தேர்தல் ரத்தான வேலூர் மக்களவைத் தொகுதியின் நிலவரம் இதுதான்

பாலாற்றில் தண்ணீருக்கு பதிலாக ஓடும் மணல் லாரிகள் - தீருமா மக்களின் வேதனை? படத்தின் காப்புரிமை Getty Images

(வரவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் பற்றிய பிபிசி தமிழின் பார்வை)

கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் பாலாற்றின் கரையில் அமைந்துள்ள வேலூர் மக்களவைத் தொகுதி என்றாலே வெயில்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இனி மக்களவைத் தேர்தல் ரத்தானதும் நினைவுக்கு வரலாம்.

அந்தத் தேர்தலின் கடந்த கால நிலவரம் குறித்து இந்த கட்டுரையில் விவரிக்கிறோம்.

இந்தியாவின் முதல் மக்களவை தேர்தல் நடைபெற்ற 1951ஆம் ஆண்டிலிருந்தே இந்த தொகுதி இருந்து வருகிறது. சுமார் 10 லட்சம் வாக்காளர்களை கொண்ட வேலூர் தொகுதியில் 2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின், வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன.

தொகுதியின் வரலாறு

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் வெற்றி பெற்று தற்போது வேலூரின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த தொகுதியில் அதிகபட்சமாக காங்கிரஸ் மற்றும் திமுக ஆகியவை தலா ஐந்து முறை வென்றுள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

அதேபோன்று, வேலூர் தொகுதியில் அதிக முறை இரண்டாவது இடத்தை பிடித்த கட்சியாகவும் திமுக விளங்குகிறது. காங்கிரஸ் மற்றும் அதிமுகவுடன் தலா இரண்டு முறையும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் ஒரு முறையும் திமுக தோல்வியை தழுவியுள்ளது.

நாட்டின் முதல் இரண்டு மக்களவை தேர்தல்களின்போது இந்த தொகுதியில் இரட்டை உறுப்பினர்கள் முறை நடைமுறையில் இருந்தது. அதன்படி 1951ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காமன்வீல் கட்சியை சேர்ந்த ராமச்சந்திர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முத்துகிருஷ்ணன், முனியசாமி ஆகிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவரும் வேலூர் தொகுதியில் வெற்றிபெற்றிருந்தனர்.

இரட்டை உறுப்பினர்கள் முறை

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் மொத்த நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 489. இதில் தலித்துகள், பழங்குடிகளுக்கான ஒதுக்கீடு 94.

இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் தலித்/பழங்குடி வேட்பாளர்கள் மட்டுமே நிற்கும் முறையும் சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறையும் - அதாவது ஒரே தொகுதியில் பொது உறுப்பினர் ஒருவர், தலித்/பழங்குடி உறுப்பினர் ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கும் முறையும் - இருந்தன. தலித், பழங்குடியினத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கான வாக்குகளை, தலித்துகள்/ பழங்குடிகள், பொதுப் பிரிவினர் என்று எல்லோருமே அளிப்பார்கள்.

1961ஆம் ஆண்டு இரட்டை உறுப்பினர் தொகுதி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு தனித் தொகுதிகள் இன்று உள்ளதுபோல மாறின.

1951 முதல் 1999 வரையிலான தேர்தல்களைப் பார்க்கும்போது, வேலூர் மக்களவை தொகுதியில் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிகபட்சமாக 75.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 1951ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 45.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

வேலூர் மக்களவை தொகுதி
தேர்தல் ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி இரண்டாம் இடம் கட்சி
1951-52 ராமச்சந்தர் & எம். முத்துகிருஷ்ணன் காமன் வீல் கட்சி & இந்திய தேசிய காங்கிரஸ் என்.எஸ். வரதாச்சாரி இந்திய தேசிய காங்கிரஸ்
1957 எம். முத்துகிருஷ்ணன் & என். ஆர். முனியசாமி இருவரும் காங்கிரஸ் - -
1962 அப்துல் வாகித் இந்திய தேசிய காங்கிரஸ் சிவராஜ் இந்திய குடியரசு கட்சி
1967 குசேலர் திமுக ஜெயராமன் இந்திய தேசிய காங்கிரஸ்
1971 உலகநம்பி திமுக மணவாளன் ஸ்தாபன காங்கிரஸ்
1977 தண்டாயுதபாணி இந்திய தேசிய காங்கிரஸ் அப்துல் சமது சுயேச்சை
1980 ஏ.கே.ஏ. அப்துல் சமது சுயேச்சை தண்டாயுதபாணி ஜனதா கட்சி
1984 சண்முகம் அதிமுக ராமலிங்கம் திமுக
1989 ஏ.கே.ஏ. அப்துல் சமது இந்திய தேசிய காங்கிரஸ் அப்துல் லதீப் திமுக
1991 அக்பர் பாஷா இந்திய தேசிய காங்கிரஸ் சண்முகம் திமுக
1996 பி. சண்முகம் திமுக அக்பர் பாஷா இந்திய தேசிய காங்கிரஸ்
1998 என்.டி. சண்முகம் பாட்டாளி மக்கள் கட்சி முகமது ஷாகி திமுக
1999 என்.டி. சண்முகம் பாட்டாளி மக்கள் கட்சி முகமது ஆசிப் அதிமுக
2004 காதர் மொய்தீன் திமுக சந்தானம் அதிமுக
2009 அப்துல் ரஹ்மான் திமுக வாசு அதிமுக
2014 செங்குட்டுவன் அதிமுக சண்முகம் பாஜக

இதுவரை நடைபெற்றுள்ள 16 மக்களவைத் தேர்தல்களில், வேலூர் தொகுதியில் ஒரே ஒரு முறை மட்டுமே சுயேச்சை வேட்பாளர் பெற்றுள்ளார். 1980ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏ.கே.ஏ. அப்துல் சமது, 1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1998 மற்றும் 1999களில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த என்.டி. சண்முகம் வெற்றிபெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

2004 முதல் 2014ஆம் ஆண்டு வரையில் திமுக கோட்டையாக விளங்கிய இந்த தொகுதியில் கடைசியாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. அதாவது, 1984ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின்பு அதிமுக வேலூரில் வெற்றிபெறுவது அதுவே முதல் முறை.

அடுத்த மாதம் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடத்தப்படவுள்ள 17ஆவது மக்களவைக்கான தேர்தலில் திமுக கூட்டணியின் வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அதிமுக கூட்டணியை பொறுத்தவரை வேலூர் மக்களவை தொகுதி புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக ஏ.சி. சண்முகம் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொகுதியின் பிரதான பிரச்சனைகள்

அடிப்படையில் அதிக வெயிலும், தண்ணீர் பஞ்சமும் மிக்க பகுதியாக இருந்து வரும் வேலூருக்கு, அங்கு அதிக அதிகளவில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகள் மேலதிக பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைகளை பெரும்பாலான தோல் தொழிற்சாலைகள் கடைபிடிக்காததால் அவற்றின் கழிவுகள் நேரடியாக ஏரி, குளம், குட்டைகளில் கலப்பதால் அவற்றிலுள்ள தண்ணீரை அருந்தும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதுடன், சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும் பயன்படுத்தமுடியதாக அளவுக்கு மோசமான நிலையை அடையும் நிலை பல தசாப்தங்களாக இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி, வேலூரில் ஓடும் பாலாற்றில் தண்ணீருக்கு பதிலாக மணல் லாரிகளே அதிகளவில் ஓடும் சூழ்நிலையை மாற்றி பாலாற்றை முற்றிலுமாக உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே வேலூர் தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

பெரும்பாலும் சாலை போக்குவரத்தையே நம்பியுள்ள இந்த மாவட்டத்தில் அதிகளவிலான சாலை விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. எனவே, சாலை வசதிகளை மேம்படுத்துவதுடன், தேவையான இடங்களில் மேம்பாலங்களை கட்ட வேண்டுமென்றும் இந்த தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :