பொள்ளாச்சி பாலியல் தாக்குதல்: வீடியோ காட்சிகள் குறித்து யூ டியூப் நிறுவனத்திற்கு கடிதம்

பொள்ளாச்சி பாலியல் தாக்குதல்: யூ டியூப் நிறுவனம் விளக்கம் படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: '90 சதவீத பாலியல் வீடியோக்கள் அழிப்பு'

90 சதவீத பாலியல் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸாருக்கு யூ டியூப் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

அந்நாளிதழ் செய்தி பின்வருமாறு விவரிக்கிறது:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் பார் நாகராஜன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்க சிபிசிஐடி போலீஸார் யூ டியூப், முகநூல் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளம்பெண் ஒருவர், சம்பவம் நடந்த பகுதியில் இளம்பெண்கள், சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவர்களை கொலை செய்து புதைத்துவிட்டதாகக் கூறுவதைப் போன்ற ஆடியோ வெளியானது இவ்வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து சிபிசிஐடி போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசாருக்கு, யூ டியூப் நிறுவனம் நேற்று முன்தினம் மின்னஞ்சல் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறும்போது, ''பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய வீடியோக்களில் 90 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டதாக யூ டியூப் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த சம்பவத்தோடு தொடர்புடையதைப் போன்று மார்ப்பிங் செய்து வெளியிடப்பட்ட வீடியோக்கள் மட்டும் இருப்பதாகவும், அவற்றையும் கண்டுபிடித்து அழிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆடியோ பதிவை வெளியிட்டவர் குறித்த விவரம் கேட்டுள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது'' என்றனர்.


தினமணி: 'கொடி... கோஷம்: நடுவானில் விமானத்துக்குள் ஆர்ப்பாட்டம்'

படத்தின் காப்புரிமை Social Media

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக் கோரி நடுவானில் விமானத்துக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியினர் 8 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"சென்னையிலிருந்து சனிக்கிழமை மதியம் 12.55 மணிக்கு பயணிகள் விமானம் ஒன்று மதுரை நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்பட்ட 40-ஆவது நிமிடத்தில் விமானத்தில் வந்த பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி மாநிலத் தலைவர் முருகன்ஜி தலைமையில் மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக் கோரி நடுவானில் இருக்கையில் இருந்து எழுந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விமானம் திருச்சியை கடக்கும்போது விமானத்தினுள்ளேயே கோஷம் எழுப்பியதால் விமான ஊழியர்கள் பதற்றமடைந்து மதுரை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மதுரை விமான நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் மதுரை விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கியதும், விமானத்தின் உள்ளே சென்ற பெருங்குடி போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி, மூவேந்தர் முன்னணிக் கழக நிர்வாகி செந்தூர் பாண்டியன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். முன்னதாக, கைது செய்யப்பட்டவர்களை பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் 3-ஆம் எண் கேட்' வழியாக போலீஸார் அழைத்து வந்தனர்.

இதில் இவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் சகப் பயணிகளுடன் வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. பயணிகள் கூறிய விவரங்களை வைத்து தப்பியோடிய 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் மதுரை விமானநிலையம் சனிக்கிழமை பரபரப்பாக காணப்பட்டது" என்று விவரிக்கிறது இந்நாளிதழ் செய்தி.


தினத்தந்தி: "சென்னை பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை அறிமுகம்'

சென்னை வட்ட பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் 4ஜி சேவையை முதன்மை பொதுமேலாளர் எஸ்.எம்.கலாவதி நேற்று தொடங்கி வைத்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"முதல் கட்டமாக இந்த சேவை கருங்குழி, பி.வி.களத்தூர், பாலூர், ராஜகுளம், கோவிந்தவாடி, மகரல், பாக்கம் மற்றும் புள்ளரம்பாக்கம் ஆகிய இடங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தணி மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள 200 கிராமங்களுக்கு ஒரு மாதத்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர பல்வேறு தரைவழி தொலைபேசிகளுக்கு கூடுதல் வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளது." என்கிறது அந்நாளிதழ் செய்தி.


படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: டீ கப்புகளில் சௌகிதார் வாசகம் - ரயில்வேதுறைக்கு நோட்டீஸ்

படத்தின் காப்புரிமை Social Media

காகித டீ கப்புகளில் 'மே பி சௌகிதார்' (நானும் சௌகிதார்) என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்டது தொடர்பாக ரயில்வேதுறைக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சௌகிதார் என்று அச்சடிக்கப்பட்ட கப் ஒன்றை, ஒரு பயணி புகைப்படம் எடுத்து அதனை ட்விட்டரில் பதிவு செய்ததையடுத்து அது வைரலாக பரவியது. அதனை தொடர்ந்து ரயில்வே துறை, அக்கப்புகள் பயன்படுத்துவதை திரும்பப் பெற்றது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இது தொடர்பாக விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் பிரச்சாரத்துக்காக அரசுக்கு சொந்தமான ரயிலை பயன்படுத்துவது போல இது அமையும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்ட அறிக்கையில், "சௌகிதார் என்று அச்சிடப்பட்ட டீ கப்புகள் குறித்து விசாரணை நடைபெற்றது. இதற்காக ரயில்வேயிடம் எந்த அனுமதியும் பெறப்படவில்லை. இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :