திருநங்கை வாக்காளர்கள் அதிகம் உள்ள வட சென்னை மக்களவைத் தொகுதி - மூன்றாம் பாலினத்தவரின் தேர்வு யார்?

சுதா

வடசென்னை ஆர்.கே.நகர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சுதா, ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக அல்லது அதிமுக என இரண்டு பெரும் கூட்டணியில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்க்கமாக யோசித்துவருகிறார்.

சுதாவைப் போன்ற திருநங்கை வாக்காளர்கள் கடந்த இரண்டு தேர்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயாக கடமையை செய்துவருவதில் பெருமிதம் கொள்வதாக கூறுகின்றனர்.

வரவுள்ள 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றப் பொது தேர்தலின்போது தமிழகத்தில் 5,472 திருநங்கைகள் வாக்களிக்கவுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் திருநங்கை வாக்காளர்களை அதிகமாகக் கொண்ட தொகுதியாக வடசென்னை தொகுதி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி சுமார் 447 திருநங்கைகள் இங்கு வாக்களிக்க உள்ளனர்.

திமுக ஆட்சியில் திருநங்கை சமூகத்திற்கு வாரியம் அமைக்கப்பட்டது என்பதாலும், அதிமுக ஆட்சியில் திருநங்கைகளுக்கு இலவச வீடு கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதாலும், இரண்டு கட்சிகளின் பங்களிப்பை மட்டும் வைத்து தனது ஓட்டை தீர்மானிக்க முடியாது என்கிறார் சுதா.

''எங்கள் சமூகத்திற்கு இரண்டு கட்சியை சேர்ந்தவர்களுக்கும் உதவி இருக்கிறார்கள். போட்டியிடும் வேட்பாளர்களின் செயல்பாடுகளை ஆலோசித்து முடிவு எடுக்கவேண்டும். தேர்தல் விவகாரங்களை திருநங்கைகள் விவாதிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியை தருகிறது. ஓட்டு கேட்டு வரும் தலைவர்களிடம் கேள்விகளை வைக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்,''என்கிறார் சுதா.

மேலும் திருநங்கைகள் அரசியல் பல கட்சிகளில் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் கட்சிகளில் பொறுப்புகள் கொடுக்கப்பட்டால், அவர்களின் தலைமைப் பண்பை வளர்க்க முடியும் என்றும் நம்புகிறார் சுதா.

''இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து ஓட்டுரிமை இல்லாதவர்களாக இருந்த திருநங்கை சமூகத்திற்கு சமீபத்தில்தான் அங்கீகரம் கிடைத்துள்ளது. தற்போது கட்சி உறுப்பினர்களாக சில திருநங்கைகள் உள்ளனர். அடிமட்டத் தொண்டர் என்ற இடத்தில் இருந்து, அவர்களுக்கு அரசியல் பொறுப்புகளும் வழங்கப்பட வேண்டும். அடுத்து வரும் தேர்தலில் சட்டமன்ற தொகுதியில் திருநங்கை வேட்பாளருக்கு தமிழக அரசியல் கட்சிகள் வாய்ப்பு கொடுத்தால், இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நாம் உதாரணமாக இருப்போம்,''என்கிறார் சுதா.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு திருநங்கையும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சமூக ஆர்வலர் ஹரிஹரன் திருநங்கை சமுதாயத்திடம் ஓட்டு போட வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்று கூறுகிறார்.

''கடந்த இரண்டு தேர்தல்களில் திருநங்கைகள் வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றனர்.

அவர்கள் ஒவ்வொருவரின் வாக்கும் முக்கியம். ஒரு ஓட்டு கூட தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று அவர்களிடம் கூறுகிறோம். தயங்காமல் வாக்கு சாவடிக்கு சென்று தங்களது தேர்வு யார் என்பதை சுயமாக முடிவுசெய்து வாக்களிக்கவேண்டும் என்று கூறுகிறோம். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கூட ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் அல்லது நல்ல வேட்பாளருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுக்கமுடியும் என்பதை விளக்கிவருகிறோம்,''என்கிறார் ஹரிஹரன்.

தமிழகம் முழுவதும் உள்ள 5,472 திருநங்கைகளும் தங்களது வாக்கை செலுத்தி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என்பதை வலியுறுத்திவருவதாகக் கூறினார் ஹரிஹரன்.

''கடந்த தேர்தலில் 3,000க்கும் குறைவான திருநங்கைகளுக்கு மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 5,000 தாண்டியுள்ளது. இதுபோல வாக்காளர் அட்டை பெறுவதற்கு சிக்கல் இருந்தால், அவர்களுக்கு உதவி வருகிறோம். 18 வயதை தாண்டிய திருநங்கைகள் பலர் அடையாள அட்டை பெறாமல் உள்ளனர். அடுத்த தேர்தலில் திருநங்கை வாக்காளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,''என்கிறார் ஹரிஹரன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :