தருமபுரி மக்களவைத் தொகுதி: நக்சல்கள் முதல் இன்றைய நிலை வரை

பட மூலாதாரம், M Niyas Ahmed
தருமபுரி தொகுதியில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் திமுகவை சேர்ந்த செந்தில்குமாரை விட 70 ஆயிரம் வாக்குகள் பின் தங்கினார். செந்தில்குமார் 5.6 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். அமமுகவை சேர்ந்த பழனியப்பன் 50 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவும், திமுக கூட்டணி சார்பில் திமுகவுக்கு நேரடி போட்டியில் இறங்கியுள்ளன.
திமுக வேட்பாளராக மருத்துவர் செந்தில்குமாரும், அதிமுக கூட்டணியில் உள்ள பா.ம.க வேட்பாளராக மருத்துவர் அன்புமணி ராமதாஸூம் களம் இறங்குகிறார்கள்.
மருத்துவரை எதிர்த்து மருத்துவர் மோதும் தொகுதி இது.
நக்சல்கள்
புதர் காடுகள் மற்றும் மலைகள் சூழ இருக்கும் தருமபுரி ஒரு காலத்தில் செயல்பாடுகள் ரீதியாக நக்சல்கள் வலுவாக இருந்த பகுதி.
இப்போது சாதிய கலவரங்களால் அடையாளப்படுத்தப்படும் தருமபுரியின் நாயக்கன்கொட்டாய் ஒரு காலத்தில் நக்சல்கள் செயல்பாடுகளுக்காகவே அறியப்பட்டது. இப்போதும் அதற்கு சாட்சியாக இருக்கிறது அந்த பகுதியில் உள்ள அப்பு - பாலன் சிலை.
1980களில் எம்.ஜி.ஆர் இராண்டாம் முரை முதல்வராக பொறுப்பேற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு கட்டுகடங்காத அதிகாரத்தை கொடுத்தார். தேவாரம் வேலூர் பகுதி ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார், பல என்கவுண்டர்கள் அந்த பகுதியில் நடந்தன. நக்சல்களின் பிடி மெல்ல அந்த பகுதியில் விலக தொடங்கியது. ஆனால் அதே நேரம், போலீஸ் மனித உரிமை மீறல் செயல்பாடுகளில் மோசமாக ஈடுப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
சரி… நிகழ்காலத்திற்கு வருவோம். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய நிலவரம் என்ன என்று காண்போம்.
தற்போதைய நிலை
1977ஆம் ஆண்டுக்கு முன்பு வரை மேட்டூர் மக்களவைத் தொகுதியில் தருமபுரி இருந்தது. மறுசீரமைப்புக்கு பின்னர் தருமபுரி தொகுதியாக மாற்றப்பட்டது.
தற்போது தருமபுரி மக்களவைத் தொகுதியில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
பட மூலாதாரம், M Niyas Ahmed
சித்தேரி மலை பகுதி
இவற்றில், பென்னாகரம் மற்றும் தருமபுரி பேரவைத் தொகுதிகளில் திமுகவைச் சேர்ந்தோர் சட்டப் பேரவை உறுப்பினர்களாக உள்ளனர். அதேபோல, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேரவைத் தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவ்விரு தொகுதிகளுக்கு தற்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பாலக்கோடு பேரவைத் தொகுதி அதிமுக வசமும், அதேபோல, சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பேரவைத் தொகுதியும் அதிமுக வசமும் உள்ளன.
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள்- 7,47,625, பெண் வாக்காளர்கள்- 7,20,159, இதரர் 120 பேர் என மொத்தம் மக்களவைத் தொகுதியில் 14,6,7904 வாக்காளர்கள் உள்ளனர்.
வெற்றியும், தோல்வியும்
இதுவரை தருமபுரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 2 முறையும், திமுக 2, பாமக 4, அதிமுக 2, தமாகா 1, முறையும் வெற்றி பெற்றுள்ளனர். பெரும்பாலும், அதிமுக மற்றும் திமுக உடன் பாமக கூட்டணி வைக்கும்போதெல்லாம் தருமபுரி பாமகவுக்கே ஒதுக்கப்படுவது குறிப்பிடதக்கது.
1999ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு வென்ற பு.தா. இளங்கோவன், 2004ஆம் ஆண்டு பா.ம.க வேட்பாளர் ஆர்.செந்திலை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருக்கிறார்.
கடந்து வந்த பாதை
தொகுதியின் எதிர்பார்ப்பு
தமிழகத்தில் அதிகளவில் பழங்குடி மக்கள் இருக்கும் தொகுதிகளில் ஒன்று தருமபுரி. இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பெரிதாக எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை என்ற குரலௌ பரவலாக இங்கு கேட்க முடிகிறது.
பட மூலாதாரம், M Niyas Ahmed
நாகாவதி அகதிகள் முகாம்
2015ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடத்துவதற்காக செம்மரம் வெட்டியதாக தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். அதில் 7 பேர் தருமபுரியை சேர்ந்தவர்கள். அனைவரும் பழங்குடியினர்.
மேலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள தருமபுரியில் விவசாயத்தைத் தவிர, வேலை வாய்ப்புகளை தரும் தொழிற்சாலைகள் இல்லை. அதனால், தருமபுரியிலிருந்து அதிகளவில் வேறு பகுதிகளுக்கு வேலை வாய்ப்புகளை தேடி புலம்பெயர்வதாக கூறுகிறார்கள் இங்குள்ள செயற்பாட்டாளர்கள்.
தருமபுரி - மொரப்பூர் ரயில்வே இணைப்புத் திட்டம்
1700 ஏக்கரில் சிப்காட் தொழில்பேட்டை, நல்லம்பள்ளி அருகே ராணுவ தளவாட ஆராய்ச்சி மையம், பென்னாகரம் பருவதனஅள்ளி சிட்கோ, அரூர் சிட்கோ ஆகிய தொழில்பேட்டைகள் அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்புகள் பல ஆண்டுகளாக அறிவிப்புகளாகவே உள்ளன.
பல தசாப்த கோரிக்கையான தருமபுரி - மொரப்பூர் ரயில்வே இணைப்புத் திட்டம் குறித்த அறிவிப்பு மகிழ்ச்சி தருவதாக கூறுகிறார்கள் மக்கள்.
தருமபுரியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் நீண்டகாலமாக இருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்