ராஜீவ் காந்தி - மு.க.ஸ்டாலின் வெற்றியும், சஞ்சய் காந்தி-அழகிரி தோல்வியும்: வாரிசு அரசியல் எப்படி வெல்கிறது?

  • ராஜன் குறை கிருஷ்ணன்
  • அரசியல் விமர்சகர்
ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் சோனியா, ராகுல், பிரியங்கா.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அவரது மனைவி சோனியா, பிள்ளைகள் ராகுல், பிரியங்கா.

(கட்டுரையில் இடம் பெற்றுள்ளவை கட்டுரையாளரின் கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. -ஆசிரியர்)

மக்களாட்சி என்பது மன்னராட்சிக்கு மாற்றாக உருவானது. மன்னராட்சியில் மன்னரின் வாரிசு மன்னராக முடிசூடுவார். அவர் மன்னராக தகுதியானவரோ இல்லையோ அவர்தான் முடி சூட வேண்டும். ஏனெனில் மன்னர் என்ற பதவி ஒரு குறியீடுதான்; அரசின் தலைவராக அவர் இருப்பாரே தவிர, அவர் எடுக்க வேண்டிய முடிவுகளை மந்திரி பிரதானிகள் அனைவரையும் கலந்துதான் எடுக்க முடியும்.

அவர்களில் ஆற்றல் மிக்கவர்கள் பெரும்பாலும் அரசின் நடவடிக்கைகளை தீர்மானிப்பார்கள். சில சமயம் அரசிமார்கள், அரசரின் உறவினர்கள் ஆகியோரும் செல்வாக்கு செலுத்துவார்கள். நாட்டில் முக்கியமானவர்கள் கூட கருத்துக்களை தெரிவிப்பார்கள். மக்கள் கூட முறையிடுவார்கள்; சில சமயங்களில் கிளர்ச்சி கூட செய்வார்கள். அதனால் அதிகாரம் என்பது குறியீட்டு ரீதியாக மன்னரிடம் இருந்தாலும், நடைமுறையில் அது பலவிதமாக பரவியிருப்பது தவிர்க்க முடியாதது.

பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சிக்கலான நடைமுறை

மன்னர்கள், பிரபுக்கள் என்று அதிகாரத்தின் குவிமையங்கள் இருந்ததை மேலும் பரவலாக்கும் நோக்கோடு மக்களாட்சி கருத்தாக்கங்கள் உருவாயின. குறிப்பாக அச்சு ஊடகம் உருவாகி பரவலான போது சமூகப் பரப்பை ஒருங்கிணைப்பது சாத்தியமானது. அதே சமயம் வர்த்தகம், தொழில், உற்பத்தி பெருகி முதலீட்டிய நடைமுறைகள் வலுவடைந்தன.

இவற்றால் மக்கள் பிரதிநிதிகள் கூடி விவாதித்து அரசாள்வது என்ற ஒரு நடைமுறை பழக்கத்திற்கு வந்தது. இங்கிலாந்து போன்ற நாடுகளில் மன்னர்களும், பிரபுக்களும் தொடர்ந்தார்கள் - அதிகாரம் மக்கள் பிரதிநிதிகள் கைக்கு மாறியது. வேறு சில நாடுகளில் மன்னர்கள், ஜமீந்தார்கள், பிரபுக்கள் ஆகியவர்கள் வழக்கிழந்து போனார்கள். அதிகாரம் முழுமையாக மக்கள் பிரதிநிதிகள் கைக்கு வந்தது. இது முக்கியமான வரவேற்கத்தக்க மாற்றம் என்பதில் ஐயமில்லை. இதன் விளைவாக எளிய மக்கள் பிரச்சினைகள் அதிகம் கவனம் பெறுகின்றன. அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பதால் அவர்கள் கோரிக்கைகளை ஆட்சி செய்பவர்கள் நிறைவேற்ற வேண்டிய தேவை இருக்கிறது. இது முழுமையாக நடைபெறாவிட்டாலும், முற்றிலும் புறக்கணிக்கப்படவும் முடியாது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மு.கருணாநிதி - மு.க.ஸ்டாலின்

அதே சமயம் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது, அவர்களுக்குள் சிலர் தலைவர்களாக உருவாவது ஆகிய நடைமுறைகள் சிக்கலானவை. எப்படியானாலும் அடிப்படையில் அதிகாரம் ஒரு நபரிடம் குவிமையம் கொள்வது என்பதை தவிர்க்க முடியாது. ஏனெனில் பல்வேறு கருத்துக்கள் முரண்பட்டு நிற்கும்போது யாராவது ஒருவர் முடிவை எடுக்கும் நிலையில் இருந்தால்தான் ஆட்சி சாத்தியமாகும். அப்படியான அதிகாரம் படைத்தவர் இந்தியாவில் பிரதமர். அமெரிக்காவில் அதிபர். இந்திய மாநிலங்களில் ஆட்சியின் தலைவர் முதல்வர்.

மாறாத அதிகார குவி மையம்

எப்படி மன்னர்கள் அதிகாரக் குவிமையமாக இருந்தார்களோ அதே போல இவர்கள் அதிகார குவிமையமாக இருக்கிறார்கள். அரசாங்கத்தின் தலைவராக பிரதமரும், அரசின் தலைவராக ஜனாதிபதியும் இருக்கிறார்கள். ஜனாதிபதி ஒரு சம்பிரதாயமான குறியீட்டுத் தலைவர். அதிகாரத்தின் குவிமையம் மக்களால், மக்கள் பிரதிநிதிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர்தான். பிற அமைச்சர்கள் பழைய மந்திரி பிரதானிகள் போல செயல்படுகிறார்கள்.

மன்னர்கள் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை; வம்சாவழியாக பதிவியேற்பார்கள், ஆயுட்காலம் முழுவதும் ஆட்சி செய்வார்கள். இந்த மக்கள் பிரதிநிதி பிரதமர்கள் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்வார்கள். அதன்பிறகு மீண்டும் தேர்தலை சந்திப்பார்கள்.

இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது எப்படி அந்த அதிகார குவிமையத்திற்கு இவர்கள் வருகிறார்கள் என்பதுதான் வேறுபடுகிறதே தவிர, அதிகார குவிமையமாக இவர்கள் இருப்பது மாறவில்லை. அதனால் நாட்டை ஆளும் ஒருவர் என்ற அளவில் மன்னரும், பிரதமரும் ஒன்று போலத்தான் இருக்கிறார்கள். மன்னரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் பிரதமர் இன்னமும் உரிமையுடன் அதிகாரத்தை செலுத்த முடியும். அதற்கு சட்டம் வழிவகை செய்கிறது.

இப்படி அதிகாரத்தின் குவிமையமாக ஒரு மனிதரை நியமிக்காமல் பெரிய ஒரு மக்கள் தொகுதி தன்னையே ஆண்டுகொள்வது கடினமாக இருக்கிறது. சமூகத்தில் பல முரண்பாடுகளும், அதிகாரப் போட்டிகளும் நிலவும். அதனால் அவற்றையெல்லாம் கடந்த ஒரு புள்ளியில் ஒரு அதிகாரக் குவிமையம் இருக்கத்தான் வேண்டும். ஒரு அலுவலகத்திற்கு, நிறுவனத்திற்கு தலமை அதிகாரியாக ஒருவர் இருப்பதைப் போல. உச்ச நீதிமன்றத்திற்கும் ஒரு தலமை நீதிபதி இருப்பதுபோல எப்போதுமே தனியொரு தலமைத்துவம் தேவை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ்.

சுருக்கமாகச் சொன்னல் தலமைத்துவம் என்பது தனித்துவம் என்பதுடன் இணைந்துதான் செயல்படுகிறது. ஏனெனில் முடிவுகளை இரண்டுவிதமாக எடுக்க முடியாது. ஒருவிதமாகத்தான் எடுக்க முடியும். எல்லா முடிவுகளுமே தனியானவை - அதாவது ஒற்றையானவை. அதனால் அந்த முடிவுகளை இறுதியாக எடுக்க தனியான ஒருவரை நாம் ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.

வாரிசு அரசியல் குறித்த கேள்வி

சரி இப்படி அதிகார குவிமையங்களாக தலைவர்கள் தேச அளவிலும், மாநில அளவிலும், உள்ளூர் அளவிலும் சிலர் உருவாகலாம். ஆனால் அவர்கள் பிள்ளைகள் அவர்கள் இடத்திற்கு, தலமைத்துவத்திற்கு "வம்சாவழியாக" வரலாமா என்பதே வாரிசு அரசியல் குறித்த கேள்வி. உலகின் பல பகுதிகளிலும் இந்த நடைமுறை இருக்கிறது. செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்த வாரிசுகள் மக்களாட்சி முறையில் மட்டுமல்ல, புரட்சிகர இயக்கங்களிலும், கூட தலைமைக்கு வருகிறார்கள். இதை பரிசீலிக்கும் முன் வம்சாவழி தொடர்ச்சி என்பது சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதையும் ஆராய வேண்டும்.

சமூகத்தில் அரசு மட்டுமே அதிகாரத்தின் ஒரே குவிமையம் அல்ல. தொழில்கள், வர்த்தகம், சேவைத் துறைகள், அறிவுத்துறைகள் என பல குவிமையங்கள் உள்ளன, குறிப்பாக முதலீட்டிய காலகட்டத்தில் கார்ப்பரேட் எனப்படும் தொழில் வணிக நிறுவனங்கள் சமூக நடவடிக்கைகளை, மக்கள் வாழ்க்கை முறைகளை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

உற்பத்தித் துறையில் மக்கள் அனைவரும் பங்குகளை வாங்கி முதலீடு செய்யும் ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனியை துவங்கி, அதில் அதிக பங்குகளை வைத்திருப்பவர் அந்த கம்பெனியின் முதலாளியாக இருப்பார். முடிவுகளை எடுப்பார். பங்குதாரர்களில் சிலர் அதன் இயக்குனர் குழுவில் இருப்பார்கள். ஆனாலும் அன்றாடம் முடிவுகளை ஒருவர் எடுப்பார்.

அவரது திறமையால் அந்த நிறுவனம் பெரிதும் வளர்ச்சியடைந்து அனைவரும் இலாபம் பெறுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவருக்குப் பின் அவருடைய பங்குகள் அவருடைய மகனுடைய சொத்தாக இருக்கும்போது அந்த மகன் நிறுவனத்தின் தலைவராவார். அவர் பலரது ஆலோசனைகளையும் பெற்றுதான் அந்த நிறுவனத்தை நடத்துவார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நேரு பரம்பரை.

ஆனாலும் அந்த கம்பெனி குடும்பச் சொத்தாகவே பார்க்கப்படும். திருபாய் அம்பானி துவங்கிய ரிலையன்ஸ் நிறுவனம் அவரது மகன் முகேஷ் அம்பானியின் தலைமையில் நடக்கிறது. இதுபோல எத்தனையோ நிறுவனங்களில் வம்சாவழியாக தலைமை தொடர்வது ஏற்கப்படுகிறது. காரணம் சொத்துரிமை வம்சாவழியாக இருக்கிறது. தந்தையின் சொத்து பிள்ளைகளுக்கு வருகிறது.

மருத்துவம், சட்டம், தணிக்கை போன்ற பல தொழில்களில் தந்தை, தாய் துவங்கிய நிறுவனங்களை வாரிசுகளும் அதே துறையில் பயின்று நடத்துகிறார்கள். தந்தையிடம் வைத்தியம் பார்த்துக்கொண்ட குடும்பங்கள், சட்ட ஆலோசனை பெற்ற குடும்பங்கள் பிள்ளைகளிடம் தங்கள் வம்சாவழி தொடர்பை பேணுகிறார்கள். மூன்று தலைமுறைகளாக இவர்கள்தான் எங்கள் மருத்துவர்கள், இவர்களிடம்தான் துணிகளை வாங்குவோம், நகைகளை வாங்குவோம் என்று சொல்வது பெருமைக்குரியதாக இருக்கிறது.

அறிவுத்துறைகள், கலைத்துறைகளில் கூட தந்தையின் திறன்களும், தொடர்புகளும் பிள்ளைகளுக்கு உதவுகின்றன. இந்தி சினிமாவில் பிருத்வி ராஜ்கபூர் என்று ஒரு நடிகர் புகழ்பெற்றவராக இருந்தார். அவருடைய பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள் என இன்று பல கபூர்கள் இந்தி பட உலகில் இருக்கிறார்கள். சிலர் நடிப்பிலும், புகழிலும் வெற்றி பெறுகிறார்கள்.

பட மூலாதாரம், Rajan Kurai

படக்குறிப்பு,

கட்டுரையாளர்: ராஜன் குறை

சிலர் அவ்வளவாக வெற்றி காண்பதில்லை. ஆனால் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இயல்பாகவே சினிமா நடிப்பு ஒரு சாத்தியமாக இருக்கிறது. சிறுவயதிலிருந்தே சினிமா உலகத்தில் புழங்குகிறார்கள். பழகுகிறார்கள். குடும்பத் தொடர்புகள் தொடர்கின்றன. நல்ல நடிப்புத் திறனிருந்து வாய்ப்புகள் கிடைக்காத இளைஞர் "நான் என்ன கபூர் குடும்பத்திலா பிறந்தேன்?" என்று புலம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் குடும்பப் பின்னணி இல்லாத பல புதிய நடிகர்களும் துறையில் தோன்றிய வண்ணம்தான் இருக்கிறார்கள்.

கலாசார மூலதனம்

இதில் ஒரு சில அம்சங்கள் பரிசீலனைக்கு உரியவை. ஒன்று திறன்கள் என்பதும் ஒருவகை மூலதனம். இதை கலாசார மூலதனம் என்று குறிப்பிடுவது உண்டு. ஒரு வயலின் கலைஞரின் குழந்தை, நான்கு வயதிலேயே வயலினை கையிலெடுத்து வாசிக்க வாய்ப்பிருக்கும். அது தந்தை பயிற்சி செய்வதை கவனித்து மிக விரைவாக அதைக் கற்றுக் கொள்ளும். அவருடைய துறை சார்ந்த நண்பர்களும் அந்த குழந்தையை ஊக்குவிப்பார்கள். அது வயதான பின் தந்தையை பின்பற்றி இசைக்கலைஞராக வாழும்.

இரண்டாவது, சமூக தொடர்புகள். அந்த கலைஞரின் பெயருக்கு ஒரு மரியாதை இருக்கும். அவர் மகன் என்றதும் எப்படி வாசிக்கிறான் என்று கேட்க பல பேர் வருவார்கள். வர்த்தகத்தில், தொழில்களில் இது நன்னம்பிக்கை, ஆங்கிலத்தில் குட்வில் என்று கூறப்படும்.

மூன்றாவது தொடர்ச்சி சார்ந்த நம்பிக்கை. ஒருவரது ஆயுட்காலம் கடந்தும் அவரது திறன்கள் அவரது வாரிசுகள் மூலம் தொடர்கின்றன என்ற எண்ணம். ஒரு இசைக்கலைஞரின் சிஷ்யர் அவரது வாரிசாக இருக்கலாம்; அவரது மகனே சிஷ்யனாக இருந்து வாரிசாக இருக்கும்போது இன்னமும் காலம் கடந்த தொடர்ச்சியின் மீது நம்பிக்கை வருகிறது. இது கடவுள் நம்பிக்கை போன்றது. இது பிற்போக்குத்தனமாக பல சமயங்களில் இருந்தாலும், சமூகத்தின் இன்றியமையாத அங்கமாக இருக்கிறது.

இந்த வம்சாவழி தொடர்ச்சி ஜாதீயம் போல இருக்கிறதே, மூடநம்பிக்கையாக இருக்கிறதே என்று நினைப்பது சரிதான். ஆனால் நல்லவேளையாக வாரிசுகள் திறமைசாலிகளாக இல்லையென்றால் அவர்களால் வெற்றியடைய முடிவதில்லை. துவக்கத்தில் ஒரு இசைக்கலைஞரின் மகன் என்பதற்காக வாய்ப்புகள் கிடைக்கலாமே தவிர, பின்னர் நல்ல திறனாளர் இல்லையென்றால் அது பயனளிக்காது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்திரா - சோனியா -ராஜீவ்

இப்போது மீண்டும் அரசியலுக்கு வருவோம். அதிலும் இந்த சிறுவயதிலிருந்தே கிடைக்கும் அனுபவத்தின் மூலம் திறன் உருவாதல் சாத்தியம். அதிலும் குட்வில் இருக்கும். அதற்குமேல் மூன்றாவது அம்சமான நம்பிக்கை என்பதற்கு வேறு சில கூடுதல் பரிமாணங்களும் உண்டு. அது என்னவெனில், பல்வேறு முரண்களை கடந்து உருவான ஒரு குவிமையமாக ஒரு தலைவர் இருக்கிறார்; அந்த இடத்திற்கு அந்த முரண்களின் ஒரு பகுதி வருவது என்பது அரசியல் அமைப்பின் கட்டுக்கோப்பை சீர்குலைத்துவிடும் ஆபத்து இருக்கிறது. எனவே வாரிசு அந்த முரண்களின் சமநிலையை பேணுவதற்கு உதவுகிறது. இந்த காரணத்தினால்தான் அரசுரிமை வாரிசுரிமையாக முதலில் இருந்தது. மக்களாட்சியை பொறுத்தவரை கட்சிகளும், இயக்கங்களும் இப்படி ஒரு தேர்வை செய்தாலும், அந்த வாரிசுத் தலைவர் திறனுள்ளவராக இல்லையென்றால் சிறப்பாக இயங்க முடியாது.

நேரு பரம்பரை

இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஜவஹர்லால் நேரு தனிப்பெரும் தலைவராக இந்த நாட்டிற்கு பிரதமாரகப் பொறுப்பேற்று வழிநடத்தினார். அவருடைய தனித்துவமிக்க ஆளுமை இந்திய வரலாற்றின் திசையினைத் தீர்மானிப்பதாக இருந்தது. அவருடைய தந்தை மோதிலால் நேருவும் புகழ்பெற்ற காங்கிரஸ் தலைவர் என்றாலும், மகாத்மா காந்தி ஜவஹர்லாலை தன் அரசியல் வாரிசு என்று அறிவித்தார். நேரு 1964 ஆம் ஆண்டு மரணமடைந்தபோது மிகப்பெரிய வெற்றிடம் நிலவியது. அவருடைய மகள் இந்திரா அரசியலில் ஆர்வம் கொண்டு, அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். ஆனாலும் நேருவிற்குப் பின் லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார்.

அவரால் நேரு அளவு அனைவரின் ஆதரவையும் திரட்டிக்கொள்ள முடியவில்லை. அவர் அகால மரணமடைந்தபோது கட்சியில் பல பிளவுகள் தோன்ற வாய்ப்பிருந்தது. அதை தவிர்க்க விரும்பிய மூத்த காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக காமராஜர் இந்திராவை பிரதமர் பதவி ஏற்கச்சொன்னார். நேருவின் மகள் என்பதால் மீண்டும் அந்த முரண்களை கடந்த குறியீட்டுத் தலைமையாக இவர் விளங்க முடியும் என்று நினைத்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

வசுந்த்ரா ராஜே சிந்தியா.

ஆனால் ஒரு சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி பிளவுண்டு, காமராஜரே இந்திராவிற்கு எதிரணியில் நின்றார். கட்சி பிளவுண்டாலும், மக்கள் இந்திராவை தனித்துவமிக்க தலைவராக அங்கீகரித்தார்கள்; ஆதரவளித்தார்கள். பாகிஸ்தான் போர், பங்களா தேஷ் விடுதலைக்குப் பிறகு இந்திராவின் புகழ் பன்மடங்கு உயர்ந்தது. அவர் நேருவின் மகள் என்பதைக் கடந்து தனிப்பட்ட முறையில் மக்கள் ஆதரவைப் பெற்றவரானார்.

இந்திரா தன் மகன் சஞ்சய் காந்தியை அரசியலில் ஈடுபடுத்தினார். நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். சஞ்சய் நெருக்கடி நிலை காலத்தில் அதிகாரத்தை தன்னிடம் குவித்துக்கொண்டதால் இந்திராவிற்கே அவப்பெயரை ஏற்படுத்தினார். நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டு தேர்தல் நடந்தபோது இந்திரா, சஞ்சய் என அனைவரும் படுதோல்வி அடைந்தார்கள். இந்திராவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சியால் உள்முரண்பாடுகள் காரணமாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இயலவில்லை. இந்திரா காந்தி மீண்டும் தேர்தலில் வென்று பிரதமரானார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பிஜு பட் நாயக்கின் மகனும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக்.

சஞ்சய் காந்தி துரதிர்ஷ்டவசமாக விமான விபத்தில் இறந்தார். அதன்பின் இந்திரா தன் காவலாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவரது மூத்த மகன் ராகுல் காந்தி வங்களாத்தில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். இந்த அகால மரணம் நாட்டில் மிகுந்த பதற்றத்தை உருவாக்கலாம் என்று நினைத்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள், உடனடியாக ராஜீவ் காந்திக்குப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்கள். மன்னராட்சி போன்றே இது நிகழ்ந்தது. ஆனால் இரண்டு முக்கிய நிகழ்வுகள் இதைத் தொடர்ந்தன.

பதிவியேற்ற குறுகிய காலத்திலேயே தேர்தலை சந்தித்த ராஜீவ் காந்தி மிகப்பெரிய அளவு வெற்றி பெற்றார். இந்திய மக்கள் அவர் தலைமைக்கு ஏகோபித்த ஆதரவு அளித்தனர். ஆனால் அதற்கு அடுத்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் கொல்லப்பட்டார்.

மக்கள் கையில் வாரிசுகளின் வெற்றி

இந்த முக்கியமான நேரு குடும்ப உதாரணத்திலிருந்து பெறப்படுவது என்னவென்றால் வாரிசுகள் அரசியல் தலைவர்களானாலும் அவர்களை ஏற்பதும், மறுப்பதும் முதலில் கட்சிக்கார ர்கள், பின்னர் மக்களின் கையில்தான் இருக்கிறது. வாரிசு என்பதாலேயே யாரும் வெற்றி பெறுவதில்லை; அதன் காரணமாகவே யாரும் தோற்பதுமில்லை. ஆனால் கட்சித் தலைமையில் நேரு குடும்பத்தவர் இருப்பது காங்கிரஸ் கட்சியின் உள்முரண்பாடுகளை கடந்து அதைக் கட்டுக்கோப்பாக கொண்டு செல்ல உதவுகிறது.

இந்திய மாநிலங்கள் பலவற்றிலும், மாவட்ட அளவிலும் புகழ்பெற்ற வெற்றிகரமான அரசியல் தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருகிறார்கள். கட்சி அணியினரின் விருப்பமாகவோ, மக்கள் விருப்பமாகவோ அது அமைகிறது. இதில் பலர் வெற்றிபெற இயலாமல் தோற்கின்றனர். பலர் வெற்றி பெற்று தொடர்கின்றனர். சஞ்சய் காந்திக்கு நற்பெயர் கிடைக்கவில்லை; ராகுல் காந்திக்கு கிடைத்தது. மு.க.அழகிரிக்கு நற்பெயர் கிடைக்கவில்லை. மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ளது.

இப்படியான வாரிசுகளின் தலைமையேற்பு இயக்கத்தில் உள்ள பிற திறமையாளர்களின் வாய்ப்பைத் தடுக்கிறது என்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே திறமையாளர்களாக இருந்தால் அவர்களால் அவர்களை விட திறமை குறைந்த வாரிசுகளை வெல்ல முடியும் என்பதுதான் உண்மை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நேரு - இந்திரா.

மேலும் தலைமை என்பதும், பதவி என்பதும் அதிகார குவிமையத்தின் குறியீடுதான். உண்மையான அரசியல் திறமையாளர்கள் என்றும் கணிசமான அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளத்தான் செய்வார்கள். இவர்கள் பல சமயங்களில் சமூகத்தில் புகழ்பெறாமல் கூட இருப்பார்கள். "நிழல் மனிதர்கள்" என அழைக்கப்படுவார்கள்.

இந்திரா காந்தியின் செயலராக இருந்த ஆர்.கே.தவான் ஒரு உதாரணம். சைனாவில் டெங் சியோபிங், கலாசார புரட்சியின் போது தொழிற்சாலையில் வேலை பார்க்க அனுப்பப் பட்டவர், மீண்டும் அரசின் முக்கிய பதவிக்கு திரும்ப அழைத்துக்கொள்ளப்பட்டார். மாவோவிற்கு பிறகு தலைவராகி சீன பொருளாதாரத்தை கட்டுப்படுத்தப்பட்ட முதலீட்டிய பொருளாதாரமாக மாற்றினார்.

மக்களாட்சி என்பது அதிகாரப் பகிர்வை இலட்சியமாகக் கொண்டாலும், தனித்துவமிக்க நபர்கள் அதிகாரத்தின் குவிமையமாக மாறுவதை தடுக்க முடியாது. அப்படி மாறக்கூடியவர்களின் குறியீட்டு அதிகாரம் அவர்களுக்குப் பின் அவர்கள் வாரிசுகளுக்கு செல்வதையும் தடுக்க முடியாது. ஆனால் வாரிசாக இருப்பதால் மட்டுமே ஒருவர் மக்களாட்சியில் தலைமையை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதால் மக்களாட்சிக்கு முற்றிலும் விரோதமானது வாரிசுத் தலமை என்று சொல்ல முடியாது.

ஒரு பெண் தன் துணைவரை தானே தேர்ந்தெடுக்கொள்ளும் உரிமை வேண்டும் என்று கருதும்போது நாம் அந்த பெண்ணை உறவின்முறை இணையையோ, ஜாதிக்குள்ளான இணையையோ தேர்ந்தெடுக்க கட்டாயப்படுத்தக் கூடாது என்கிறோம். இது நாகரீகம். அதற்காக அந்தப் பெண் தானாக விரும்பி தன் மாமன் மகனையோ, சொந்த ஜாதிக்காரரையோ திருமணம் செய்துகொண்டால் அதை தடுக்க முடியாது.

அப்படி தடுத்தால் நமது அடிப்படை விழுமியான "தன் துணையை தானே தேர்வு செய்வது" என்பது பாழாகிவிடும். அதேபோலத்தான் அரசியல் தலைவர்களின் வாரிசுகள் தலைவராவது; கட்சிக்காரர்களும், விரும்பி மக்களின் வாக்களித்து தேர்வு செய்தால் அதைத் தடுப்பது என்பது மக்களாட்சிக்கே எதிரானதாகும்.

உண்மையான அரசியல் புரிதல் இன்மையே இப்படி வாரிசு அரசியலை மக்களாட்சி விழுமியங்களுக்கு எதிரானதாகப் பார்க்கும். அதுவும் மக்களாட்சியின் ஒரு சாத்தியம் எனத் தெளிவதே முதிர்ச்சி. ஏனெனில் அரசியல் தலைமை என்பது சமூகத்தில் செயல்படும் பல்வேறு அதிகார வலைப்பின்னல்களில் ஒரு கண்ணி அல்லது முடிச்சு என்பதே யதார்த்தம்.

(ராஜன் குறை கிருஷ்ணன் புதுதில்லி அம்பேத்கர் பல்கலைகழகத்தில் பணியாற்றி வருகிறார். மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர் திராவிட இயக்கம், தமிழ் சினிமா, இலக்கியம், கலாசாரம் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருபவர்).

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :