சினூக் ஹெலிகாப்டர் இப்போது இந்திய விமான படையில் - இதில் என்ன சிறப்புகள்?

சினூக் ஹெலிகாப்டர்
படக்குறிப்பு,

சினூக் ஹெலிகாப்டர்

திங்களன்று இந்திய விமான படையில் சினூக் ஹெலிகாப்டர் புதியதாக இணந்துள்ளது. சினூக் ஹெலிகாப்டர்களை ''ஆட்டத்தையே மாற்றியமைக்கும் திறன் படைத்தது'''என இந்திய விமான படை கூறுகிறது.

''இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்துவருகிறது. பல்வேறு வகையான நிலப்பரப்பை கொண்டிருக்கும் இந்தியாவில் செங்குத்தாக மேலே எழும்பும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் தேவைப்படுகிறது'' என்கிறார் விமான படை தலைமை படைத்தளபதி பி எஸ் தானோ.

'' இந்த ஹெலிகாப்டர் இந்திய விமான படை பல்வேறு ராணுவச் சரக்குகளை மிகவும் உயரமான இடங்களுக்கு சுமந்து செல்ல உதவும். பீரங்கி துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்றவற்றை மட்டும் சுமந்துச் செல்ல பயன்படபோவதில்லை, இந்த ஹெலிகாப்டர் மூலமாக மனிதநேய உதவிகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக தொலைதூர பகுதிகளில் பேரழிவை எதிர்கொள்பவர்களை காப்பாற்ற உதவும்'' என தானோ கூறினார்.

அமெரிக்க தயாரிப்பான சினூக் ஹெலிகாப்டர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் வேளையில் இந்திய விமான படையில் இணைந்துள்ளது.

முன்னதாக இந்திய நிர்வாக காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி ஆர் பி எஃப் வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வுக்கு பதிலடியாக இந்தியா பாலகோட்டில் தாக்குதல் நடத்தியது.

இந்திய அரசு செப்டம்பர் 2015-ல் 8048 கோடி மதிப்பில் போயிங் நிறுவனத்திடம் இருந்து 15 CH-47F சினூக் ரக ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்ய கையெழுத்திட்டிருந்தது. இதில் நான்கு ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளது. இவை திங்கள் கிழமையன்று பார்வைக்கு வைக்கப்பட்டது. அடுத்த வருடம் மற்ற ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரத்யேக உத்தியுடன் சாலை அமைப்பது மற்றும் எல்லையில் பிற பணிகளுக்கு இந்த ரக ஹெலிகாப்டர்கள் வலுசேர்க்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மற்ற ஹெலிகாப்டர்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் எனில், இந்த ஹெலிகாப்டர்கள் அதிக கன ரக ராணுவ சரக்குகளை சுமந்து செல்லும். ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு சுழலிகள் இருக்கும் என அமெரிக்காவில் பயிற்சி பெற்ற சினூக் விமானியாக ஆஷிஷ் கலாவத் கூறுகிறார்.

'' நாங்கள் பொதுவாக ஒற்றை சுழலி ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வந்தோம் ஆனால் இதில் இரு இன்ஜின்கள் உள்ளது புதிய அம்சமாக இருக்கிறது'என நான்கு வார பயிற்சிக்கு பிறகு திரும்பியுள்ள விமானி ஆஷிஷ் கலவாத கூறுகிறார்.

படக்குறிப்பு,

சினூக் ஹெலிகாப்டர்

கடுமையான அடர்ந்த நிலப்பரப்பு உள்ள பகுதிகளில் இந்த ஹெலிகாப்டர்கள் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படும். இந்த ஹெலிகாப்டர்கள் அனைத்துவகையான கால நிலையையும் சமாளித்து இயங்கும். இதன் மூலம் உலகில் மிகவும் கடும் மோதல் உள்ள மலைப்பகுதியில் இயங்க இந்திய விமானப் படைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.

இந்த ஹெலிகாப்டர்கள் மூலமாக மிகவும் விரைவாக துருப்புகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். குறிப்பாக கட்டுப்பாட்டு எல்லை கோடு பகுதியில் பீரங்கிகளுடன் துருப்புகளை கொண்டு செல்ல உதவும். சிறிய ஹெலிபேட்களில் இந்த ஹெலிகாப்டர்களால் தரையிறங்க முடியும் மேலும் குறுகலான பள்ளத்தாக்குகளிலும் தரையிறங்கும் தன்மை கொண்டது சிறப்பு வாய்ந்த அம்சம்.

சினூக் ஹெலிகாப்டரில் அதிகபட்சமாக 11 டன் எடையுள்ள ராணுவ சரக்குகள் மற்றும் 54 துருப்புகளை சுமந்து செல்ல முடியும் என கலாவத் தெரிவித்தார்.

சினூக் ஹெலிகாப்டர் ஏற்கனவே 19 நாடுகளில் படை வீரர்களால் பயன்படுத்தப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :