சிதம்பரம் மக்களவை தொகுதி: இந்தி திணிப்பு, வீராணம், ஹைட்ரோ கார்பன் – போராட்ட நிலத்தின் தேர்தல் வரலாறு

சிதம்பரம் தொகுதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தில்லை நடராஜர் கோயில்

சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 4.9 லட்சம் வாக்குகள் பெற்று 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரை வென்றுள்ளார். அமமுக வேட்பாளர் இளவரசன் இதில் 62 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இதில் திருமாவளவன் 43.3% சதவீத வாக்குகளே பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி 3.25% சதவீதமும் மக்கள் நீதி மய்யம் 1.33% சதவீதமும் நோட்டா 1.35% சதவீதமும் வாக்குகள் பெற்றுள்ளது.

பல வீரியமான போராட்டங்களை, குறிப்பாக மாணவர் போராட்டங்களை கண்ட தொகுதி சிதம்பரம்.

போராட்ட நிலம்

இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் பெரும் தீயாய் கிளம்பியபோது இங்கு படித்த மாணவர்கள் கடுமையாக இந்தி திணிப்புக்கு எதிராக போராடினார்கள். இங்கு பயின்ற ராஜேந்திரன் என்ற மாணவர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார்.

இந்தி திணிப்பு எதிர்ப்பின் ஓர் அடையாளமாகி போனார் ராஜேந்திரன்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சிதம்பரம் தொகுதி

விவசாய போராட்டங்கள், சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகத்தை தீட்சிதர்களிடமிருந்து மீட்க கோரிய போராட்டங்கள் என பல உறுதியான போராட்டங்களை சிதம்பரம் கண்டிருக்கிறது.

இந்த தொகுதிக்குள் உள்ள வீராணம் ஏரியிலிருந்துதான் சென்னைக்கு குடிநீர் செல்கிறது. 2003ஆம் ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட போது பல விவசாயிகள் இதற்கு எதிராக போராடினர்.

இங்குள்ள வேளாண்நிலங்களுக்கே போதுமான நீர் இல்லாத போது, சென்னிக்கு எடுத்து செல்வது சரியானது அல்ல என்பது அவர்களது வாதம். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா நம் மாநிலத்திற்குள்ளே நீரை பகிர்ந்து கொள்ள சம்மதிக்காத போது, எப்படி பிற மாநிலங்களிடம் கேட்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

இந்த தொகுதியின் தற்போதைய நிலை குறித்து இப்போது பார்ப்போம்.

சிதம்பரம் தொகுதி

இரட்டை உறுப்பினர்கள் கொண்ட தொகுதிகளில் சிதம்பரமும் ஒன்றாக இருந்தது.

சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் மொத்த நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 489. இதில் தலித்துகள், பழங்குடிகளுக்கான ஒதுக்கீடு 94.

இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் தலித்/பழங்குடி வேட்பாளர்கள் மட்டுமே நிற்கும் முறையும் சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறையும் - அதாவது ஒரே தொகுதியில் பொது உறுப்பினர் ஒருவர், தலித்/பழங்குடி உறுப்பினர் ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கும் முறையும் - இருந்தன.

1961ஆம் ஆண்டு இரட்டை உறுப்பினர் தொகுதி ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தனித் தொகுதிகள் இன்றைக்கு உள்ளதுபோல மாறின.

தனித் தொகுதியான சிதம்பரத்தில் அதிக முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வென்றிருக்கிறது. அதற்கு அடுத்ததாக திமுக 4 முறையும், பா.ம.க 3 முறையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வென்றிருக்கின்றன.

கடந்து வந்த பாதை

இன்றைய நிலை

குன்னம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் (தனி), சிதம்பரம், அரியலூர், ஜெயம்கொண்டம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

மீனவர்களும், விவசாய கூலிகளும் அதிகமாக உள்ள தொகுதி இது.

ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்தது, ஜெயங்கொண்டம் அனல் மின் நிலைய விரிவாக்கம் ஆகியவை இத்தொகுதி மக்களின் முக்கிய பிரச்சனையாக இருப்பதாக அப்பகுதி சூழலியலாளர்கள் கூறுகிறார்கள்.

சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும், அதிமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக அக்கட்சியை சேர்ந்த சந்திரசேகரரும், அமமுகவை சேர்ந்த இளவரசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :