தமிழக மக்களவைத் தேர்தல் 2019: பொள்ளாச்சி, மத்திய சென்னை, தூத்துக்குடி முக்கியத்துவம் பெறுவது ஏன்?

நாடாளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த 10 தமிழக மக்களவைத் தொகுதிகள்

பட மூலாதாரம், Vikram Raghuvanshi

ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு தொகுதியில் வெல்வதும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் முக்கியம்.

எனினும், போட்டியிடும் வேட்பாளர்கள், அந்தத் தொகுதியில் நிலவும் பிரச்சனைகள், அந்தப் பிரச்சனைகள் அந்தந்தத் தொகுதியில் மட்டுமல்லாது பிற தொகுதிகளின் தேர்தல் முடிவுகளிலும் தாக்கம் செலுத்தவுள்ள வாய்ப்பு போன்ற காரணிகள் பிற தொகுதிகளைவிட அந்தத் தொகுதிகளுக்கு சற்றே கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுத்து விடுகின்றன.

அப்படிப்பட்ட 10 தமிழக மக்களவைத் தொகுதிகள் பற்றிப் பார்ப்போம்.

1. மத்திய சென்னை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தயாநிதி மாறன்

சென்னை மாநாகரில் மூன்று மக்களவைத் தொகுதிகளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்பட்டாலும், எந்த ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினைரை மட்டுமல்லாது, பொருளாதாரத்தின் அனைத்து அடுக்குகளையும் சேர்ந்த வாக்காளர்களையும் பெரும்பான்மையாக கொண்டிராமல் கலவையான தொகுதியாக இருக்கிறது மத்திய சென்னை.

சராசரி சென்னை வாக்காளர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் தொகுதியாக இந்தத் தொகுதி உள்ளது.

2. பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சமீபத்தில் அதிர்வலைகளை உண்டாக்கிய பாலியல் வன்கொடுமை விவகாரம், அதற்கு இருந்த அரசியல் தொடர்புகள் மற்றும் போராட்டங்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்தன.

அதனால் இந்தத் தொகுதி அதன் அருகில் உள்ள கோவை, பிற தொகுதிகளின் முடிவுகளிலும் குறைந்தபட்ச அளவிலேனும் தாக்கம் செலுத்தும் என்று கருத்தப்படுகிறது.

3.தூத்துக்குடி

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு,

தமிழிசை சௌந்தரராஜன்

ஸ்டெர்லைட் போராட்டங்களும், அப்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தமிழக அளவில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் செய்தியானது.

பிற தமிழக தொகுதிகளிலும் தாக்கம் செலுத்த வாய்ப்புள்ள இந்த விவகாரம் உள்ள தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி மற்றும் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் போட்டியிடுவதால், கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

4. நீலகிரி (தனி)

பட மூலாதாரம், PRAKASH SINGH

படக்குறிப்பு,

ஆ. ராசா

நீலகிரி மக்களவைத் தொகுதி மேற்குத் தமிழகத்தின் பிற தொகுதிகளை விடவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ளடங்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதிகளாகும்.

திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இங்கு போட்டியிடுகிறார்.

5. தருமபுரி

பாமக வலுவாக இருக்கும் தொகுதிகளில் ஒன்றாகத் தருமபுரி கருதப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்ற இரு தொகுதிகளில் இதுவும் ஒன்று.

தற்போதைய மக்களவை உறுப்பினர் மீண்டும் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் இங்கு போட்டியிடுகிறார்.

சட்டமன்றத் தேர்தலில் இதன் கீழுள்ள பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டு அன்புமணி மூன்றாம் இடம்தான் பெற்றார். மீண்டும் கூட்டணியுடன் களம் இறங்குவதால், இங்கு நெருக்கமான போட்டி நிலவுகிறது.

6.கோயம்புத்தூர்

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு,

சி.பி. ராதாகிருஷ்ணன் (நடுவில்)

காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என்று பாரம்பரியமாக வென்று வந்த இந்தத் தொகுதியில் 1990களுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சியும் வேரூன்றத் தொடங்கியது.

திராவிடக் கட்சிகள் பெரும்பாலும் கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கிய இந்தத் தொகுதியில் 2014இல் அதிமுக தனித்து நின்று முதல் முறையாக வென்றது.

தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என அனைத்துமே தற்போது அமைப்பு ரீதியாக வலுவாக உள்ளது கோவை தொகுதி.

7. மதுரை

தமிழகத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக பல ஆண்டுகளாகவே மதுரை கருதப்படுகிறது.

எனினும், தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியவை தலா ஒருமுறை மட்டுமே மதுரை நாடாளுமன்ற தொகுதியை வென்றுள்ளன. காங்கிரஸ் எட்டு முறை வென்றுள்ளது.

மதுரையில் சித்திரைத் திருவிழா தேரோட்டமும் கள்ளழகர் எதிர்சேவையும் நடக்கும் ஏப்ரல் 18ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்குமென அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

8. சிதம்பரம் (தனி)

படக்குறிப்பு,

திருமாவளவன்

இதுவரை நான்கு முறை சிதம்பரம் தனித் தொகுதியில் போட்டியிட்டு ஒரு முறை மட்டுமே வென்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஐந்தாவது முறையாக இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து அதிமுக இந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும், திருமாவளவனை தோல்வியடையச் செய்ய பாமக தீவிரமாக இருக்கிறது. திருமாவளவன் வெல்வதை தனக்கு ஒரு கௌரவப் பிரச்சனையாகப் பார்க்கிறது பாமக.

9. கரூர்

அதிமுகவில் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு உண்டான பிளவின்போது டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அக்கட்சியில் இருந்தும் விலகி திமுகவில் இணைந்தது பெரும் செய்தியானது.

அவர் இணைந்தது திமுகவுக்கு கரூர் பகுதியில் பலத்தைத் தரும் என்று கருதப்படுகிறது.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரசின் ஜோதிமணி போட்டியிடும் இந்தத் தொகுதியில் மக்களவைக்கு துணை சபாநாயகராக இருக்கும் தம்பிதுரை அதிமுக வேட்பாளராகக் களம் இறங்குகிறார்.

10. கன்னியாகுமரி

படக்குறிப்பு,

பொன். ராதாகிருஷ்ணன்

திராவிடக் கட்சிகளை விடவும் தேசியக் கட்சிகள் அதிகம் செல்வாக்கு செலுத்தும் கன்னியாகுமரி தொகுதியின் அரசியல், தமிழக அரசியல் போக்கிலிருந்து மாறுபட்டது.

மத்திய அரசில் தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே பிரதிநிதியாக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் இங்கு களமிறங்குகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :