'மாணவர்களுக்கு படிக்க மட்டுமே அரசியல், போராடினால் ஒழுங்கு நடவடிக்கை'

students politics படத்தின் காப்புரிமை VIGNESH A

மாணவர்கள் நாட்டின் வருங்கால தூண்கள், இளைய சமுதாயம் இந்தியாவின் சொத்து, இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என தேர்தல் பரப்புரைகளில் கேட்டிருப்போம்.

தமிழகத்தில் மாணவர்களின் பிரச்சனைகளை பேசியது, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பல ஆயிரம் மாணவர்கள் பங்குபெற்றது, சிலர் உயிர்த்தியாகம் செய்தது என திமுகவின் வரலாற்றில் மாணவர்களின் பங்கு மிக அதிகம்.

அதிமுகவை பொறுத்தவரை, எம்ஜிஆர் தொடங்கிய கட்சியாக இருந்தாலும், ஜெயலலிதா கட்சியின் பெண் முகமாக காட்சியளித்தார். மாணவர்களுக்கான திட்டங்களில் இலவசங்களை அதிகரித்தார். பிரதான திராவிட கட்சிகளை விடுத்து, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் மாணவர் அணிகளை நடத்துகின்றனர்.

அரசியல் கட்சிகளில் உள்ள மாணவர் அணிகள் எவ்வாறு செயல்படுகின்றன, மாணவர்களுக்கு அரசியலில் வாய்ப்பு தரப்படுகிறதா? மாணவர்களுக்கு அரசியல் அறிவையும், ஆளுமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கிறதா? என பிபிசி தமிழ் ஆராய்ந்தது. ஆய்வாளர்கள், மாணவர் அணிகளில் பொறுப்பில் உள்ள தலைவர்களிடம் உரையாடினோம்.

''வயது வித்தியாசம் தடையில்லை''

திமுக மாணவர் அணி தலைவர் எழிலரசனிடம் பேசியபோது மாணவர் அணியின் செயல்பாடுகளை விவரித்தார். 47 வயதாகும் எழிலரசன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். தற்போது காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

Image caption எழிலரசன்

''தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் தீவிரமாக இயங்குகிறோம். சுமார் 50,000 மாணவர்களோடு இயங்கி வருகிறோம். ராக்கிங் புகார்கள் வந்தால் உடனடி கவனம் செலுத்துகிறோம். நீட் தேர்வு விவகாரத்தில் மாநிலம் முழுவதும் இயங்கும் மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து போராட்டங்களை முன்னெடுத்தோம். டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்தினோம். நான் சட்டமன்றத்தில் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை விரிவாக பேசினேன். நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக அறிவித்த உடன், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்போம் என அதிமுக அறிவித்தது என்பது எங்களின் உழைப்புக்கு சாட்சி. அண்ணா நூற்றாண்டு நூலகம் மேம்படுத்த வேண்டும் என தொடர்ந்து குரல்கொடுத்தோம்,'' என்றார் எழிலரசன்.

''அரசால் நடத்தப்படும் இலவச விடுதிகளில் உள்ள உணவு மற்றும் தண்ணீர் பிரச்சனைகளில் தலையிடுகிறோம். விரைவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாணவர் அணியில் குறைந்தபட்சம் இரண்டு பெண் உறுப்பினர்களை இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளோம்,'' என்றார்.

மாணவர்களோடு பழகுவதற்கு வயது தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்துவதாகவும், யூடியூப் பக்கம் நடத்தி வருவதாகவும் கூறுகிறார் எழிலரசன்.

''மாணவர்களை வழிநடத்த அனுபவம் தேவை''

அதிமுகவின் மாணவர் அணியை தலைமையேற்றுள்ளவர் தற்போது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக உள்ளார் 45 வயதாகும் எஸ்.ஆர். விஜயகுமார். அதிமுக மாணவர் அணியில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்ற சரியான கண்கெடுப்பு தற்போது இல்லை. ஆனால் பெரும்பாலான கல்லூரி பெண்கள் தாங்களாகவே வந்து மாணவர் அணியில் இணைந்து கொள்வதாக கூறினார் விஜயகுமார்.

Image caption விஜயகுமார்

மாணவர் அணியின் செயல்பாடுகள் குறித்து கேட்டபோது, ''தனியார் கல்லூரிகளில் நாம் நுழைய முடியாது. அரசு கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் மத்தியில் நாங்கள் அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் பற்றி விளக்கி பேசுகிறோம். இளமை பருவத்தில் அவர்கள் சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறோம். கல்லூரி விழாக்களில் பங்கேற்கிறோம்,'' என்றார்.

மாணவர் அணியை ஏன் ஒரு மாணவர் தலைமை ஏற்க வாய்ப்புகள் தரப்படவில்லை என கேட்டபோது, ''மாணவர்களுக்கு போதிய முக்கியத்துவத்தை கட்சி வழங்கி வருகிறது. மாணவர்களுக்கு வழிநடத்துவதற்கு அனுபவம் மிக்கவர்கள் தேவை. அவர்களுக்கு பக்குவம் தேவை என்பதால் கட்சியில் உள்ளவர்கள் தலைமை ஏற்று அவர்களோடு பயணிக்கிறோம்,'' என்றார் விஜயகுமார்.

அதிமுக மாணவர் அணியின் தாக்கம் பற்றி கேட்டபோது, அதிமுக அரசு நீட் தேர்வை எதிர்த்தது என்றும், தற்போது அந்த தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால், நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களை அரசு நடத்துகிறது என்றும் கலைக் கல்லூரி மற்றும் சமுதாய கல்லூரிகளின் எண்ணிக்கையை அரசு உயர்த்தியுள்ளது என்றார்.

இந்திய மாணவர் சங்கம் என்று அறியப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பிரிவின் மாணவரணி தலைவர் மாரியப்பன்தான் மாணவர் அமைப்புகளின் தலைவர்களிலேயே தற்போது படித்துக்கொண்டிருப்பவராக இருக்கிறார். 31 வயதாகும் மாரியப்பன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புற இசை ஆய்வு மாணவராக உள்ளார்.

''மாணவர் அணி தலைவர் என்பது கட்சி பதவி அல்ல''

அரசியல் கட்சிகள் பலவும் மாணவர் அணியை இளம் தலைமுறையினரை கட்சியில் சேர்த்துக்கொள்வதற்காக நடத்துவதாகவும், மாணவர் அணியின் தலைவர் பதவி, கட்சியில் கொடுக்கப்படும் ஒரு பதவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது என காட்டமாக பேசுகிறார் மாரியப்பன்.

Image caption மாரியப்பன்

''இவர்களில் பலர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களோடு எந்த தொடர்பும் அற்றவர்கள். கல்லூரி வளாகத்திற்குள் வெகு அரிதாக வருபவர்கள். மாணவர்களின் கல்வித் தரம், கல்வி நிலையங்களில் அதிகரிக்கும் பாலியல் தாக்குதல்கள் போன்ற பிரச்சனைகளை எங்கள் சங்கத்தில் விரிவாகப் பேசி நியாயம் கிடைக்க வழிசெய்கிறோம். நீட் பிரச்சனையில் கைதான மாணவர்கள் இன்றும் வழக்கை சந்தித்து வருகிறார்கள். அதேபோல கல்விக்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இறந்துபோன மாணவனின் வழக்கை அடுத்து, ஆளும் அரசாங்கத்தின் கவனத்தைப் பெற பல போராட்டங்கள் நடத்தினோம். நாங்கள் தாக்கப்பட்டோம். ஆனால் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து, இறந்த மாணவனின் கடனை ரத்து செய்ய வைத்தோம்,'' என்கிறார் மாரியப்பன்.

தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் செலவு செய்ய வேண்டிய ரூ.1,900 கோடியை மாணவர்களின் கல்வி உதவித்தொகையைச் செலுத்தாது ஏன் என இரண்டு நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறும் மாரியப்பன், ''தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவர்களுக்கு தற்போது கல்வி உதவித் தொகை செலுத்தப்பட்டுவிட்டது. மாணவர்களின் உரிமைகள், சமூக ஏற்றத்தாழ்வுகள், கல்வி நிலையங்களில் நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குழுவாக சேர்ந்து பேசி, மாநாடு நடத்துகிறோம்,'' என்கிறார்.

''படிக்க மட்டுமே அரசியல்''

அரசியல் தொடர்பான விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆனந்தியிடம் பேசியபோது, இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் அரசியல் விவாதங்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என விளக்கினார்.

''கல்விக்கூடங்களில் மாற்று சிந்தனைக்கு வாய்ப்புள்ள கொடுக்கப்படுவதில்லை. படிக்கும் காலத்தில்தான் மாற்று சிந்தனைக்கான தளங்கள் மாணவர்களுக்கு கிடைக்கும். இந்தியாவில் பெரும்பாலான கல்விக்கூடங்கள் வேலைக்கு ஆட்களை தயாரிக்கும் ஆலைகளாக செயல்படுவதால், அரசியலில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு சாத்தியம் இல்லை. கேள்வி கேட்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை,''என்கிறார் ஆனந்தி.

''பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியல் விழிப்புணர்வு ஊட்டும் பாடங்கள் பாடத்திட்டத்தில் உள்ளன. மாணவர்கள் படித்து மதிப்பெண் வாங்கலாம். அரசியல் பாடமாக படிக்க அனுமதி கிடைக்கிறது, செயல்பாட்டுக்கு ஆதரவு இல்லை. மாணவர்கள் தங்களது பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தால், போராட்டங்கள் நடத்தினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெரிய கார்பரேட் நிறுவனங்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் பெரும் அளவு பணத்தைக் கொடுத்து படிக்கும் மாணவர்களுக்கு, படித்துவிட்டு, கல்விக் கடனை அடைக்கவேண்டும், வேலைக்கு போகவேண்டும் என்று மட்டுமே தோன்றும். வேலை கிடைப்பது அரிதாகி வருவதால், தன்னைச் சுற்றியுள்ள சமூகம் பற்றி சிந்திக்க வாய்ப்புகள் குறைவு,'' என்கிறார் ஆனந்தி.

தமிழக அரசியல் கட்சிகளில் உள்ள மாணவர் அணிகள் குறித்து கேட்டபோது, ''தமிழகத்தில் கல்லூரிகளில் தேர்தல் நடத்துவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சியில் உள்ள மாணவர் அணிகளாக இயங்குபவை இளைஞர் அணியாக செயல்படலாம். அந்த அணிகளில் மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பது வெளிப்படை,'' என்றார் ஆனந்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்