நிர்மலா சீதாராமன் கையெழுத்தை போட்டதாக பாஜக பொது செயலாளர் முரளிதரராவ் மீது வழக்கு

'பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் மீது மோசடி வழக்கு' படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: 'பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் மீது மோசடி வழக்கு'

மத்திய அரசில் நியமனப் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடம் ரூ.2.17 கோடி மோசடி செய்ததாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் உள்பட 8 பேர் மீது மோசடி வழக்கின் கீழ் தெலங்கானா போலீஸார் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யதுள்ளனர் என்கிறது இந்து தமிழ் இணைய செய்தி.

ஆனால், பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ், தன்மீது எந்த குற்றமும் இல்லை என மறுத்துள்ளார் என்கிறது அந்த செய்தி.

கடந்த 2015-ம் ஆண்டு ஈஸ்வர ரெட்டி என்பவரை ஒரு பெண்ணும் அவரின் கணவரும் மத்திய அரசில் நியமனப் பதவி பெறுவதற்காக அணுகியுள்ளனர். ஈஸ்வர ரெட்டி பாஜகவில் பல்வேறு முக்கிய நிர்வாகிகளுக்கு நெருக்கமாக இருந்துள்ளார்.

அப்போது அந்த பெண்ணிடமும், ஆணிடமும், கிருஷ்ணா கிஷோர் என்பவரைத் தெரியும், அவர் பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறி அவரிடம் அழைத்துச் சென்றார். இந்த பதவிக்காக ரூ.2.17 கோடியை அந்த பெண்ணும் அவரின் கணவரும் வழங்கியுள்ளார்கள் என்று போலீஸார் தரப்பில் கூறப்படுவதாக விவரிக்கிறது அந்த செய்தி.

அவர்களிடம் நிர்மலா சீதாராமன் கையொப்பமிடப்பட்ட பார்மா எக்சில் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டதாக போலியான கடிதத்தையும் காட்டினார். அப்போது நிர்மலா சீதாராமன் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தார். ஆனால், எங்களுக்கு பதவி கிடைக்கவில்லை, பணத்தை திருப்பிக் கேட்டபோது முரளிதர ராவ் உள்ளிட்டோர் எங்களை மிரட்டினார்கள் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் நீதிமன்றம் மூலம் சென்றதால் போலீஸார் பாஜக பொதுச்செயலாளர் முரளிதர ராவ் உள்ளிட்ட 8 பேர் மீது மோசடி, கிரிமினல் நோக்கத்துடன் செயல்படுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முரளிதர் ராவ் மறுத்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், " தற்போதுள்ள பிரச்சினைக்கும், எப்ஐஆர்க்கும் எனக்கும் தொடர்பில்லை. நீதிமன்றத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள். நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளை என்னுடைய வழக்கறிஞர்கள் நிறுத்த உதவி செய்வார்கள்" எனத் தெரிவித்தார்.

தெலங்கானா பாஜக மாநில செய்தித்தொடர்பாளர் கிருஷ்ணா சாகர் ராவ் கூறுகையில், " எங்களுடைய தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் மீது அற்பமான புகாரை வேண்டுமென்றே சிலரால், கெட்டநோக்கத்துடன் கொடுக்கப்பட்டு முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் நற்பெயருக்கும், பொதுச்செயலாளர் பெயருக்கும் களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார்கள். சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் " எனத் தெரிவித்தார்.


தினமணி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரும் வழக்கு: அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம், விசாரணையை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Reuters

பின் வருமாறு அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது:

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்கள் தமிழக அரசிடம் இல்லை. எனவே ஆலையை மூடி சீல் வைத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு சட்ட விரோதமானது.

எனவே இந்த உத்தரவை ரத்து செய்து, ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆலையைத் திறக்கக் கோரிய இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று கூறி, இந்த மனு தொடர்பாக தமிழக அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும்; வழக்கைத் தேர்தலுக்குப் பிறகு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அப்போது ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்யமாசுந்தரம், இந்த வழக்கில் மூன்றாவது நபரை சேர்க்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் சார்பில் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் வரை மூன்றாவது நபரின் கருத்தைக் கேட்கக்கூடாது. என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட வைகோ, உச்சநீதிமன்றம் இந்த வழக்கில், என்னை ஒரு மனுதாரராக கடந்த 2013-ஆம் ஆண்டே உறுதிப்படுத்தி உள்ளது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான வாதங்களை மட்டுமின்றி, ஆலைக்கு எதிரான வாதங்களையும் விசாரித்த பின்னரே உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து வாதிட்ட ஆர்யமாசுந்தரம், ஸ்டெர்லைட் ஆலை சுமார் பத்து மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இதனால் ஆயிரம் கோடி மதிப்பிலான இயந்திரங்கள் பழுதடைந்து உள்ளன. ஆலை பராமரிப்புப் பணிகளுக்கு குறைவான அளவே மின்சாரம் தேவைப்படும். எனவே ஆலையின் பராமரிப்புப் பணிகளுக்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கை நீண்டகாலத்துக்கு ஒத்திவைக்காமல் விரைவாக விசாரிக்க வேண்டும் என்றார். அப்போது நீதிபதிகள், ஏற்கெனவே பல வழக்குகள் விசாரணைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த வழக்கை அவசரமாகவோ முன்னுரிமை கொடுத்தோ விசாரிக்க முடியாது என தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பட்டுள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்க கால அவகாசம் அளித்து விசாரணையை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு காற்று மாசு குறைந்துள்ளதா, நிலத்தடி நீரின் தரம் உயர்ந்துள்ளதா என்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினத்தந்தி: 'மன்னார்குடியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு'

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆலை ஒன்றில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது நேர்ந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை தினத்தந்தி

"திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலு(வயது 60). சிங்காரவேலுவுக்கு சொந்தமான பட்டாசு ஆலை மன்னார்குடி நகர் பகுதியில் உள்ள பாமணி ஆற்றங்கரையோரம் செயல்பட்டு வந்தது.

இங்கு கோவில் திரு விழாக்கள், திருமண விழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசுகள், வான வெடிகள் தயார் செய்யப்பட்டு வந்தன. விழாக்களுக்கு தேவையான பட்டாசுகளின் விற்பனையும் இங்கு நடைபெற்று வந்தது. இந்த ஆலையில் பட்டாசு மற்றும் வான வெடிகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

நேற்று காலை 9 மணி அளவில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சிங்காரவேலு வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணிகளை பார்வையிடுவதற்காக ஆலைக்கு சென்றார்.

அங்கு சிங்காரவேலின் மாமனாரும், மன்னார்குடியை சேர்ந்தவருமான வீரையன்(65), தொழிலாளர்கள் மோகன்(55), பாபு(40), அறிவுநிதி(28), தஞ்சை மாவட்டம் வடசேரியை சேர்ந்த சுரேஷ்(40) ஆகிய 5 பேரும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் ஆலையில் இருந்த வெடிமருந்தில் திடீரென தீப்பிடித்தது.

சிறிது நேரத்தில் வெடிமருந்து முழுவதும் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், ஆலையின் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அங்கு இருந்த சிங்காரவேல், வீரையன், மோகன், பாபு, அறிவுநிதி, சுரேஷ் ஆகிய 6 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

கட்டிடத்தின் வெளிப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஷேக்(25), முத்து(55), சோமசுந்தரம்(55) ஆகிய 3 பேரும் தீயில் கருகி படுகாயம் அடைந்தனர்." என்கிறது அந்நாளிதழ் செய்தி.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'சுங்க அதிகாரிகள் போல் நடித்து 27 லட்சம் கொள்ளை'

சுங்க அதிகாரிகள் போல நடித்து எழும்பூரில் உள்ள பணமாற்ற அலுவலகத்தொல் 27 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துள்ளனர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

சுங்க அதிகாரிகள் போல அலுவலகத்தில் நுழைந்த சிலர் நான்கு பேரை கடத்தி அவர்களிடம் பணம் பறித்து பின் அவர்களை தீவுத் திடல் சாலையில் இறக்கிவிட்டனர் என்று போலீஸ் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பாந்தோம் சாலையில் உள்ள பணமாற்ற நிறுவனத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணமாக காட்டி சில மோசடிகாரர்கள் இது போன்ற நிறுவனங்களுக்குள் சோதனை செய்ய வந்திருக்கிறோம் என்று சொல்லி கொள்ளை அடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இது சமீபகாலத்தில் நடக்கும் மூன்றாவது சம்பவம் என்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :