விழுப்புரம் மக்களவைத் தொகுதி: அ.தி.மு.கவின் 'ஹாட்ரிக்' வெற்றியை தடுக்குமா தி.மு.க?

Villupuram junction படத்தின் காப்புரிமை PADAYACHI CLICKS

(நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளின் விவரங்கள் குறித்து கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அதன் ஒரு பகுதியாக தற்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி குறித்து பார்க்கவிருக்கிறோம்.)

2008ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் திண்டிவனம் மக்களவைத் தொகுதியிலிருந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்டும், வேறு மூன்று தொகுதிகளை கொண்டும் புதிய தொகுதியாக விழுப்புரம் மக்களவைத் தொகுதி உருவானது.

தற்போது அதில், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் அடக்கம். முக்கியமாக, இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும். சென்னை மாகாணத்தின் முதல் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான ஓமந்தூர் இங்குதான் உள்ளது.

2,797 வாக்குகளில் தோல்வியை தழுவிய விடுதலை சிறுத்தைகள்

திண்டிவனம் தொகுதி மறுசீரமைப்புக்குப்பின், 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்தான் விழுப்புரம் மக்களவைத் தொகுதி சந்தித்த முதல் தேர்தலாகும். அ.தி.மு.க, தி.மு.க கூட்டணி, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் களம் கண்டன. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கு போட்டியிட்டது. மிகவும் கடும் போட்டி நிலவிய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் 3,04,029 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் 3,06,826 வாக்குகளை பெற்று வெறும் 2,797 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

ஓங்கிய அ.தி.மு.கவின் கை

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

2014 மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர் ராஜேந்திரன் 4,82,704 வாக்குகள் பெற்று சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் முத்தையனை தோற்கடித்தார். அதாவது, தொகுதியில் பதிவான 77.01 சதவிகித வாக்குப்பதிவில் 45.21 சதவிகித வாக்குகளை ராஜேந்திரன் பெற்றிருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க இந்த தொகுதியில் சுமார் 2 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, 2019 மக்களவைத் தேர்தலில், அ.தி.மு.கவும், தி.மு.க கூட்டணி அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் போட்டியிடுகின்றன.

பின்தங்கிய மாவட்டம் விழுப்புரம்

2006ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில், நாட்டின் மிகவும் பின்தங்கிய 250 மாவட்டங்களில் விழுப்புரமும் ஒன்று என்று குறிப்பிட்டிருந்தது. கரும்பு மற்றும் நெல் சாகுபிடி என முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பகுதியாகவே விழுப்புரம் இருக்கிறது. விழுப்புரத்தில் தொழிற்பேட்டை அமைய வேண்டும் என்பது இங்குள்ளவர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. மொத்தமுள்ள 14,27,874 வாக்காளர்களில், ஆண்கள் 7,14,211 வாக்காளர்களும், பெண்கள் 7,13,480 வாக்காளர்களும் இருக்கின்றனர்.

நேரிடையாக மோதும் பா.ம.க - வி.சி.க

2019ஆம் மக்களவைத் தேர்தலில், விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.கவும், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.கவும் நேரிடையாக மோதுவதால் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. பா.ம.க சார்பில் வடிவேல் ராவணனும், வி.சி.க சார்பில் ரவிக்குமாரும் போட்டியிடுகிறார்கள். விழுப்புரம் தொகுதியில் அ.தி.மு.க 'ஹாட்டிரிக்' சாதனையை நிகழ்த்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அன்புமணியை கேள்வி கேட்டவரை கன்னத்தில் அறைந்த செம்மலை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :