“நீட்” தேர்வு: அரசியல் கட்சிகளின் வெற்றி, தோல்வியில் ஆதிக்கம் செலுத்துமா?

அனிதாவின் தந்தை சண்முகம் தங்கவேல்
Image caption அனிதாவின் தந்தை சண்முகம் தங்கவேல்

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தேர்தல் நேரத்தில், பிரதான அரசியல் கட்சியினரை “நீட்” தேர்வு குறித்து பேச வைத்த மாநிலம் தமிழகம்.

காங்கிரஸ்-திமுக கூட்டணி வெற்றிபெற்றால், மருத்துவ படிப்பிற்கான கட்டாய நுழைவு தேர்வான “நீட்” ரத்து செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“நீட்” எழுதிய மாணவர்களின் தகவல்கள் இணையத்தில் வெளியானதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அந்த தேர்வை ரத்து செய்வது குறித்து உறுதியாக எதுவும் சொல்லவில்லை.

அதிமுகவின் அறிக்கையில் “நீட்” தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் “நீட்” தேர்வு விலக்கு சாத்தியமற்றது என கருத்து தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பிற்கான கட்டாய நுழைவுத் தேர்வான “நீட்” தேர்வை முந்தைய அதிமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார்.

Image caption பிரதீபா எழுதி வைத்திருந்த கடிதத்தோடு தந்தை சண்முகம்

ஆனால் அவரது மறைவை அடுத்து, தேர்வில் இருந்து உடனடியாக விலக்கு கோர முடியாது என்று கூறிய ஆளும் அதிமுக அரசு “நீட்” தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி, மாணவர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது.

“நீட்” தேர்வு கட்டாயமாகப்பட்ட இரண்டு ஆண்டுகளில், அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா என இரண்டு மாணவிகளின் தற்கொலையை அடுத்து, திமுக “நீட்” தேர்வை ரத்து செய்யவேண்டும் என உறுதியாக பேசி வந்தது.

அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள், முதல் முறையாக ஓட்டு போடவுள்ள மாணவர்கள் என மருத்துவ கனவுடன் உள்ள இளைஞர்களின் வாக்குகளை இந்த தேர்தல் வாக்குறுதி பெற்றுத் தருமா என்ற கேள்வி ஒருபுறம். அதேநேரம், “நீட்” தேர்வு ரத்து அல்லது தமிழகத்திற்கு விலக்கு சாத்தியமா என்ற கேள்விகளுக்கான பதிலை பெற வேண்டியுள்ளது.

முதலில் “நீட்” தேர்வு காரணமாக தற்கொலை செய்ததாக கூறப்படும் அனிதா மற்றும் பிரதீபா குடும்பத்தினரை நேரில் சந்தித்தோம்.

விழுப்புரம் மாவட்டத்தின் பேரவலூர் கிராமத்தில் உள்ளது பிரதீபாவின் வீடு. இறந்துபோவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் பிரதீபா எழுதிவைத்த கடிதம், அவரது புகைப்படத்திற்கு அருகில் உள்ளது. பிரதீபாவின் அக்கா உமா பிரியா நம்மிடம் பேசினார்.

அனிதா, பிரதீபா குடும்பத்தினரின் நிலை

“நீட்” தேர்வை முழுமையாக எதிர்க்கவில்லை ஆனால் “நீட்” நடத்தும் விதத்தை முறைப்படுத்தாமல், சமமான வாய்ப்புகள் தராமல் தேர்வு நடந்தது என்ற கருத்தில் அமைத்தது அவரது உரையாடல்.

''பிரதீபாவின் மரணத்தில் இருந்து எங்கள் குடும்பம் மீளவில்லை. இனி எந்த ஆட்சிமற்றம் வந்தாலும், வராவிட்டாலும், எங்களது இழப்புக்கு பதில் கிடைக்கப்போவதில்லை. ஆனால் மாணவ சமூதாயத்தின் மீது அரசியல் கட்சியினர் எந்த அளவில் அக்கறையோடு இருக்கிறார்கள் என காட்டியது “நீட்” பிரச்சனை. இரண்டு உயிர்களை இழந்த பின்னரும் , “நீட்” தேர்வை நடத்தும் முறையில் தெளிவு இல்லை. அரசியல்வாதிகள் அழுத்தம் தரவில்லை என தோன்றுகிறது,''என்றார் உமா பிரியா.

''என் தங்கையைப் போன்ற மாணவர்கள் வசதிகளற்ற கிராமங்களில் இருந்து வெகுதூரம் பயணம் செய்து, தனியார் பயிற்சி நிறுவங்களின் துணை இல்லாமல், தங்களாகவே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை படித்து எழுதுகிறார்கள். ஆரம்பம் முதலே, தேர்வுக்காக தயாராகும் பாணியில் படித்துவிட்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், எங்களுக்கும் எப்படி சமமான போட்டி வைக்கமுடியும்?,'' என்ற கேள்வியை எழுப்பினார்.

Image caption பிரதீபாவின் சகோதரி உமா பிரியா

பிரதீபாவின் மரணத்திற்கு பிறகு, அந்த வீட்டில் அவரின் இடத்தை தனிமை சூழ்ந்துகொண்டது போன்ற தோற்றம்.

''நாங்கள் நான்கு பேரும் வீட்டில் இருந்தாலும், எங்களுக்குள் பேசுவதற்கு அவளது இறப்பை தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. இந்த கிராமத்தில் பிரதீபாவுக்கு முன்னதாக இரண்டு மாணவர்கள், “நீட்” தேர்வு இல்லாமல், 12 வகுப்பு மதிப்பெண்களை கொண்டு மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி, தற்போது பயிற்சி மருத்துவராக வேலை செய்கிறார்கள். பிரதீபாவின் இழப்புக்கு பின், இந்த கிராமத்தில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் உயிரோடு இருந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இருப்பவர்கள் கூட எங்கள் குடும்பத்தின் இழப்பை கணக்கில் கொண்டு வாக்களிக்கவுள்ளார்கள் என்பது ஓர் ஆறுதல்,'' என்கிறார் பிரதீபாவின் தந்தை சண்முகம்.

பெற்றோரின் அச்சம்

அரியலூர் மாவட்டம் குழுமூர் என்ற சிறிய கிரமத்தில் இருந்து மருத்துவராக வேண்டும் என புறப்பட்ட அனிதாவின் கனவு கலைந்தது உண்மைதான். ஆனால் அங்கு, அவரது மறைவுக்கு பின்னர், அவரது குடும்பத்தினர் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கிடைத்த நன்கொடையைக் கொண்டு நூலகம் அமைத்துள்ளனர். அதில் “நீட்” தேர்வுக்கான புத்தகங்களும் உள்ளன.

''இன்னொரு அனிதாவை எங்கள் ஊர் இழக்கவேண்டாம். இங்குள்ள குழந்தைகளுக்கு தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் கொடுக்கிறோம். அதைவிட, பள்ளி, கல்லூரியில் பெறும் மதிப்பெண் மட்டுமே வாழக்கை என்ற எண்ணத்தை மாற்றி எங்கள் தங்கைக்கு கிடைக்காத தன்னம்பிக்கையை தர விழைகிறோம். கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்வுகளை நடத்துகிறோம்,'' என உறுதியுடன் பேசுகிறார் அனிதாவின் அண்னன் அருண்குமார்.

அனிதா நூலகத்தின் வாயிலில் அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது. என்றும் வாடாத சிவப்பு மாலை ஒன்றும் அவருக்கு சூட்டப்பட்டுள்ளது. தந்தை சண்முகம் ஒவ்வொரு முறை உள்ளே நுழையும்போதும், தனது மகளின் கண்ணங்களை வருடிக்கொடுக்கிறார். ''மாலை நேரத்தில் ஊர் குழந்தைகள் இங்கு கூடுகிறார்கள். படிக்கிறார்கள், விளையாடுகிறார்கள். இங்கு மகள் இருப்பது போலவே உள்ளது,''என்கிறார் அனிதாவின் தந்தை சண்முகம்.

திமுக-அதிமுகவின் பதில்

தேர்தல் அறிக்கையில் “நீட்” தேர்வு ரத்து செய்யப்படும் என ஒரு கட்சியும், “நீட்” தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு தர வலியுறுத்துவோம் என மற்றொரு கட்சியும் தெரிவித்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என சண்முகத்திடம் கேட்டோம்.

Image caption அனிதாவின் அண்ணன் அருண்குமார்

''திமுக கூட்டணி “நீட்” தேர்வு ரத்து செய்வதற்கு முயற்சி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அனிதாவின் இறுதி சடங்கிற்கு திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகள் வந்து அப்போதே வாக்குறுதி தந்தார்கள். ஆனால் பாஜக ஆட்சியில் அதற்கான வாய்ப்பு இருக்காது என தெரிகிறது. காலப்போக்கில் இந்த பிரச்சனை எப்படி மாறும் என்று தெரியவில்லை. ஆனால் இந்த தேர்வு இருக்கும் வரை எங்கள் ஊர் பிள்ளைகள் படித்து, நம்பிக்கையுடன் தேர்வு எழுத எங்கள் குடும்பம் உதவும்,'' என்றார் அனிதாவின் தந்தை.

ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை பெறும் கட்சி காப்பாற்றவேண்டிய வாக்குறுதியில் “நீட்” தேர்வுக்கான தீர்வும் ஒன்று என்ற தோற்றம் உள்ளது.

தேர்தல் வாக்குறுதியை எவ்வாறு செயலில் கொண்டுவருவீர்கள் என திமுக மற்றும் அதிமுக தலைவர்களிடம் கேட்டோம்.

தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் தொலைபேசியில் பதில் தந்த திமுக பொருளாளர் துரைமுருகன் தங்களது கட்சி முழு நம்பிக்கையுடன்தான் தேர்தல் அறிக்கையில் “நீட்” தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதியை அளித்துள்ளதாக கூறினார்.

அதிமுகவின் ராஜ்ய சபா உறுப்பினரான நவநீதகிருஷ்ணன் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பேசாவிட்டாலும், அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் “நீட்” தேர்வு பிரச்னையை முன்வைத்து தீர்வை எட்ட முயற்சி செய்வார்கள் என்கிறார்.

அரசியலமைப்பு நிபுணர்களின் விளக்கம்

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை காப்பாற்றுவார்கள் என நம்புவது வாக்காளர்களின் கைகளில்தான் உள்ளது என்கிறார் அரசியலமைப்பு சட்டத்தின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்யும் தேசிய குழுவின் ஆசிரியராக செயல்பட்ட சுபாஷ் காஷ்யப் (National Commission to Review the Working of Constitution). டெல்லியைச் சேர்ந்த சுபாஷ் காஷ்யப் அரசியலமைப்பு தொடர்பான புத்தகங்களை எழுதியவர்.

“நீட்” தேர்வு தொடர்பான தேர்தல் வாக்குறுதியை செயல்பாட்டுக்கு கொண்டுவர வாய்ப்புகள் குறித்து சுபாஷ் காஷ்யபிடம் கேட்டோம்.

''தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் கட்டாயமாக காப்பற்றவேண்டும் என்ற விதிமுறை இல்லை. “நீட்” போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களில் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் செயலில் கொண்டுவருவதற்கு பல கட்டங்களில் வேலை செய்யவேண்டும். தேர்வை ரத்து செய்யவேண்டும் அல்லது ஒரு மாநிலத்திற்கு விலக்கு வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் விவாதத்தில் அது எடுத்துக்கொள்ளப்படவேண்டும். நீட் தேர்வை எதிர்ப்பதற்கு வலுவான காரணங்களை உறுப்பினர்கள் தெரிவிக்கவேண்டும். இந்த முடிவுக்கு ஒப்புதல் கிடைக்கவேண்டும். இதைவிட, வெற்றி பெற்ற கட்சி, இந்த விவகாரத்தில் மிகவும் கூர்ந்து செயல்பட்டு, நிராகரிக்க முடியாத அளவில் வாதங்களை வைக்கவேண்டும்,'' என்கிறார் சுபாஷ் காஷ்யப்.

படத்தின் காப்புரிமை INSTANTS

மேலும் இந்தியாவின் பிற மாநிலங்களில் “நீட்” தேர்வு ஒரு சிக்கலான விஷயமாக பார்க்கபடாததால், நாடாளுமன்றத்தில் இதற்கு கவனம் கிடைக்குமா என்பதையும் ஆலோசிக்கவேண்டும் என்கிறார்.

மாநில பட்டியலில் கல்வி வேண்டும்

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் வாக்குறுதியாக பேசப்படும் “நீட்” பிரச்சனை தேசிய கட்சிகளின் கவனத்தை ஈர்க்கவில்லை என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன்.

தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் அமலோற்பவநாதன். இந்திய அளவில் தலைசிறந்த இதய நாள அறுவை சிகிச்சை வல்லுநராக அறியப்படுபவர் இவர்.

''இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் “நீட்” தேர்வு குறித்த விவாதம் தற்போது இல்லை. தமிழகத்தில் கூட தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இதை தேர்தலுக்கான விவகாரமாக பார்க்கவில்லை. தமிழக கட்சிகள் வாக்குறுதி தந்தாலும், மத்தியில் பெரும்பான்மை பெறும் கட்சி சட்டதிருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே இதில் மாற்றம் கொண்டுவரமுடியும். தேர்வை ரத்து செய்வது அல்லது விலக்கு கேட்பதற்கு சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன,'' என்கிறார் மருத்துவர் அமலோற்பவநாதன்.

மேலும் மற்ற மாநிலங்களில் ஆரம்பக் கட்டத்தில் இருந்த எதிர்ப்பு அலைகள் குறைந்துவிட்டன என்றும், கல்வியை அந்தந்த மாநில அரசாங்கங்கள் தீர்மானித்தால்தான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பொது பட்டியலில் உள்ள கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்பட்டால் மட்டுமே நீட் போன்ற கல்வி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படும் என தொடர்ந்து வலியுறுத்திவருகிறார் அமலோற்பவநாதன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :