'தேர்தல் முடியும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிக்கும்' - இம்ரான் கான்

இம்ரான் கான் படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'தேர்தல் முடியும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிக்கும்'

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடியும் வரை, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் நீடிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் மிகுந்த சூழல் இன்னும் குறையவில்லை. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடியும் வரை இந்த சூழல் நீடிக்கும். தேர்தலுக்கு முன்பாக, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த நரேந்திர மோதி தலைமையிலான அரசு நிச்சயம் முயற்சிக்கும்.

இந்தியா தாக்குதல் நடத்தினால், அதை முறியடிப்பதற்கு பாகிஸ்தான் எந்நேரமும் தயாராக உள்ளது என்று கூறினார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.


படத்தின் காப்புரிமை Facebook

இந்து தமிழ்: 'உள்துறை செயலாளரிடம் சாதிக்பாட்சா மனைவி புகார்'

தனது வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், நண்பர்கள் மிரட்டப்படுவதாக, சாதிக்பாட்சாவின் மனைவி ரேகா பானு, தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டியிடம் புகார் அளித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"சென்னையில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தவர் ஏ.எம்.சாதிக்பாட்சா. இவருக்கு ரேகா பானு என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். 2ஜி வழக்கு தொடர்பாக சாதிக்பாட்சா வீட்டில் கடந்த 2010-ம் ஆண்டு சிபிஐ சோதனை செய்தது. இதற்கிடையே 2011-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி சாதிக்பாட்சா தற்கொலை செய்துகொண்டார்.

இவரது நினைவுநாளை ஒட்டி, கடந்த மார்ச் 16-ல், குடும்பத்தினர் பெயரில், பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த சில தினங்களில், சாதிக்பாட்சாவின் மனைவி ரேகா பானு சென்ற வாகனம் தாக்கப்பட்டது. இது தொடர்பாக காவல் ஆணையரிடம் அவர் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், நேற்று தலைமைச் செயலகம் வந்த சாதிக்பாட்சாவின் மனைவி ரேகா பானு, உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டியை சந்தித்து மனு அளித்தார்." என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"மார்ச் 16-ல் என் கணவர் நினைவு நாளுக்காக 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று விளம்பரம் கொடுத்திருந்தோம். அதற்குப் பின்பு 2 நாட்களில் நான் காரில் சென்றபோது, சிலர் கல்லால் அடித்து, அரிவாளை வீசி தாக்கு தல் நடத்தினர். இதுதொடர்பாக காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்தேன். ஆணையரும் பாதுகாப்பு அளித்துள்ளார்.

தற்போது மறைமுகமாக மிரட்ட தொடங்கியுள்ளனர். என்னுடைய ஆடிட்டர்கள், சட்ட ஆலோசகர்கள், நண்பர்கள் யாரையும் உதவி செய்யவிடாமல் மிரட்டுகின்றனர். இதுதொடர்பாக உள்துறை செயலரிடம் புகார் அளித்துள்ளேன். திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா மீது நான் சந்தேகப்படுகிறேன். எனவே அவர் பெயரைக் கூறி புகார் அளித்துள்ளேன்." என்று பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


தினத்தந்தி: 'அரசு மருத்துவமனைகளில் கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் 15 கர்ப்பிணிகள் மரணம்'

அரசு மருத்துவமனையில் கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் 15 கர்ப்பிணிகள் மரணமடைந்த தகவல்கள் வெளியாகியுள்ளன என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள ரத்த வங்கிகளில் மூத்த அரசு டாக்டர்கள் மற்றும் சில அதிகாரிகள், அடிப்படை சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, தகுதியற்றதும், கெட்டு சிதைந்து போன ரத்தத்தை ஏற்றியதால், கர்ப்பிணிகளும், குழந்தை பெற்ற தாயார்களும் இறந்துபோன விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தகுதியற்ற ரத்தத்தை செலுத்தியதன் மூலம் தமிழகத்தில் கடந்த ஜனவரி வரை 4 மாதங்களில் 15 கர்ப்பிணிகள் உயிர் இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதில் இன்னும் அதிரவைக்கும் தகவல் என்னவென்றால், முறையான சீதோஷ்ணத்தில் பராமரிக்கப்படாததால் பழையதாகிப்போன ரத்தத்துக்கு, அது பாதுகாப்பானது என்று டாக்டர்கள் சான்று வழங்கியதுதான். இது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், "தகுதியற்ற ரத்தத்தை ஏற்றியதும் பெண்களுக்கு உடனடியாக பல்வேறு பிரச்சினைகள் உடலளவில் எழும். சில நிமிடங்களில் வலிப்பு வந்ததுபோல் உடல் வெட்டி வெட்டி இழுக்கும். சிலருக்கு 50 மில்லிக்கும் குறைவான அளவில் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைக்கு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் எம்.சந்திரசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமையக அரசு ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர் நாராயணசாமி, ஓசூர் அரசு ஆஸ்பத்திரியைச் சேர்ந்த டாக்டர் சுகந்தா ஆகிய 3 ரத்த வங்கி அதிகாரிகள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வதோடு, துறை ரீதியான நடவடிக்கையை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் என்.ருக்மணி ஆகியோருக்கு பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார். அதில், கடமை தவறிய குற்றத்துக்காக தமிழ்நாடு சிவில் சர்வீசஸ் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் அப்பீல் விதிகளின் கீழ் அவர்கள் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அவர்கள் தவிர, 12-க்கும் மேற்பட்ட அரசு நர்சுகள் மற்றும் சோதனைக்கூட தொழில்நுட்ப வல்லுனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

ரத்த வங்கி சோதனைகள் குறித்து விவரித்த சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், "புதிய ரத்தத்துக்கும், பழையதாகி தகுதியிழப்பு ஏற்பட்டுள்ள ரத்தத்துக்கும் உள்ள வித்தியாசத்தை, மருத்துவ தொழிலில் இல்லாத சாதாரணமான ஒருவரே பார்த்த அளவில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் கெட்டுப்போன ரத்தத்துக்கு பாதுகாப்பானது என்று மருத்துவர்களே நற்சான்று கொடுத்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை" என்றார்.

ஆஸ்பத்திரிகளில் ரத்த சேமிப்பு வங்கியில் இருக்கும் பிரத்யேகமான குளிர்சாதனப் பெட்டியில் (ரெப்ரிஜிரேட்டர்) 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையிலான குளிர் பராமரிக்கப்பட வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மின்தடை ஏற்பட்டால், உடனே இயங்கக்கூடிய ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு அதே குளிர் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும். இதில் சிறிய தவறு ஏற்பட்டாலும் சேமிக்கப்படும் ரத்தத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்துபோவதோடு, அவை அப்படியே கரைந்து போய்விடக்கூடிய அபாயமும் ஏற்பட்டுவிடும். அப்படி மாற்றங்கள் ஏற்படும்போது அந்த ரத்தம் தனியாகத் தெரிந்துவிடும்.

சேமிக்கப்படும் ரத்தத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தால் அதை டாக்டர்கள் உடனடியாகக் கண்டுபிடித்து விடுவார்கள். அதிகபட்சமாக ரத்தத்தில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாத வகையில் 42 நாட்கள் பாதுகாக்க முடியும்.

- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


தினமணி: 'சின்னம் எதுவானாலும் வெற்றி நிச்சயம் - டிடிவி தினகரன்'

நீதிமன்ற அறிவுறுத்தல்படி, தேர்தல் ஆணையம் எந்தச் சின்னத்தை அளித்தாலும் அதில் போட்டியிட்டு வெற்றி பெறுவது நிச்சயம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"மக்களவை, சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் அமமுக சார்பில் 59 பேர் போட்டியிட உள்ளனர். அந்த 59 பேரின் வெற்றி தமிழக மக்களின் ஆயுதங்களாக இருக்கும். சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நீதி வழங்கியுள்ளது. எங்களுக்கு பொதுச் சின்னம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது, டிசம்பர் 7-ஆம் தேதி குக்கர் சின்னத்தை அளித்தார்கள். அதனை 21-ஆம் தேதி அந்தத் தொகுதி வாக்காளர்கள் வெற்றிச் சின்னமாக்கினர். எனவே, இந்தத் தேர்தலில் நாங்கள் கோரும் சின்னத்தை அளித்தாலும் அல்லது தேர்தல் ஆணையமே சின்னத்தை அளித்தாலும் அதில் போட்டியிடுவோம்.

மாபெரும் வெற்றியைப் பெறுவோம். உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள உத்தரவு தொடர்பான நகலை எங்களது வழக்குரைஞர்கள் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்துள்ளனர். தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில் சுயேச்சையாக மனுக்களை தயார் செய்து வைத்திருந்தோம். சின்னம் கோரும் இடத்தில் இப்போது உச்ச நீதிமன்ற உத்தரவைத் தெரிவித்துள்ளோம்.

கட்சியைப் பதிவு செய்யத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தோம். எனவே, கட்சியைப் பதிவு செய்வதற்கான பணிகளில் இறங்குவோம்." என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து, சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :