காஞ்சிபுரத்தில் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து ஆறு பேர் பலி

காஞ்சிபுரம் படத்தின் காப்புரிமை Getty Images

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள நெமிலியில் ஒரு வீட்டின் கழிவுநீர்த் தொட்டியிலிருந்து விஷ வாயு தாக்கியதால், ஆறு பேர் பலியாகியுள்ளனர். இதில் மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

நெமிலி பகுதியில் உள்ள விநாயக நகரில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதால், முன்னதாக அந்த தொட்டி இயந்திரங்களின் மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

இதற்குப் பிறகு, அந்த வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி (53) என்பவர் அந்த கழிவு நீர்த் தொட்டி சரியாக சுத்தம் செய்ய்பட்டிருக்கிறதா என்பதை பரிசோதிக்க அதனைத் திறந்து பார்த்தார். அப்போது அதில் தேங்கியிருந்த விஷவாயு தாக்கியதால் அவர் மயங்கி தொட்டிக்குள் விழுந்தார். அப்போது அவருடன் இருந்த அவரது மகன் கண்ணன் (23), கார்த்தி (21) ஆகியோரும் மயங்கி தொட்டிக்குள் விழுந்தனர்.

கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் குடியிருந்துவரும் பரமசிவம் (31) என்பவர், இதைப் பார்த்தவுடன் அவர்களைக் காப்பாற்ற முயன்று அவரும் மயங்கி தொட்டிக்குள் விழுந்தார். கேஸ் ஏஜென்சி ஒன்றில் பணியாற்றிவந்த லட்சுமிகாந்தன் என்பவரும் இதேபோல அவர்களைக் காப்பாற்றச் சென்று, அவரும் மயங்கி உள்ளே விழுந்தார்.

அப்போது கிருஷ்ணமூர்த்தியின் வீட்டின் முன்புறமுள்ள கடையில் ஏதோ வாங்கிக்கொண்டிருந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சுரதா பாய் பிசி என்பவரும் இதேபோல அவர்களைக் காப்பாற்ற முயன்று விஷ வாயு தாக்கி, மயங்கி தொட்டிக்குள் விழுந்தார்.

இவர்கள் அனைவருமே உயிரிழந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் இந்த ஆறு பேரின் உடல்களையும் மீட்டு ஸ்ரீ பெரும்புதூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்களில் கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், கார்த்திக் ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கியதாலேயே இந்த விபத்து நேரிட்டதாக சம்பவ இடத்தைப் பார்வையிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பி. பொன்னைய்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்