மக்களவைத் தேர்தலை தீர்மானிக்கப் போகும் மாநில, தேசிய பிரச்சனைகள்

2019ஆம் ஆண்டு தேர்தலும் படத்தின் காப்புரிமை BBC/AFP/GETTY

ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய முக்கியமான இரண்டு ஆளுமைகள் இல்லாத நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் வாக்களிக்கும் மனநிலையை பாதிக்கும் தேசிய அளவிலான, மாநில அளவிலான பிரச்சனைகள் என்னென்ன?

மாநில அளவிலான பிரச்சனைகள்

1. 'நீட்' எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு

கடந்த சில ஆண்டுகளில் மிகப் பெரிய பிரச்சனையாக தமிழ்நாட்டில் விவாதிக்கப்பட்ட, போராடத் தூண்டிய, அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திய சில விவகாரங்களில் நீட் தேர்வு விவகாரமும் ஒன்று. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 4,000 எம்பிபிஎஸ் இடங்களையும் சுமார் 1000 பல் மருத்துவக் கல்லூரி இடங்களையும் நிரப்ப 'நீட்' எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதிலிருந்து, தமிழக மாணவர்கள், அரசியல் கட்சிகள் இதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் வருடம் தோறும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதும் நிலையில், மிக மிகக் குறைந்த சதவீதத்தினருக்கே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றாலும் இந்த விவகாரம் இப்போதும் தமிழகத்தில் மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் கவலைக்குள்ளாகும் விஷயமாகவே நீடிக்கிறது.

நீட் தேர்வின் காரணமாக அனிதா, ப்ரதீபா ஆகிய மாணவிகள் உயிரிழந்தது தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனாலேயே அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவது என்பதை ஒரு அம்சமாக தங்கள் தேர்தல் அறிக்கைகளில் முன்வைத்திருக்கின்றனர்.

Image caption உயிரிழந்த மாணவி அனிதா

"மிகக் குறைவானவர்களே மருத்துவக் கல்லூரிகளில் சேர்கிறார்கள் என்றாலும் அனிதா, பிரதீபா போன்ற மாணவிகளின் மரணத்தால் மாநிலம் முழுவதும் இது தொடர்பாக ஒருமித்த உணர்வு உருவாகியுள்ளது. தவிர, இதை வெறும் கல்வி தொடர்பான பிரச்சனையாக மட்டும் பார்க்காமல், மாநில உரிமை தொடர்பான பிரச்சனையாகவும் மக்கள் பார்க்கிறார்கள். ஆகவே இது இந்தத் தேர்தலில் மிக முக்கியமான பிரச்சனைதான்" என்கிறார் சமூகநீதிக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஜி. ரவீந்திரநாத்.

2. ஸ்டெர்லைட் விவகாரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான தாமிர உருக்காலையை மூட வலியுறுத்தி கடந்த ஆண்டில் பெரும் போராட்டங்கள் நடந்தன. கடந்த மே 22ஆம் தேதி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த போராட்டக்காரர்கள், தடையை மீறி ஊர்வலமாக வந்தபோது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்த விவகாரம் ஒரு உலக அளவில் ஊடகங்களில் இடம்பெறும் விவகாரமாக உருவெடுத்தது. இதற்குப் பிறகு தமிழக அரசு ஆலையை மூட உத்தரவிட்டாலும், ஸ்டெர்லைட் நீதிமன்றத்தை அணுகியிருப்பதால் இன்னமும் இந்தப் பகுதியில் போராட்டக் கனல் தணியாமலேயே உள்ளது.

இந்த விவகாரத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசு கையாண்ட விதம் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில், பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாயின. தூத்துக்குடியில் மட்டுமல்லாமல், அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் இதன் தகிப்பு இன்னமும் இருக்கிறது.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

"நிச்சயமாக ஒரு தேர்தல் விவகாரம்தான். ஆனால், இந்த விவகாரத்திற்கு யார் காரணம் என்பதில் வேறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் மக்களிடம் இந்த விஷயத்தை எப்படி அணுகுவது என்பதிலும் குழப்பம் இருக்கிறது. பிரச்சாரத்திற்கு வருபவர்களிடம், எழுதிவாங்கிக் கொண்டு வாக்களிக்கலாமா என்கிறார்கள். அப்படி எந்த அரசியல்வாதியும் எழுதித் தரமாட்டார். யாரால் இந்த விவகாரம் துப்பாக்கிச் சூடுவரை சென்றது என்பது குறித்தும் மக்கள் யோசிக்கிறார்கள். இப்படிப் பல காரணிகளால் ஸ்டெர்லைட் விவகாரம் யாருக்கு பாதகமாக இருக்கும் என்பதைச் சொல்வது கடினம். ஆனால், தேர்தலில் அது ஒரு முக்கியமான விவகாரம்" என்கிறார் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீண்ட காலமாக போராடிவரும் ஃபாத்திமா பாபு.

அதே நேரம், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சிலரும் பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

3. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் விவகாரம்

காவிரி பாயும் வளமான டெல்டா மாவட்டங்களின் பல இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் பெட்ரோலியத்தை துரப்பணம் செய்துவருகிறது. இது தவிர, அதே பகுதியில் மீத்தேன், பிற ஹைட்ரோ கார்பனை எடுக்கவும் மத்திய அரசு முடிவுசெய்தது இந்தப் பகுதியினரை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. கடந்த ஆண்டு இது தொடர்பாக பல போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தப் பணிகளில் அரசு மேற்கொண்டு முயற்சிகள் ஏதும் செய்யாததால், இப்போதைக்கு போராட்டங்கள் அடங்கியிருக்கின்றன. இதன் காரணமாகவேதான் அரசியல் கட்சிகள், இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிப்போம் என தங்கள் தேர்தல் அறிக்கையில் கூற வேண்டியிருக்கிறது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இது நிச்சயமாக ஒரு தேர்தல் விவகாரம்தான்.

"ஹைட்ரோ கார்பன் விவகாரம் டெல்டா பகுதியில் மிகப் பெரிய விவகாரம். கடந்த 2018 அக்டோபர் மாதத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக முதல் சுற்று ஏலம் விடப்பட்டது. இதில் ஆழமற்ற கடல் பகுதியில் 5099 ச.கி.மீ பரப்பை துரப்பணம் செய்ய வேதாந்தா நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. நிலப்பகுதியில் 731 ச.கி.மீ பரப்பளவில் ஹைட்ரோகார்பன் துரப்பணம் செய்யும் உரிமம் அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது சுற்று ஏலத்தில் திருவாரூரில் உள்ள திருக்கார வாசலில் இருந்து நாகை மாவட்டம் கரியாபட்டினம் வரையிலான 474 கி.மீ பரப்பில் துரப்பணம் செய்ய தற்போது அறிக்கை விடப்பட்டுள்ளது. மூன்றாவது சுற்றாக 1863 சதுர கி.மீ. தூரத்தை துரப்பணம் செய்ய மே மாதம் ஏலம் விட இருக்கிறார்கள். இப்படியாக காவிரி டெல்டாவில் மட்டும் சுமார் சுமார் 7000 ச.கி.மீ பரப்பில் ஹைட்ரோ கார்பன் துரப்பண பணிகள் நடக்கப் போகின்றன. இது இந்தப் பகுதியையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆகவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை யார் எதிர்க்கிறார்களோ அவர்களுக்கே இப்பகுதியில் உள்ள மக்களும் விவசாயிகளும் ஆதரவளிப்பார்கள். கூட்டணிக்காக யாராவது இதனை ஆதரித்தால், அவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்" என்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன்.

4. பெண்கள் பாதுகாப்பு - சட்டம் - ஒழுங்கு

சட்டம் - ஒழுங்கு என்பது மாநில அரசின் வரம்பிற்குட்பட்ட விவகாரம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அம்பலமான பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் ஆளும் கட்சிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. அதேபோல,சேலத்தில் சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் பொள்ளாச்சி விவகாரம் மாநிலம் தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரும் நாட்களிலும் இம்மாதிரி பெரிய சட்டம் ஒழுங்கு விவகாரம் தலையெடுத்தால், அது நிச்சயம் ஆளும் அரசுக்கு பாதகமாக அமையக்கூடும்.

5. விவசாயிகள் கடன்

விவசாயிகள் அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. அடிக்கடி ஏற்படும் வறட்சி, காவிரி பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளால் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் விவசாயத்தை மீட்டெடுக்க, விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென பல போராட்டங்கள் நடந்துவிட்டன.

தலைநகர் தில்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் உலக அளவில் கவனத்தைக் கவர்ந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த சில மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி, அவற்றில் சில மாநிலங்களில் சில விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்வது மாநில அரசுகள்தான். தற்போது நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தல்தான் என்றாலும், இந்த விவகாரத்தை ஒரு வாக்குறுதியாக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அளித்திருப்பது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

"விவசாயிகளின் கடன் விவகாரம் என்பது இந்தத் தேர்தலில் மிக முக்கியமான பிரச்சனை. இதற்கு முன்பாக நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணம், கடனைத் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்ததுதான். இப்போது எந்தக் கட்சியும் கடன் தள்ளுபடி தொடர்பாக முழுமையாக வாக்குறுதி அளிக்கவில்லை. கூட்டுறவு கடன்களை மட்டும் தள்ளுபடி செய்வதாகச் சொல்கிறார்கள். கூட்டுறவுக் கடன்களைப் பொறுத்தவரை, 100 ஏக்கருக்குக் கடன் கேட்டால் 11-12 ஏக்கருக்குத்தான் கடன் கிடைக்கும். டெல்டாவுக்கு வெளியில் வெறும் 9 ஏக்கருக்குத்தான் கிடைக்கும். இதில் எல்லா விவசாயிகளும் பயன்பெற முடியாது. எல்லாக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லது கடன்களில் குறிப்பிட்ட சதவீதத்தை அரசே செலுத்துவதாக சொல்ல வேண்டும். விவசாயிகள் மத்தியில் இந்தக் கடன் மிகப் பெரிய பிரச்சனை" என்கிறார் தனபாலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம்.

6. தமிழ்நாட்டின் உரிமை பறிப்பு

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகவே தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதான உணர்வு பரவலாகக் காணப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டபோது மாநிலம் முழுவதும் போராட்டத்தில் குதித்ததற்கு இந்த உணர்வே மிக முக்கியமான காரணமாக அமைந்தது. காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு நியாயம் வழங்கவில்லை என்ற உணர்வு, எதிர்ப்பை மீறி நீட் தேர்வை தமிழகத்தில் தொடரச் செய்வது, ஹைட்ரோ கார்பன் விவகாரம் போன்றவை மாநில உரிமை தொடர்பான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் அடுத்தது உயிரிழந்த நிலையில், தமிழக உரிமைகளுக்காக பேச யாருமில்லை என்ற உணர்வையும் உருவாக்கியுள்ளது.

"கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் நடந்தபோது, அது தனித்த போராட்டமாக இருந்தது. ஆனால், ஜல்லிக்கட்டு, நீட் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் மாநில மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்திருக்கிறது. ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் போன்றவை சில மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்தான். ஆனால், அவையெல்லாம் மூத்த தலைவர்கள் இல்லாத தமிழகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே மக்கள் புரிந்துகொள்கிறார்கள். இது தேசியக் கட்சிகளுக்கு பாதகமான உணர்வு" என்கிறார் தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன்.

தேசிய அளவிலான பிரச்சனைகள்

7. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம்

படத்தின் காப்புரிமை AFP

1991ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பொருளாதார நடவடிக்கை பண மதிப்பிழப்பு நடவடிக்கைதான். கறுப்புப் பணத்தை ஒழிப்பது, தீவிரவாதத்தை ஒடுக்குவது ஆகிய நோக்கங்களோடு செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட இந்த நடவடிக்கை தேசத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியது. மத்தியதர, கீழ்த்தட்டு மக்கள் பல நாட்களுக்கு வங்கிகளில் வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. வங்கிகள் அளித்த 2000 ரூபாய் நோட்டுகளுக்கு கடைகளில் சில்லறை கிடைக்காமல் மக்கள் பல நாட்களுக்கு அவதிப்பட்டனர். பல திருமணங்கள் தள்ளிப்போடப்பட்டன.

இவையெல்லாம் நேரடியான தாக்கமென்றால், இந்தியப் பொருளாதாரத்தின் மீது மறைமுகமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எகானமி 2017 ஜனவரியில் வெளியிட்ட அறிக்கை பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 1,28,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கணக்கிட்டது. இதில் தொழில்துறை மட்டும் 61,500 கோடி ரூபாய் இழப்பை எதிர்கொண்டது. இது வேலைவாய்ப்புச் சந்தையிலும் கடுமையாக எதிரொலித்தது.

நடுத்தர, சிறு, குறு வியாபாரிகள், வர்த்தகர்கள், தொழிற்சாலைகள் இந்த பாதிப்பிலிருந்து மீள பல நாட்கள் ஆயின. இந்த ஆட்சிக் காலத்தின் மறக்க முடியாத நிகழ்வாக இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமைந்தது. பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார் என்றாலே, அது மக்களைப் பாதிக்கும் அறிவிப்பாக இருக்குமோ என்று அஞ்சும் அளவுக்கு இந்த நடவடிக்கை இப்போதும் மக்கள் மனதில் நீடித்திருக்கிறது. இது தேர்தலில் மிக முக்கியமான ஒரு பிரச்சனையாகவே இருக்கக்கூடும்.

8. வேலைவாய்ப்பு இழப்பு

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் ஆகியவற்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கத்தால், தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 2007-08ஆம் ஆண்டில் துவங்கி 2016-17ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக இந்தத் துறை வளர்ச்சி கண்டுவந்தது. தமிழ்நாடு அரசின் சிறு, குறு, மத்தியத் தொழில்துறையின் கொள்கைக் குறிப்புகளின்படி 2007-08ல் 27,209 சிறு, குறு தொழிற்சாலைகள் இருந்த நிலையில், 2016-17ல் இதன் எண்ணிக்கை 2,67,310ஆக உயர்ந்தது. 18,97,619 பேர் இந்தத் துறையில் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, 2017 - 18ல் முதன் முறையாக இந்தத் துறையில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைந்தது. முந்தைய ஆண்டில் சுமார் 2,67,000 தொழிற்சாலைகள் இருந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, 2,17,981 தொழிற்சாலைகளே இருந்தன. கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்தார்கள். முந்தைய ஆண்டில் இந்தத் துறையில் 18,97,619 பணியாற்றிய நிலையில், 2018-19ல் 13,78,544 பேர் மட்டுமே இத்துறையில் இருந்தனர்.

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைத் தொழிலிலும் கடுமையான பாதுப்பு ஏற்பட்டுள்ளது. 2018 அக்டோபரில் பட்டாசு உற்பத்திக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், பசுமைப் பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது. கிட்டத்தட்ட 5000 - 5500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் தொழில் துறையில் இதனால், 35 சதவீதம் அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் பெரிய அளவிலான வேலை இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. "இப்போதுதான் பசுமைப் பட்டாசு என்றால் என்ன என்பதை புரிந்து மீண்டும் பணிகள் துவங்கியிருக்கின்றன. ஆனால், முன்பு அளவுக்கு வேலை வாய்ப்பு இருக்குமா என்பதைச் சொல்ல முடியாது" என்கிறார் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அபிரூபன்.

இப்படியாக ஒவ்வொரு தொழில்துறையும் ஒவ்வொரு காரணங்களால் பாதிக்கப்பட்டிருப்பது, தேர்தலில் ஆளும்கட்சிக்கு நிச்சயம் சாதகமாக இருக்காது.

நாடாளுமன்றத் தேர்தலில் இம்மாதிரி அம்சங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடக்கவிருக்கும் இடைத்தேர்தல், மாநில ஆட்சியின் மீதான வாக்கெடுப்பாகவே பார்க்கப்படும். மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சிறிய அளவிலான அனுதாபமும் ஏற்பட்டிருக்கிறது. இவை தவிர, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம், வேட்பாளர் தேர்வு, உள்ளூர் பிரச்சனைகள் ஆகியவையும் இந்தத் தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :