தேர்தல் 2019 - "30 இடங்களில் தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்" - வேல்முருகன்; மீதமுள்ள 10 தொகுதிகள்?

வேல்முருகன் படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption வேல்முருகன்

2019 மக்களவை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.மு.கவுக்கு ஆதரவளிக்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறது. ஆனால், அக்கட்சியின் தலைவர் வேல்முருகனை பிரச்சாரத்தில் காண முடியவில்லை. இதற்கான காரணங்கள் குறித்தும் சமீபத்தில் நடந்த சுங்கச் சாவடி தாக்குதல் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் வேல்முருகன். பேட்டியிலிருந்து:

கே. 2019ஆம் ஆண்டின் மக்களவை தேர்தல் தொடர்பான கூட்டணிப் பேச்சு வார்த்தைகளை முதலில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் நடத்தினீர்கள். பிறகு, சில நாட்களிலேயே தி.மு.கவுக்கு ஆதரவளித்தீர்கள். என்ன நடந்தது?

ப. அப்படியான ஒரு தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழுவைக் கூட்டியும் பொதுக் குழுவைக் கூட்டியும் தேர்தல் குறித்து விவாதித்தோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாரோடு பயணிப்பது, யாருடனாவது கூட்டணி வைத்து, இடங்களைப் பெற்று போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா அல்லது இப்போதிருக்கிற பொது எதிரியான பாரதிய ஜனதா கட்சியையும் அவர்களை ஆதரித்து அரசு நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி தலைமையிலான மாநில அரசை வீழ்த்துவது ஆகியவை பற்றி விவாதித்தோம். அந்தக் கூட்டத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது என தீர்மானிக்கப்பட்டது.

அந்த பொதுக் குழுவில் கலந்துகொள்ள புறப்பட்டபோது, எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அதனால், தொலைபேசி மூலம் பொதுக்குழுவில் இருந்தவர்களிடம் பேசினேன். பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தோம். அப்போதுதான் எதிரியை வீழ்த்துவதுதான் முக்கியம் என பலரும் கூறினார்கள். அப்படியான சூழலில் தி.மு.கவை ஆதரிக்கிறோம் என்று சொன்னால், அந்தக் காரணங்கள் காலப்போக்கில் தெரியவரும்.

படத்தின் காப்புரிமை TNDIPR

கே. அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா சிறையிலிருந்து வெளிவரும்போது, அவருடைய வாகனத்தை நிறுத்தி உங்களை விசாரித்தார். அந்த அளவுக்கு அவர் உங்கள் மீது பிரியம் வைத்திருந்த நிலையில், இப்படி தி.மு.கவை ஆதரிக்கும் முடிவை உங்கள் கட்சித் தொண்டர்கள் ஏற்கிறார்களா?

ப. முதலமைச்சர் ஜெயலலிதா என்னை உரிய மரியாதையோடு நடத்தினார். என்னுடைய சுயமரியாதைக்கு தன்மானத்திற்கும் இழுக்கு வராமல் பார்த்துக் கொண்டார். நான் போயஸ் கார்டன் வருகிறேன் என்று சொன்னால், அவருடைய காரை எடுத்துச் சென்று ஷெட்டில் நிறுத்திவிட்டு, என்னுடைய காரை அங்கே நிறுத்தவைத்து, வரவேற்றார்கள்.

ஒரு முறை சென்னை வர்த்தக மையத்தில் இஃப்தார் விருந்து நடந்தபோது, நான் பார்வையாளராக கீழே அமர்ந்திருந்தேன். என்னை மேடைக்கு அழைத்து, அவர் அருகில் ஒரு இருக்கையை போடச் சொல்லி அமரச் செய்து மரியாதை தந்தார்.

பிரதமர் நரேந்திர மோதி ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர். ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு அவர் வந்திருந்தார். அதே நரேந்திர மோதி பிரதமராகப் பதிவியேற்கும் விழாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா செல்ல முடிவெடுத்திருந்தார். ஆனால், அந்த விழாவுக்கு ராஜபக்சேவும் வருகிறார் எனச் செய்தி வந்தது. விழா மேடையில் பிரதமர், அவருக்கு அருகில் ஜெயலலிதா, மற்றொரு பக்கம் ராஜபக்சேவை அமரவைத்து ஒரு இணக்கமான சூழல் இருப்பதைப் போல காட்ட நினைக்கிறார்கள் என செய்திவந்தது.

நான் உடனடியாக ஜெயலலிதா அவர்களைப் பார்த்து இந்தத் தகவலை தெரிவிக்க விரும்பினேன். உடனடியாக ஜெயலலிதாவைச் சந்தித்து, 7 பேர் விடுதலை உள்ளிட்ட பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறீர்கள். உலகத் தமிழர்கள் மத்தியில் உங்கள் மீது நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தத் தருணத்தில் நீங்கள் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளக்கூடாது எனத் தெரிவித்தேன். அவர் அதை ஏற்றுக்கொண்டார். அதேபோல, ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போது எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பதைச் சொன்னேன். அதற்கு அனுமதியளிக்கச் சொன்னார். அதேபோல, கெயில் திட்டம் போன்ற பல திட்டங்களிலும் நான் வைத்த கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொண்டார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்காக அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்தேன். சட்டமன்றத் தேர்தல் வரும்போது ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடங்களைத் தருவதாக ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால், இரண்டாம் கட்டத்தில் இருந்தவர்கள் அந்த இடங்கள் கிடைப்பதைத் தடுத்துவிட்டார்கள்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

கே. அ.தி.மு.கவில் இரண்டாம் கட்டத்தில் இருந்தவர்கள்தான் உங்களுக்கு இடங்கள் கிடைப்பதைத் தடுத்துவிட்டதாகச் சொல்கிறீர்கள். ஆனால், அந்த இரண்டாம் இடத்தில் இருந்த சசிகலா - தினகரன் அணியினரின் அ.மு.மு.கவினருடன் எப்படி இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?

ப. ஜெயலலிதா என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தினார். சசிகலாவும் என்னிடம் அன்பாகத்தான் இருந்தார். நான் போயஸ் கார்டனுக்குப் போனபோது, இன்டர்காமில் உதவியாளர் பூங்குன்றனை அழைத்து என்னை கவனிக்கச் சொன்னார். அவர்களும் மிகச் சிறப்பாக கவனித்தார்கள். அதனால் அவர்கள் எனக்கு எதிராக இருந்திருப்பார்களா எனத் தெரியவில்லை.

தொகுதி பங்கீடு குறித்து பேசும்போது, எடப்பாடி கே. பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை அழைத்து வேல்முருகன் அளிக்கும் தொகுதிப் பட்டியலைப் பார்த்து ஒரு முடிவெடுத்து என் கவனத்திற்கு கொண்டுவாருங்கள் என்று சொன்னார்.

பிறகு, கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அழைத்து நான்கைந்து முறை பேச்சு வார்த்தை நடந்தது. ஒரு கட்டத்தில், "தலைமை அலுவலகம் வந்து பேசினால் காலதாமதாகிறது. நாங்கள் எடப்பாடி கே. பழனிச்சாமி வீட்டில் எல்லோரும் இருக்கிறோம். அங்கே பேசிவிடலாம் வாருங்கள்" என்று சொன்னார்கள். அங்கு சென்றவுடன் "நீங்க சும்மா சும்மா அம்மாவையும் சின்னம்மாவையும் தொந்தரவு செய்யாதீர்கள். உங்களுக்கு ஒரு இடம்தான். விருப்பமிருந்தால் நில்லுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று மூஞ்சியில் அடித்ததுபோல சொன்னார்கள்.கே. டிடிவி தினகரனோடு என்ன பேச்சுவார்த்தை நடத்தினீர்கள், தி.மு.கவோடு செல்ல ஏன் முடிவெடுத்தீர்கள்?

ப. அமமுக-வைச் சேர்ந்தவர்கள் முதலில் என்னிடம் பேசினார்கள். டிடிவி தினகரன் தென் மாவட்டங்களில் செல்வாக்குப் பெற்றவராக இருக்கிறார். வட மாவட்டங்களில் வளர்ந்துவரும் தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள். இருவரும் தேர்தலில் இணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். நான் கட்சியின் செயற்குழு, பொதுக் குழுவைக் கேட்டுச் சொல்வதாகச் சொல்லிவிட்டேன்.

நான் மருத்துவமனையில் இருக்கும்போது டிடிவியின் ஆதரவாளர்கள், தி.மு.கவைச் சேர்ந்தவர்கள், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் என எல்லாத் தரப்பினரும் வந்து பார்த்தார்கள். பலர் கூட்டணிக்கு அழைத்தார்கள். சிலர், தனியாக ஒரு அணி அமைக்கலாம் என்று அழைத்தார்கள். பல தமிழ் தேசியத் தலைவர்களோடு நான் பேசினேன். சீமானோடுகூட பேசினேன்.

அதற்குப் பிறகு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், வடதமிழ்நாட்டில் பெரிய செல்வாக்கு இல்லையென்றாலு்ம டி.டி.வி. தினகரன் ஒரு வளர்ந்துவரும் தலைவராக இருக்கிறார். பத்திரிகையாளர்களிடம் சிறப்பாக பேசுகிறார் என்று சொன்னேன். அதை வைத்துத்தான் அவரோடு நான் கூட்டணி என்று கூறிவிட்டார்கள். அவரும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், எஸ்டிபிஐ கட்சியோடு உடன்பாடு கண்டிருக்கிறோம் என்றும் மேலும் ஒரு நல்ல கட்சியோடு பேசிவருகிறோம் என்றும் கூறினார். ஆனாலும் அது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என அதிகாரபூர்வமாக அவர் சொல்லவில்லை.

டிடிவி தரப்பிலிருந்து என்னிடம் நட்பு ரீதியாகப் பேசியது உண்மை. அதை நான் மறுக்கவில்லை. மற்றொரு பக்கம் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. மத்திய அரசிடம் உள்ள அதிகாரத்தை வைத்து இதைச் செய்கிறார்கள். இந்த அநியாயத்தை தட்டிக்கேட்கும் வலிமையுள்ள கட்சியாக தி.மு.க. இருக்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தேர்தல் 2019 - அரசியல் தலைவர்களிடம் இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன?

தேசிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கட்சியாக நாங்கள் இல்லை. ஆனால், அந்தக் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அந்த பலம் இருக்கிறது. தி.மு.கவோடும் காங்கிரசோடும் எனக்கு முரண்பாடு இருப்பது உண்மைதான். இதைப் பல இடங்களில் நான் பதிவுசெய்திருக்கிறேன். ஆனால், முதல்வராக மு. கருணாநிதி இருந்தபோதும் நான் முன்வைத்த பல கோரிக்கைகளைச் செய்து கொடுத்தார். இப்போதும் நான் தி.மு.கவை எந்த நிபந்தனையுமின்றி ஆதரித்தால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நான் மனுக்கொடுக்க சென்றால்கூட வாங்க மறுக்கிறார் எடப்பாடி. ஆனால், மு.க. ஸ்டாலினோ, அவரால் கை காட்டப்படுபவரோ அந்த இடத்தில் இருந்தால் எனக்காகக் காத்திருப்பார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது கலைஞரின் குடும்பத்தை எளிதில் அணுக முடியும். ஸ்டாலினிடம் எந்த நேரத்திலும் தொலைபேசியில் பேச முடியும்.

கே. தமிழ்நாட்டில் பல தமிழ் தேசிய இயக்கங்கள் இருக்கின்றன. ஆனால், தேர்தலில் அவர்களுக்கு போதுமான பலம் இருப்பதில்லை. பெரிய கட்சிகளை அணுகி, ஒன்றிரண்டு இடங்களில்தான் போட்டியிட முடிகிறது?

ப. இன்றைக்கு பெரிய கட்சிகளாக இருப்பவர்கள் கடைக்கோடி வரை அமைப்பை கட்டியிருக்கிறார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு இருக்கிறது. ஆனால் எங்களைப் போன்ற அமைப்புகளுக்கு அம்மாதிரி ஆதரவு இல்லை. போராட்டங்களின் மூலமாகத்தான் மக்களை அடைய முடிகிறது. ஊடகங்கள்கூட எங்களைக் கவனிப்பதில்லை. தமிழ்தேசிய அமைப்புகளுக்கு பொருளாதார பலமில்லை. தமிழ்தேசிய அமைப்புகள் ஒன்றாக இருந்து பெரிய கட்சிகளை வீழ்த்த முடியும் என்றால் நான் அவர்களோடு நின்றிருப்பேன்.

கே. தமிழ் தேசிய அமைப்புகளின் லட்சியம் பொதுவாக, தமிழகத்தின் நலன்தான். ஆனால், இந்த அமைப்புகளுக்குள் கட்சிகளுக்குள் ஏன் ஒரு ஒற்றுமை ஏற்படுவதில்லை?

ப. வாக்கரசியலில்தான் அம்மாதிரி ஒரு அணி அமைவதில்லை. ஓட்டரசியலில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் எவ்வளவு செலவழிக்க வேண்டுமென உங்களுக்கே தெரியும். இம்மாதிரி சூழலில் சிறிய சிறிய தமிழ் தேசிய அமைப்புகள் என்ன செய்ய முடியும்? சீமான் பிச்சை எடுத்து கட்சி நடத்துவேன் என்கிறார். நான் பிச்சை எடுத்தால் தருவார்களா என்று தெரியவில்லை. நல்ல அரசியல்வாதிகளான நல்ல கண்ணுவையும் நெடுமாறனையும் இந்த சமூகம் எப்படி வைத்திருக்கிறது?

படத்தின் காப்புரிமை FACEBOOK

கே. அப்படி சொல்லிவிட முடியுமா? பெரியார், அண்ணா போன்றவர்கள் தங்கள் கருத்துகளை மக்கள் முன் இப்படித்தானே வைத்தார்கள்?

ப. பெரியார் மிக வசதியானவர். அண்ணாவும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்தான். நல்லக்கண்ணு இன்னமும் பேருந்தில்தான் வருகிறார். நான் என் சொத்தையெல்லாம் விற்றுவிற்று செலவழித்துவிட முடியுமா?

கே. பெரியாரும் அண்ணாவும் வசதியானவர்கள் என்பதால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்களா?

ப. ஆமாம். வசதி வாய்ப்பிருந்ததால் பெரியாரால் ஒரு பிரச்சார வாகனம் வாங்க முடிந்தது. முதலில் அதில் பயணம் செய்தார். பிறகு, உங்களுக்காகத்தானே உழைக்கிறேன் எனக்கு ஒரு ரூபாய் கொடுங்கள் எனக் கேட்டார். மேடையில் படம் எடுத்துக்கொள்ள பணம் கேட்டார். சாப்பிடச் செல்ல வேண்டுமென்றால் பணம் கேட்டார். அவர் பணத்தை தர மறுத்து தந்தை வெளியேற்றியபோது, கையேந்தி வசூலித்தார். அன்றைக்கு கொடுக்க அவருக்கென பற்றாளர்கள் இருந்தார்கள். இன்றைக்கு வேல் முருகன் கேட்டால் கொடுக்க யார் இருக்கிறார்கள்? இன்றைக்கு அவர் என்ன ஜாதியென்றல்லவா பார்க்கிறார்கள்?

சட்டமன்றத்தில் நான் சிறப்பாகத்தானே செயல்பட்டேன்? அ.தி.மு.க. தலைமை அன்று அரவணைத்தது. பிறகு வந்தவர்கள் ஏற்கவில்லை. பிடித்து உள்ளே அடைத்தார்கள். தி.மு.கவும்கூட ஆதரவளியுங்கள்; அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்றுதானே சொல்கிறார்கள். ஆனால், அதற்காக இணையதளங்களில் என்னைப் பற்றித் தவறாக எழுதுகிறார்கள். அண்ணா அறிவாலயத்தில் நான் தண்ணீரைத் தவிர வேறு எதையும் குடிக்கவில்லை. ஆனால், என்னைப் பிடிக்காதவர்கள் நான் தி.மு.கவிடம் பெட்டி வாங்கிவிட்டதாகவும் அதனால்தான் எம்.பி., எம்.எல்.ஏ. சீட்களைக் கேட்கவில்லையென சொல்கிறார்கள். நானோ என் தொண்டர்களோ, தி.மு.கவிடம் ஒரு ரூபாயைக்கூட கைநீட்டி வாங்கவில்லை. எங்கள் உழைப்பில் ஓட்டுக்கேட்டுக்கொண்டு இருக்கிறோம்.

இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். என்னை 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய வேண்டுமெனக் கேட்டிருக்கிறார்கள். அவ்வளவு தொகுதிகளிலும் என்னால் பயணிக்க முடியாது. அதனால் பொதுக்கூட்டங்களை ஏற்பாடுசெய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அதனால், அதற்கேற்றபடி பொதுக்கூட்டங்களை அறிவித்திருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption கோப்புப்படம்

கே. தி.மு.கவுடன் கூட்டணி என்று அறிவித்த பிறகும், நீங்கள் பிரச்சாரத்தில் இறங்காமல் இருப்பதற்கு உடல்நலம் மட்டும்தான் காரணமா?

ப. உடல்நலம் மட்டும்தான் காரணம். இப்போது உங்களோடு பேசும்போதுகூட கண்களில் இருந்து தண்ணீர் வந்துகொண்டேயிருக்கிறது. உடல்நலம் மட்டும்தான் காரணம். வேறு எந்தக் காரணமும் கிடையாது. 4ஆம் தேதி முதல் பிரச்சாரத்திற்கு செல்லவிருக்கிறேன். இன்னொன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நான்தான் பிரச்சாரத்திற்குச் செல்லவில்லை. என் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் இப்போதும் களத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால், அதிலும் சில வருத்தங்கள் உண்டு.

கே. தி.மு.க. மேடைகளில் உங்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்ற வருத்தமா?

ப. இல்லை என்ற வருத்தம் இருக்கிறது. நான் மருத்துவமனையில் இருந்தபடி தொலைக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தி.மு.கவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியபோது, என்னுடன் பேசியவர்கள் என்ன சொன்னார்களோ அது நடக்கவில்லை. நான் பணமோ, இடங்களோ கேட்கவில்லை. எனக்கு உரிய மரியாதையைக் கேட்டேன். பா.ம.க. வளர்ந்த கட்சி. அந்த அளவுக்கு உரிய மரியாதையை நான் கேட்கவில்லை. அந்த கட்சியை மதிப்பதில் பாதி அளவுக்காவது மதியுங்கள் எனச் சொன்னேன்.

மேடைகளில் படங்களை வைப்பது, கொடிகளைக் கட்டுவது, துண்டறிக்கைகளில் கட்சிப் பெயரை இடம்பெறச் செய்வது ஆகிய கோரிக்கைகளை வைத்தேன். தி.மு.க. தலைமை அதனை மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துவிட்டது. ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் அலட்சியமாக நடந்துகொள்கிறார்கள். நான் தலைமையிடம் உரிய முறையில் புகார் தெரிவித்திருக்கிறேன். நான் பிரச்சாரத்தை மேற்கொள்ளும்போது இதற்கு விடை கிடைக்கும். 30 இடங்களிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்.

கே. மீதமுள்ள பத்து இடங்கள்...?

ப. ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு பிரதான காரணம் காங்கிரஸ். சரி நடந்துவிட்டது. அந்த விவகாரத்தில் நீதி விசாரணை கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குறித்து எந்தக் கருத்தும் அவர்கள் சொல்ல மறுக்கிறார்கள். பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என வெளிநாடுகளில் சொல்லும் ராகுல் காந்தி, தமிழகத்திற்கு வரும்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்து அதை ஏன் சொல்ல மறுக்கிறார்? அவர் அப்படிச் சொல்லட்டும், காங்கிரஸ் போட்டியிடும் பத்து தொகுதிகளிலும் அவர்களை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்போம். காங்கிரஸ் தலைவர்கள் எங்களிடம் பேசியிருக்கிறார்கள். அவர்களிடம் எங்கள் கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம்.கே. நீங்கள் தமிழ் தேசியம் பேசினாலும் பிற மாநிலத்தவர் இங்கே வாழக்கூடாது எனச் சொல்பவரல்ல.. ஆனால், சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ காட்சியில் சுங்கச் சாவடியில் பணியாற்றும் பணியாளர் ஒருவரைத் தாக்குவது தெரிந்தது. சுங்கச் சாவடியை எதிர்த்தாலும், அங்கு பணியாற்றுபவர்களைத் தாக்குவது முறையா?

ப. நான் மருத்துவமனையில் இருக்கும்போது, என் கட்சியின் ஒன்றியச் செயலாளர் இறந்ததாகச் செய்தி வந்தது. அவசரமாகப் புறப்பட்டேன். என் வாகனத்தைவிட வேகமாகச் செல்லும் என்பதால், என் சகோதரரின் வாகனத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டேன். இந்த வாகனத்தில் சுங்கச் சாவடிகளுக்கு முன்பே பணம் செலுத்தி பெறப்படும் Fast tag ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இணைய தளங்களில் சொல்வதைப் போல ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வண்டியல்ல. 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள வண்டி. இங்கிருந்து செல்லும்போது இதே செக்போஸ்ட்டை கடந்து சென்றேன். அப்போது அனுமதித்தார்கள். சென்னைக்குப் புறப்படும்போது மணி இரண்டரை மணியாகிவிட்டது. எல்லா சுங்கச் சாவடியிலும் இந்த வண்டியை அனுமதித்தார்கள். இந்த சுங்கச் சாவடியிலும் வாகனம் அனுமதிக்கப்பட்டது. தடையைத் தாண்டி, 50 மீட்டர் நகர்ந்திருக்கும்போது வட நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஓடிவந்து வண்டியை மறித்தார். சுங்கம் செலுத்தும்படி சொன்னார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK

என் ஓட்டுனர் "பாஸ்ட் டாக்" முறைக்கு பணம் செலுத்தியிருப்பதைச் சொன்னார். பிறகு வாக்குவாதம் முற்றி, கார் கதவை இழுத்து அந்த இளைஞர் திறக்க முயன்றார். இதுவரைக்குமான காட்சிகளைத்தான் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். முழுவதுமாக வெளியிட்டால்தான் அவர்கள் செய்த அராஜகம் தெரியும். இதெல்லாம் காவல்துறையால் எடிட் செய்யப்பட்டு பரப்பப்பட்டது. 5.30 மணிக்கு அந்த டோல் கேட்டிற்குள் நுழைந்தேன். பிறகு பிரச்சனையாகி, அங்கிருந்து புறப்படும்வரையுள்ள வீடியோ காட்சிகளை முழுமையாக நீங்கள் ஒளிபரப்பத் தயாரா? தவிர, சுங்கச் சாவடிகளில் நடக்கும் அநியாயத்தை யாராவது கேட்கிறீர்களா?

கே. பா.ம.கவிலிருந்து பிரிந்துவந்து ஒரு அரசியல் கட்சியைத் துவங்கியபோது, ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனை முன்வைத்துப் பேசினீர்கள். ஆனால், சமீப காலமாக நீங்கள் ஒரு இலக்கில்லாத பயணத்தை மேற்கொள்வதைப் போலத் தோன்றுகிறது..

ப. இதை நான் முற்றிலும் மறுக்கிறேன். நான் மிகக் கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறேன். சுங்கச் சாவடி தொடர்பான போராட்டம், பணியாளர் தேர்வாணையத்திற்கு எதிரான போராட்டம், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டது, ஆசிரியர் தேர்வாணையத்தில் நடந்த விவகாரம், அஞ்சல் துறை முறைகேடு போன்றவற்றை தொடர்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறேன். ஆகவே, நான் மிகச் சரியாக, நேர்த்தியாக, திட்டமிட்டு ஒவ்வொன்றையும் செயல்படுத்துகிறேன்.

எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால், ஒவ்வொரு ஊடகமும் அவர்களுக்குத் தோன்றியபடி எழுதுகிறார்களே தவிர, நான் மிக சரியாகவே சென்றுகொண்டிருக்கிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :