காஷ்மீர்: தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 12 வயது சிறுவன் - கள ஆய்வு

  • மாஜித் ஜஹாங்கீர் மீர், மொஹல்லா ஹாஜன்
  • (இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் இருந்து), பிபிசிக்காக
படக்குறிப்பு,

அப்துல் ஹாமித் மீர்

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் மீர் மொஹல்லா பகுதியின் ஹாஜன் என்ற ஊரில், ஏறக்குறைய சிதைந்து போயிருக்கும் ஒரு வீட்டின் முன் மக்கள் கூட்டமாக நிற்கின்றனர்.

மொஹம்மத் ஷஃபி மீர் என்பவரின் வீடு அது. அவருடைய 12 வயது மகன் ஆதிஃப் அஹமத் மீர் என்ற சிறுவனையும் அவனது சித்தப்பாவையும் தீவிரவாதிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். பாதுகாப்புப் படையினர் வீட்டை சுற்றி வளைத்ததும், தீவிரவாதி்களுடன் மோதல் ஏற்பட்டது. பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்த சிறுவனை தீவிரவாதிகள் கொன்றுவிட்டனர்.

அக்கம்பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சோகத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்கின்றனர்.

வியாழனன்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் வீடு மிகவும் சேதமடைந்துவிட்டது. வீட்டிற்கு அருகில் போடப்பட்டிருக்கும் பந்தலில் அமர்ந்திருக்கும் ஆதிஃபின் தந்தை அமைதியாக இருக்கிறார்.

படக்குறிப்பு,

ஆதிஃப் அஹ்மத் மீர்

பெருங்குரலில் அழுதுக் கொண்டிருக்கும் ஆதிஃபின் தாய் ஷாமீனா பானோவை, பிற பெண்கள் ஆசுவாசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மீர் அந்த சம்பவத்தைப் பற்றி பேசுகிறார். "வியாழக்கிழமையன்று, பாதுகாப்புப் படையினர் வீட்டை நான்கு புறங்களிலும் சுற்றி வளைத்துவிட்டனர். அந்த சமயத்தில் வீட்டிற்குள் நாங்கள் எட்டுப் பேர் இருந்தோம். அதில் ஆறு பேர் எப்படியோ வெளியே வந்துவிட்ட நிலையில் என் தம்பி அப்துல் ஹாமித் மீர் மற்றும் மகன் ஆதிஃப் உள்ளே சிக்கிக் கொண்டார்கள்".

"அவர்கள் இருவரையும் வெளியே கொண்டு வர நாங்கள் பல முயற்சிகள் செய்தோம். ஆனால் தீவிரவாதிகள் விடவில்லை, எங்கள் கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தம்பி குல்ஜார் எப்படியோ தப்பித்து வந்துவிட்டான். ஆனால், சிறுவன் ஆதிஃப்பால் வெளியே வரமுடியவில்லை. ஆதிஃபை விட்டுவிடுமாறு உள்ளே இருப்பவர்களிடம் நாங்கள் ஒலிபெருக்கியில் பேசினோம். ஆனால் அவர்கள் எங்கள் பேச்சை கேட்கவேயில்லை" என்று சோகத்துடன் கூறுகிறார் ஆதிஃபின் அப்பா.

போலீசாரும் தன் மகனை உயிருடன் வெளியே கொண்டுவர அவர்களால் ஆன பல முயற்சிகளை செய்தார்கள் என்று கூறும் மீர், ஆதிஃபின் தாய், கிராமத்தின் வக்ஃப் கமிட்டி என பலரும் முயற்சி செய்தும் மகனை காப்பாற்ற முடியவில்லை என்று கூறி அழுகிறார்.

தீவிரவாதிகள், இருவரை பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்ததன் காரணம் என்ன என்று அவரிடம் கேட்டோம். பணயக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டால், பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். மாலை வரை அவர்கள் காத்திருந்தார்கள். இவர்களை வைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் தீவிரவாதிகள் ஈடுபடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால், என் மகனை கொன்றுவிட்டார்கள்" என்று ஆதிஃபின் அப்பா குமுறுகிறார். இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அலி மற்றும் ஹபீப் ஆகிய இருவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

படக்குறிப்பு,

மோதலில் சிதைந்த மீரின் வீடு

மகனை விடுவிக்குமாறு ஆதிஃபின் தாய் தீவிரவாதிகளிடம் மன்றாடும் வீடியோ வைரலாகியிருக்கிறது. பாதுகாப்புப் படையினருடன் இருக்கும் ஷரீஃபா பானோ, தனது மகனை விட்டு விடுமாறு கோருகிறார்.

"அல்லாவின் பெயரில், நபிகள் நாயகத்தின் பெயரில் என் மகனை விட்டு விடுங்கள். நான் உங்களுக்கு சாப்பாடு போட்டேனே, அல்லாவுக்காக மகனை விட்டு விடுங்கள்" என்று அந்த தாய் மன்றாடி கேட்கும் காட்சிகள் வீடியோவில் இருக்கின்றன.

ஆனால், வீட்டிற்குள் ஒளிந்துக் கொண்டிருந்த தீவிரவாதிகளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. தீவிரவாதிகளிடம் பணயக்கைதியாக இருந்த ஆதிஃபின் சித்தப்பா குல்ஜார் அஹ்மத் மீர், நடுங்கும் குரலில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. "நான் வெளியில் இருந்து கதவை மூடிவிட்டேன். எப்படியே வெற்றிகரமாக அவர்களிடம் இருந்து தப்பித்துவிட்டேன். அவர்களுடனே நாங்கள் இருக்கவேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். தீவிரவாதிகள் இருவரும் காயமடைந்திருந்தனர். நான் வீட்டில் இருந்து தப்பித்து வரும்போது, ஆதிஃப் நன்றாகத் தான் இருந்தான்" என்று அந்த வீடியோவில் அவர் கூறியிருக்கிறார்.

படக்குறிப்பு,

ஆதிஃபின் தந்தை மொஹம்மத் ரஃபி மீர்

கேமராவின் முன் வந்து எதையும் பேச அப்துல் ஹாமித் மீர் விரும்பவில்லை.

தனது பெயரை தெரிவிக்கவேண்டாம் என்ற கோரிக்கையோடு, ஆதிஃபின் உறவினர் ஒருவர் என்னிடம் பேசினார். "சிறுவன் ஆதிஃபை மிகவும் கொடூரமாக கொன்றிருக்கிறார்கள். அவர்கள் ஜிகாதிகள் இல்லை, கொடுங்கோலர்கள்" என்று வெறுப்பை உமிழ்கிறார்.

ஆறாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஆதிஃபுக்கு இரண்டு மூத்த சகோதரிகள் இருக்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு பிறகு சிறுவன் ஒருவரை தீவிரவாதிகள் பிணைக் கைதியாக பிடித்து வைத்திருக்கும் சம்பவம் நடந்துள்ளது.

ஆதிஃபின் இறுதிச் சடங்குகள் வெள்ளியன்று நடைபெற்றது, அதில் பெரும்திரளாக மக்கள் கலந்து கொண்டார்கள்.

வைரலாகும் வீடியோவில் ஆதிஃபின் மற்றுமொரு உறவினரும், சிறுவனை விடுவிக்குமாறு கெஞ்சுகிறார். "அவனை வெளியே வர விடு... இது தான் ஜிகாதா? அல்லா உன்னை இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கவே மாட்டார்" என்று அவர் கூறுவது வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

பந்திபோரா போலீஸ் கமிஷனர் ராகுல் மலிக், வெள்ளிக்கிழமையன்று அந்த என்கவுண்டர் பற்றி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

"இது திடீரென்று எடுக்கப்பட்ட நடவடிக்கை. முதல் இரண்டு மணி நேரத்தில் ஆறு பேரை காப்பாற்றினோம். மேலும் இருவர் வீட்டிற்குள்ளே சிக்கிக் கொண்டிருப்பது பிறகுதான் தெரியவந்தது. இந்த நிலையில், பிணைக் கைதியாக இருக்கும் அவர்களை மீட்க எல்லா முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

ஒருவர் வெளியில் வந்துவிட்டார். அவரிடம் விசாரித்ததில், தீவிரவாதி அலி, ஆதிஃப்பை பிணைக் கைதியாக வைத்திருப்பதாக சொன்னார். நாங்கள் தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாகவே, அவர்கள் சிறுவனை கொன்றுவிட்டார்கள் என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

தீவிரவாதி அலி, யாரோ ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள விரும்பினான். அந்தப் பெண்னை அங்கு அழைத்து வரவேண்டும் என்று அவன் விரும்பினான். ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை ஏற்கனவே வேறு எங்கோ அனுப்பிவிட்டார்கள் என்று போலீஸ் கமிஷனர் விரிவாக தெரிவித்தார்.

அந்தப் பெண்ணை அழைத்து வந்தால் தான் வீட்டில் இருந்து வெளியே வருவேன் என்று அலி தெரிவித்தான். மீரின் வீட்டில் தீவிரவாதிகள் ஒளிந்திருக்கும் தகவல் தெரியவந்ததுமே நாங்கள் இங்கு வந்துவிட்டோம். அதுவரை இது பற்றியே அவன் பேசிக் கொண்டிருந்தான். நாங்கள் வந்து வீட்டை முற்றுகையிட்டோம் என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

பொதுமக்கள் பலரை கொன்றதாக அலி மீது குற்றச்சாட்டு இருப்பதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. அவன் இந்தப் பகுதியில் 2017ஆம் ஆண்டு முதல் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :