மிஷன் ஷக்தி: தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் நரேந்திர மோதி மீறவில்லை - தேர்தல் ஆணையம்

கோப்புப் படம் படத்தின் காப்புரிமை Getty Images

செயற்கைக்கோளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தது தேர்தல் நடத்தை விதியை மீறவில்லை என தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் நடத்தைகள் அமலில் உள்ள சமயத்தில் ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு, அந்த அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் அரசின் அதிகாரபூர்வ ஊடகங்களை பிரதமர் முறைகேடாக பயன்படுத்திவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மார்ச் 27 அன்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.

துணைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையிலான குழு இது குறித்து ஆராய்ந்ததாகவும், தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவற்றின் தலைமை இயக்குநர்களிடம் கருத்து கேட்டதாகவும் சீதாராம் யெச்சூரிக்கு அனுப்பிய பதிலில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அரசின் ஊடகங்களில் பிரதமரின் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்றும், தனியார் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வழங்கிய உள்ளீட்டையே அரசு ஊடகங்கள் பயன்படுத்தின என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தூர்தர்ஷன் வழங்கிய தகவலின்படி இந்த உரை 60க்கும் மேலான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்றும் அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

எனவே, இது தேர்தல் நடத்தை விதிமீறலாகாது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :