நயன்தாரா குறித்த அவதூறு பேச்சு: ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம்

நயன்தாரா

திரைப்பட நடிகைகள் குறித்து அவதூறாகக் கருத்துக்களை வெளியிட்ட நடிகர் ராதாரவியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது தி.மு.க.

இது தொடர்பாக தி.மு.கவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடிகர் ராதாரவி தங்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டுவருவதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராதா ரவி

இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், "பெண்ணுரிமையை முன்னிறுத்தும் தி.மு.கவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.

நயன்தாரா நடித்த கொலையுதிர்காலம் என்ற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நயன்தாரா உள்பட படத்தின் கலைஞர்கள் அனைவரும் பங்கு பெற்றனர். இதில் நடிகர் ராதாரவியும் கலந்துகொண்டார்.

அவர் பேசும்போது, "நயன்தாராவைப் பற்றி வராத செய்தியில்லை. அதையெல்லாம் தாண்டி நிற்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் இதையெல்லாம் நான்கு நாட்களுக்குத்தான் ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள். நயன்தாரா பேயாவும் நடிக்கிறாங்க. அந்தப் பக்கம் சீதாவாவும் நடிக்கிறாங்க. முன்னாடியெல்லாம் சாமி வேஷம் போடனும்னா கே.ஆர். விஜயாம்மாவைத் தேடுவாங்க. இப்ப அப்படியில்ல. யார் வேணும்னாலும் போடலாம் சாமி வேஷம். பார்த்தவுடனே கும்புடுறவங்களையும் போடலாம். பார்த்தவுடனே கூப்புடுறவங்களையும் போடலாம். இப்ப அப்படி ஆயிடுச்சு" என்று கூறினார்.

மேலும், "நியாயப்படி பார்த்தால் பேயை நேரே கூட்டிவந்தால் அது நயன்தாராவைப் பார்த்து பயந்து ஓடிவிடும். அப்புறம் அக்ரிமென்ட் போடும்போதே, ஹீரோவோ, வில்லனோ தொடுவாங்க.. நடவடிக்கை எடுக்கக்கூடாதுன்னு கையெழுத்து வாங்கிக்க.." என்றும் "ஒரே நேரத்தில ஒரு பொண்ணைக் கெடுத்தா அது சின்னப் படம். ஒரே நேரத்தில பொள்ளாச்சி மாதிரி 4 பேரக் கெடுத்தா அது பெரிய படம். எல்லாம் பெருசு பெருசாக் காட்டனும்.. நிறையக் காட்டனும்" என்றும் தொடர்ச்சியாக பேசினார் ராதாரவி.

அவரது இந்தப் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அவரது இந்தப் பேச்சை கீழே அமர்ந்திருப்பவர்கள் கைதட்டி ரசிக்கும் சத்தமும் இந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. ராதாரவியின் பேச்சு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானது.

சின்மயி, சித்தார்த், டாப்ஸீ உள்ளிட்டவர்கள் ராதாரவியின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டணம் தெரிவித்தனர். இந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினையும் அக்கட்சியின் மகளிரணித் தலைவர் கனிமொழியையும் குறிப்பிட்டு, தனது வருத்தத்தைப் பதிவுசெய்ததோடு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரியிருந்தார். "மரியாதைக்குரிய இரு தலைவர்களும் பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்திற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்திருந்தீர்கள். ஆணாதிக்கவாதியும் பாலியல்மேலாதிக்கவாதியுமான ராதாரவி மேல் நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை Vignesh Shivan

2017ஆம் ஆண்டில் ராதாரவி ஒரு கூட்டத்தில் பேசும்போது சிறப்புத் திறன் படைத்த குழந்தைகள் குறித்து கேலி செய்து மிக மோசமாகப் பேசியது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

நடிகர் ராதாரவி தற்போது தமிழ்நாடு டப்பிங் யூனியனின் தலைவராக செயல்பட்டுவருகிறார்.

இதனிடையே, தாமே திமுக-வில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிய ராதாரவி, தன் பேச்சுக்கு நயன்தாராவிடமும், விக்னேஷ்சிவனிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

இந்த விவகாரம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர் ராதாரவிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "இந்த மேடையில் மட்டுமல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணல்களிலும் பொது மேடைகளிலும் திரைப்பட விழாக்களிலும் இதுபோல இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்.

இது ஒட்டுமொத்தத் திரைத்துறைக்கும் மற்ற நடிகர்களுக்கும் அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும் ஒரு அவமானமான சூழ்நிலையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தித்தருகிறது என்பதை ஏன் உணரவில்லை? இதுபோன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து ஈடுபடுவீர்கள் என்றால் தென்னிந்திய நடிகர் சங்கம் திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி தீவிரமாக முடிவுசெய்ய வேண்டியிருக்கும்" என கூறியிருக்கிறார்.

இணைய உலகை மாற்றப்போகிறதா 5ஜி வசதி?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்