புதுச்சேரி மக்களவைத் தொகுதி: 1,97,025 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற காங்கிரஸ்

வைத்தியலிங்கம், நாராயணசாமி

புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட புதுவையின் முன்னாள் முதல்வர் வே.வைத்திலிங்கம் 1,97,025 வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாரயணசாமி கேசவனை வீழ்த்தினார்.

இந்தியாவில் பிரெஞ்சு நாகரீகத்தின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஓர் இடம் இருக்குமெனில் அது புதுச்சேரியாகத்தான் இருக்க முடியும். டச்சு, போர்த்துக்கீஸியர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுகாரர்களின் நடவடிக்கை மிகுந்த இடமாக புதுச்சேரி இருந்திருக்கிறது. இந்தியாவுக்கு பிரிட்டீஷாரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்து 7 ஆண்டுகள் கழித்துதான் 1954-ல் புதுச்சேரி ஃபிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

நான்கு மாவட்டங்கள், 30 தொகுதிகள்

பட மூலாதாரம், Google maps

தமிழகத்தில் இருக்கும் ஒரு மக்களவைத் தொகுதிக்கும், புதுச்சேரியில் இருக்கும் ஒரு மக்களவைத் தொகுதிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் 6 சட்டப்பேரவை தொகுதியை உள்ளடக்கியது ஒரு மக்களவைத் தொகுதி. ஆனால், புதுச்சேரி யூனியன் பிரேதசத்தில் 30 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. புதுச்சேரியில் 23 தொகுதிகளும், காரைக்காலில் 5 தொகுதிகளும், மாஹே மற்றும் ஏனாம் தலா ஒரு தொகுதியும் என மொத்தமாக 4 மாவட்டங்களை உள்ளடக்கியது புதுச்சேரி யூனியன் பிரதேசம்.

புதுச்சேரி தொகுதி உருவாக்கப்பட்டது எப்போது?

1954ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி புதுச்சேரி இந்தியாவுடன் ஒன்றிணைந்தது. ஆனால், 8 ஆண்டுகளுக்குபின், 1963ல்தான் இந்தியாவின் அதிகாரபூர்வ யூனியன் பிரதேசமாக புதுச்சேரி அறிவிக்கப்பட்டது. 1962ல் மூன்றாவது மக்களவைத் தேர்தலின் போது, புதுச்சேரி என்ற தொகுதி உருவாக்கப்பட்டது. அதில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சார்பில் கு. சிவப்பிரகாசம் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இந்தியாவுடன் புதுச்சேரி அதிகாரபூர்வமாக இணைந்தபிறகு நடைபெற்ற நான்காவது மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் திருமுடி என். சேதுராமன் வெற்றிபெற்றார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை மேயராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் சேதுராமன்.

காங்கிரஸின் கோட்டையாக விளங்கிய புதுச்சேரி

புதுச்சேரியில் இதுவரை நடைபெற்ற 14 மக்களவைத் தேர்தலில் 9 முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 1977 தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் அ.தி.மு.கவும், 1980 தேர்தலில் இந்திரா காங்கிரஸும், 2004 தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.கவும் வெற்றி பெற்றுள்ளன. தமிழக அரசியல் வரலாற்றில், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் சரிந்து கொண்டிருந்த நிலையில், புதுச்சேரியில் அப்படியான எவ்வித சறுக்கலையும் 2009 தேர்தல் வரை காங்கிரஸ் சந்திக்காதது இங்கு குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் உட்கட்சி பூசலால் வெளியேறிய என்.ரங்கசாமி என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கியது காங்கிரஸுக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. 2009 தேர்தலில் சுமார் மூன்று லட்சம் வாக்குகளை பெற்று 91 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி. ஆனால், 2014 தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரால் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் நாராயணசாமி.

284 வாக்குகளில் தி.மு.கவை வீழ்த்திய காங்கிரஸ்

2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலிருந்து தி.மு.கவும் - காங்கிரஸும் அந்நியோன்யமாக பரஸ்பர நட்பு பாராட்டுவதற்குமுன், பாம்பும் கீரியாக இருந்தன. இதுவரை நான்கு முறை நேரிடையாக காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளது திமுக. 1996 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ், தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க, ம.தி.மு.க என பிரதான கட்சிகள் அனைத்தும் களம் கண்டன. காங்கிரஸ் சார்பில் எம்.ஓ.எச். ஃபரூக்கும், தி.மு.க சார்பில் எஸ். ஆறுமுகமும் போட்டியிட்டனர். ஃபரூக் 1,83,986 வாக்குகள் பெற்று தி.மு.கவின் ஆறுமுகத்தை வீழ்த்தினார். இருவருக்குமிடையேயான வாக்கு வித்தியாசம் என்பது 284.

ரங்கசாமியின் வருகையும், காங்கிரஸின் வீழ்ச்சியும்

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி புதுச்சேரியில் பலம் பொருந்திய அணியாகப் பார்க்கப்பட்டாலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து ரங்கசாமி வெளியேற்றப்பட்டதை அடுத்து காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்தது. 2014 தேர்தலில், காங்கிரஸ் - தி.மு.கவின் வாக்கு வங்கியின் சில பகுதியை ரங்கசாமியும், ஜெயலலிதாவும் பிரித்தெடுத்து கொண்டனர். 2014ல் தனித்து களம் கண்ட அ.தி.மு.க 1,32,657 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தது.

காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகியாக அறியப்பட்ட ராதாகிருஷ்ணன் தேர்தலுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸில் இணைந்து வெற்றியும் பெற்றார். 2009 தேர்தலில் பெற்ற வாக்கு விகிதத்தை காட்டிலும் சுமார் 23 சதவிகித வாக்கை இழந்து தோல்வியை தழுவினார் நாராயணசாமி.

30 வயது இளைஞரை வேட்பாளராக அறிவித்த ரங்கசாமி

ஏப்ரல் 18ஆம் தேதி புதுச்சேரி தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி, என்.ஆர். காங்கிரஸ் இரண்டுமே பலமான கூட்டணி அமைத்து மோதின. காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான வி. வைத்திலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வர் நாராயணசாமியின் ஆதரவில் பிரசார களத்தில் குதித்தார்.

மிகவும் பழுத்த அரசியல்வாதியான வைத்திலிங்கத்தை எதிர்த்து 30 வயதான பிரபல தொழிலதிபர் 'மருத்துவர்' நாராயணசாமி கேசவனை இறக்கினார் ரங்கசாமி. மணக்குள விநாயகர் குழும கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்தான் மருத்துவர் நாராயணசாமி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :