்னாட்களில் இருமுறை தமிழக மேலவை உறுப்பினராகவும், 1978 முதல் 1981 வரை சென்னை பல்கலைக்கழத்தில் துணை வேந்தராகவும் இருந்தார்.

1971 இடைத் தேர்தலில் பொள்ளாச்சியில் திமுக சார்பில் வென்ற ஏ.எம்.ஆர். மோகன்ராஜ் காலிங்கராயர் 1963 முதல் 1965 வரை இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :