ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவிலிருந்து விலகினார் நரேஷ் கோயல்

ஜெட் ஏர்வேஸ் படத்தின் காப்புரிமை Getty Images

ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி விலகியுள்ளனர்.

ஜெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி பதவி விலக வேண்டுமென்று பல்வேறு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் தனியார் விமான போக்குவரத்து துறையை பொறுத்தவரை நீண்டகாலமாக சிறப்பான வளர்ச்சியுடன் இயங்கி வந்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். ஆனால், அந்நிறுவனம் சமீபத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

கடந்த பத்தாண்டு காலத்திற்கும் மேலாக, படிப்படியாக, அதே சமயத்தில் சீரான வளர்ச்சியை கண்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஒருகட்டத்தில் சர்வதேச விமான சேவை வழங்கும் இந்திய நிறுவனங்களில் முதலிடத்தை பிடித்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நிறுவனம் தொடங்கப்பட்டதன் வெள்ளி விழாவை கொண்டாடிய ஜெட் ஏர்வேஸ் இன்று செயல்பட முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது.

கடந்த சில வாரங்களில் மட்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால், உள்நாடு மட்டுமின்றி பன்னாட்டு விமான பயணிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

விமான குத்தகை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திரட்ட முடியாததால், தான் பயன்படுத்தும் 119 விமானங்களில் மூன்றில் இரண்டு விமானங்களின் செயல்பாட்டை ஜெட் ஏர்வேஸ் நிறுத்தியது.

மீட்டெடுக்கும் முயற்சி

படத்தின் காப்புரிமை Reuters

ஜெட் ஏர்வேஸ் தனியார் விமான நிறுவனமாக இருந்தபோதிலும், அதன் செயல்பாட்டை உறுதிசெய்வதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கைளை எடுத்து வருகிறது. பொருளாதார சிக்கலிலிருந்து ஜெட் நிறுவனத்தை மீட்பதற்குரிய திட்டத்தை அளிக்குமாறு மத்திய அரசு பாரத ஸ்டேட் வங்கியிடம் கோரியுள்ளது.

இந்த திட்டத்தை முன்னெடுத்து வரும் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமார், தங்களது மீட்பு திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் ஒருபுறமிருக்க, அது பலனளிக்காது என்று மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஏர் இந்தியாவின் முன்னாள் தலைவரான ஜிதேந்தர் பார்கவா, மோசமான பொருளாதார நிலையில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்பதற்குரிய முதலீட்டாளர்களை கண்டறிவது மிகவும் கடினம் என்று கூறுகிறார்.

"லாபம் கிடைக்காது என்று தெரிந்து, யார் முதலீடு செய்வார்கள்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

பிரச்சனைக்கான காரணம் என்ன?

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை கொண்டுள்ள அபு தாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எதிஹாட் விமான நிறுவனத்திடம் எஸ்பிஐ வங்கி ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துள்ளது.

அதாவது, எதிஹாட் நிறுவனத்தை மேலும் ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்ய வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தனக்கு ஏற்கனவே இருக்கும் பங்குகளை விற்றுவிட்டு இந்த தொழிலிலிருந்து விடுபட விரும்புவதாக அந்நிறுவனம் கூறிவிட்டது.

எதிஹாட் ஏர்லைன்ஸ் உள்பட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க கூடிய நிறுவனங்கள் தனது செயல்பாட்டிலிருந்து பின்வாங்குவதற்கான முக்கிய காரணமாக அந்நிறுவனத்தின் நிறுவன தலைவர் பார்க்கப்படுகிறார்.

நரேஷ் கோயல் தனது கட்டுப்பாட்டிலிருந்து நிறுவனம் செல்வதை விரும்பவில்லை.

ஜெட் ஏர்வேஸின் வீழ்ச்சி தொடங்கியபோதே எதிஹாட் நிறுவனம் மேலதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயாராக இருந்ததாகவும், ஆனால் நரேஷ் தனது பதவியிலிருந்து விலகுவதற்கு மறுக்கவே அது பின்வாங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில்தான் நரேஷ் கோயல் மற்றும் அவரின் மனைவி இயக்குநர்கள் குழுவிலிருந்து விலகியுள்ளனர்.

இந்தியாவிலுள்ள விமான நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகபட்சமாக 49 சதவீத பங்குகளை வாங்குவதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில், நரேஷ் குடும்பத்தினருக்கு ஜெட் நிறுவனத்தில் 52 சதவீத பங்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"எந்த சூழ்நிலையிலும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டை தனது கையில் வைத்திருப்பதற்கு நரேஷ் விரும்புகிறார். இதற்கு முன்னர், இதே போன்று ஜெட் நிறுவனம் பொருளாதார பிரச்சனையில் சிக்கியபோதும், தனது பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக கைகூடிய உதவிகளை அவர் புறக்கணித்துவிட்டார்" என்று பெயர் வெளியிட விரும்பாத அந்நிறுவனத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்