இஸ்ரோ அமைப்பை உருவாக்கியதில் நேருவின் பங்களிப்பு இல்லையா? #BBCFactCheck

நேரு படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவை அமைத்ததில் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு எவ்வித பங்குமில்லை என்று சமூக ஊடகங்களில் தீவிரமாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி கடந்த புதன் கிழமை அறிவித்த நிலையில், இதுபோன்ற தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

எவரும் எதிர்பார்க்காத வேளையில் மோதி நிகழ்த்திய இந்த உரையில், இந்தியா "விண்வெளித்துறையில் வல்லரசாக உருவெடுத்துள்ளதாக" அறிவித்தார்.

பிரதமர் வெளியிட்ட இந்த அறிவிப்பு குறித்து பல்வேறு வலதுசாரி ஆதரவு சமூக ஊடக குழுக்களில் பாராட்டுகள் குவிந்த நிலையில், எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலுக்காக அரசியல் ஆதாயம் தேடும் வகையில் இந்த அறிவிப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR

தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் தகவலில், நேரு 1964ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி உயிரிழந்த நிலையில், இஸ்ரோ அமைப்பு 1969ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் குழுக்களில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகள் தவறான தகவலை பரப்புவதை கண்டறிந்துள்ளோம்.

உண்மை நிலவரம்

இஸ்ரோ அமைப்பை தோற்றுவித்ததில் நேருவுக்கு எவ்வித பங்கும் இல்லை என்று பரப்பப்பட்டு வரும் தகவல் முற்றிலும் தவறானது.

நேரு இறப்பதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு, அதாவது 1962ஆம் ஆண்டே இஸ்ரோவின் முன்னோடி அமைப்பான இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக்கானக் குழு (இந்தியன் நேஷனல் கமிட்டி ஃபார் ஸ்பேஸ் ரிசர்ச்) அமைக்கப்பட்டது. அந்த அமைப்பே 1969ஆம் ஆண்டு இஸ்ரோவாக உருவெடுத்தது.

இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக்கானக் குழுவானது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பிரபல விஞ்ஞானியான விக்ரம் சாராபாயால் ஏற்படுத்தப்பட்டது.

இஸ்ரோவை தோற்றுவித்ததில் முன்னாள் பிரதமர் நேரு தலைமையிலான மத்திய அரசுக்கும், விஞ்ஞானி சாராபாய்க்கும் உள்ள பங்களிப்பு குறித்து அந்த அமைப்பின் இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

"1962ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் தேசிய விண்வெளி ஆராய்ச்சிக்கானக் குழு அமைக்கப்பட்டது. அதன் மூலம் நாட்டின் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. மேலும், விஞ்ஞானி சாராபாயின் வழிகாட்டுதலின்படி, கேரளாவின் தும்பா பகுதியில் செயற்கைக்கோள் ஏவுதளம் ஏற்படுத்தப்பட்டது," என்று இஸ்ரோவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர், 1969ஆம் ஆண்டு தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு, நாட்டின் தற்போதைய தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவாக உருவெடுத்தது.

இஸ்ரோ தோற்றுவிக்கப்பட்டபோது, இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :