துரைமுருகன் ஆதரவாளர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாகப பணம், அனைத்தும் 200 ரூபாய் கட்டுகள்

துரைமுருகன் படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: 'துரைமுருகன் ஆதரவாளர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாக பணம்'

திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு, கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக அவரது ஆதரவாளர்கள், உதவியாளர் உள்ளிட்ட 6 பேரின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான டி.எம்.கதிர்ஆனந்த்தின் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இவர்களுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, பள்ளி ஆகியவை காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டையில் உள்ளன.

இந்நிலையில், துரைமுருகன், கதிர்ஆனந்தின் வீடு மற்றும் கல்லூரியில் வருமான வரித்துறை உதவி ஆணையர் விஜயதீபன் தலைமையில் வருமான வரி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குழுவினர் வெள்ளிக்கிழமை இரவு முதல் சோதனை நடத்தினர். சனிக்கிழமை இரவு 8 மணி வரை நடந்த இச்சோதனையில் துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம், சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதன்தொடர்ச்சியாக, துரைமுருகனின் வீடு, அவரது ஆதரவாளர்கள், உதவியாளர் வீடுகளில் தேர்தல் செலவினப் பார்வையாளர் உஜ்வல்குமார் தலைமையில் திங்கள்கிழமை மீண்டும் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித் துறை அதிகாரிகள் 7 குழுக்களாகப் பிரிந்து துரைமுருகன் வீடு, காட்பாடியை அடுத்த வள்ளிமலை சாலை பள்ளிக்குப்பத்தில் உள்ள திமுக விவசாய அணி மாநகர துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு, பள்ளிக்குப்பத்தில் உள்ள அவரது சகோதரி விஜயா வீடு, சிமெண்ட் கிடங்கு, அதற்கு அடுத்த தெருவில் உள்ள திமுக பிரமுகர் தாமோதரன் வீடு, விருதம்பட்டு அருகே வஞ்சூரிலுள்ள திமுக ஊராட்சி துணைச்செயலர் பெருமாள் வீடு, செங்குட்டையில் உள்ள துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர்அலி வீடு, கோட்டநத்தம் முன்னாள் திமுக ஒன்றியச் செயலாளர் கதிர்வேல் வீடு, கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள துரைமுருகனின் பள்ளி ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது, பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது சகோதரி விஜயாவின் சிமெண்ட் கிடங்கில் இருந்து சாக்கு மூட்டை, அட்டைப் பெட்டிகள், துணிப்பைகளில் இருந்து கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் 200 ரூபாய் கட்டுகளாக இருந்ததும், ஒவ்வொரு கட்டிலும் ஊரின் பெயர், வார்டு எண்கள் எழுதப்பட்டிருந்ததால் இந்தப் பணம் தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல், துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர்அலி வீட்டில் இருந்தும் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட நோட்டுகள் அனைத்தும், வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரத்தை வரவழைத்து எண்ணப்பட்டன. எனினும், கைப்பற்றப்பட்ட மொத்த தொகை எவ்வளவு என்பது குறித்து தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மாவட்டத் தேர்தல் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையிலேயே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட இந்தத் தொகை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்படும். தொடர்ந்து, தேர்தல் ஆணையம் உரிய அறிவிப்புகளை வெளியிடும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


இந்து தமிழ்: 'வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி45'

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய ராணுவ பயன்பாட்டுக்கான 'எமிசாட்' மற்றும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி - சி45 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தி இஸ்ரோ வரலாற்று சாதனை படைத்துள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"நம்நாட்டுக்கு முக்கிய தேவை யான தொலைத்தொடர்பு, தொலை யுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. மேலும், வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது.

தொடர் சாதனைகள் மூலம் விண்வெளி ஆய்வில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் வேகமாக முன்னேறி வருகிறது. அந்த வகையில் இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கான 'எமிசாட்' என்ற நவீன மின்னணு நுண்ணறிவு செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்தது.

இந்த செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி - சி45 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டது. ராக்கெட் ஏவுதலின் இறுதிகட்ட பணிகளுக்கான 27 மணி நேர கவுன்ட்டவுன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அதைத்தொடர்ந்து திட்டமிட்ட படி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவு தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக் கெட் நேற்று காலை 9.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்ட 17 நிமிடத்தில் 'எமிசாட்' 749 கி.மீ. துாரத்தில் புவி நீள்வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன்பின் ராக்கெட் இறுதிநிலையான பிஎஸ் 4 இயந்திரம் 2 மணி நேரம் பயணித்து 505 கிமீ தொலைவில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள் களையும் நிலை நிறுத்தியது." என்கிறது அந்நாளிதழ் செய்தி.தினத்தந்தி: 'ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது'

"ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் வருவாய் மார்ச் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது. இதில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.20 ஆயிரத்து 353 கோடி, மாநில அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.27 ஆயிரத்து 520 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.50 ஆயிரத்து 418 கோடி, கூடுதல் வசூல் ரூ.8 ஆயிரத்து 286 கோடி ஆகும். அதே சமயம் கடந்த ஆண்டில் இதே மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.92 ஆயிரத்து 167 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

2018-19-ம் ஆண்டின் சராசரி ஜி.எஸ்.டி. வசூல் ரூ.98 ஆயிரத்து 114 கோடி. இது, 2017-18-ம் ஆண்டை ஒப்பிடும் போது 9.2 சதவீதம் கூடுதலாகும்." என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.


படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை பத்திரம்'

அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை பத்திரம் தீவிரமடைந்துள்ளதாக கூறு கிரது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த நன்கொடை பத்திரம் 1716 கோடிக்கு இந்த ஆண்டில் இதுவரை விற்பனை ஆகி உள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :