பாஜக அரசின் செயல்பாடுகள் தமிழகத்திற்கு எதிரானதாக உள்ளது: கனிமொழி

கனிமொழி

திமுக மாநிலங்கவை உறுப்பினராக உள்ள கனிமொழி, 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை எதிர்த்து போட்டியிடுகிறார்.

திமுக-பாஜக நேரடியாக போட்டியிடும் ஒரே இடம் தூத்துக்குடி தொகுதி.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் மற்றும் அது மூடப்பட்டதால் வேலைவாய்ப்பை இழந்த மக்கள் என அந்த பகுதியில் நிலவும் பிரச்சனை குறித்தும், துறைமுக நகராக அறியப்படும் தூத்துக்குடியின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் பிபிசி தமிழின் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் விரிவாகப் பேசினார் கனிமொழி. பேட்டியிலிருந்து:

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பிரசாரம் செய்துவருகிறீர்கள். வாக்காளர்களின் எதிர்பார்ப்பு என்னவாக உள்ளது? உங்களிடம் என்ன மாதிரியான பிரச்சனைகளை முன்வைக்கிறார்கள்?.

தேர்தலுக்கு முன்னதாகவே திமுக தூத்துக்குடியில் பல கிராமங்களில் ஊராட்சி மன்ற அளவில் கூட்டங்களை நடத்தியது. அப்போது மக்கள் முன்வைத்த பிரச்சனைகளைதான் தற்போதும் முன்வைக்கிறார்கள். ஜிஎஸ்டி வரி, பணமதிப்பிழப்பு பெரிய பொருளாதார பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் பல கிராமங்களில் குடிநீர் பிரச்சனை தீவிரமாக உள்ளது.

வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள். விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு கிடைக்காததால் அதை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் சிரமப்படுகிறார்கள். பல கிராமங்களில் சாலைகள் மோசமாக உள்ளன. பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படாததால், இங்குள்ள பிரச்சனைகளை சொல்வதற்கு கூட ஆளில்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். மருத்துவ படிப்பிற்கான கட்டாய நுழைவு தேர்வான நீட் தேர்வு பல மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆலைக்கு எதிரான மக்களும், ஆலை மூடப்பட்டதால் வேலைவாய்ப்பை இழந்த மக்களும் இங்கு உள்ளனர். வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இரண்டு பிரச்சனைகளை எப்படி சமாளிப்பீர்கள்?

நிச்சயமாக மக்களின் விருப்பத்திற்கு மாறாக திமுக முடிவு எடுக்காது. ஸ்டெர்லைட் ஆலை குறித்த அச்சம் மக்களிடம் உள்ளது. அந்த ஆலையால் நிலம், நீர் மாசடைந்துவிட்டது என்றும் தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிட்டது என்பது மக்களின் எண்ணம். பல ஆண்டுகளாக போராடிவந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆலையின் விரிவாக்க பணிகளை எதிர்த்து கடந்த ஆண்டு மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.போராட்டத்தின்போது மக்களை அழைத்து பேசவில்லை. போராட்டத்தின் போது 100வது நாள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கவந்த பொது மக்கள் மீது அரசு துப்பாக்கிச்சூட்டை ஏன் நடத்தியது? அரசாங்கமே கலவரத்தை தூண்டிவிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியது என சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையால் மட்டுமே தூத்துக்குடியில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லமுடியாது. இங்கு பல ஆலைகள் உள்ளன. மத்திய அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி வரியால் பல சிறு,குறு தொழில்கள் முழுமையாக நளிந்துபோய்விட்டன. கோவில்பட்டியில் பல சிறு வியாபாரிகள் கடலைமிட்டாய் தயாரித்து, விற்றுவந்த வியாபாரத்தை ஜிஎஸ்டியால் இழந்துவிட்டார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 50,000 சிறு குறு தொழில்கள் ,மூடப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கொண்டுவரும் அனைத்து ஆலைகளும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஆலைகளாக கொண்டுவரவேண்டும் என ஏன் மத்திய அரசு நினைக்கிறது? பாஜக அரசின் செயல்பாடுகள் தமிழகத்திற்கு எதிரானதாக, தென் இந்தியாவுக்கு எதிரானதாகஉள்ளது .

உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், துறைமுக நகரமாக அறியப்படும் தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு என்ன திட்டங்களை செயல்படுத்துவீர்கள்?

தூத்துக்குடி தொகுதியில் சாலைவசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. விமான நிலையம் விரிவுபடுத்தப்படவில்லை. இந்த விமான நிலையத்தை விரிவுபடுத்த திமுக ஆட்சிக்காலம் திட்டமிடப்பட்டது.

ஆட்சிமற்றம் வந்ததால், அந்த திட்டத்தை விரைந்து செய்யவில்லை. முறையான குடிநீர் வசதி இல்லை, பள்ளிக்கூடங்கள் சீரமைக்கப்படவில்லை, குளங்கள் மற்றும் நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை. இங்குள்ள நிலத்தடி நீரை பாதுகாப்பான நீராக மாற்றவேண்டும். இதுபோன்ற அடிப்படையான தேவைகளை செய்துகொடுக்கவேண்டும்.

தூத்துக்குடி தொகுதியை நீங்கள் தேர்வு செய்ய என்ன காரணம்? திமுகவில் விருப்ப மனு அளிக்கும்போது, உங்கள் கட்சியில் உங்களைத் தவிர யாரும் விருப்பமனு அளிக்கவில்லை. இந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் வேலைசெய்ய தொடங்கியதாகவும் கூறப்படுவது உண்மையா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வெங்கடேசபுரம் கிராமத்தின் சுயேச்சை ஊராட்சி மன்ற தலைவரான விஜயலட்சுமி தன்னுடைய கிராமத்தை நான் தத்தெடுத்து உதவினால் அந்த கிராமத்திற்கு உதவியாக இருக்கும் என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததது. அந்த கிராமத்திற்கான திட்டங்களுக்காகவும், கட்சி நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி வரவேண்டிய சூழல் அமைந்தது.

பயணங்களின்போது இந்த தொழில் நகரத்தில் ஆலைகள் மட்டுமின்றி பலவிதமான விவசாய விளைபொருட்களுக்கு சந்தைப்படுத்தும் வசதி இல்லை என்பதை உணர்ந்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூட இங்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தினேன். அதனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இங்கு போட்டியிட யோசித்தேன் என்று கூட எதிர்க்கட்சியினர் சொல்லலாம்.

எனக்கு எதிராக போட்டியிடும் பாஜகவை சேர்ந்த தமிழிசை இதுவரை ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த பிரச்சனையின் போதும் தூத்துக்குடிக்கு வரவில்லை. அவர்களின் ஆட்சி மத்தியில் இருந்தாலும், இந்த நகரத்திற்கு எந்த திட்டங்களை செய்யாமல், இங்கு அவர் போட்டியிடுகிறார். இந்நிலையில், இந்த ஊரில் பணியாற்றிய ஒருவர் இங்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில் தவறில்லை என்று தோன்றுகிறது.

படத்தின் காப்புரிமை TWITTER

திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக தலைவர் ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் இல்லாமல் தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் 2019 மக்களவைத் தேர்தல். இந்த இரண்டு ஆளுமைகளின் இழப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

திமுகவை பொறுத்தவரை தலைவர் கலைஞரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. தளபதி ஸ்டாலின் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டு வருகிறார். பல ஆண்டுகளாக திமுகவினர் தலைவருக்கு அடுத்தநிலையில் தளபதியை வைத்து பார்த்து வந்தனர். அதனால் எதிர்க்கட்சியை (அதிமுக) போன்று ஒரு வெற்றிடத்தை நிரப்பவேண்டிய சூழல் திமுகவில் இல்லை. அதிமுகவை பொறுத்தவரை தற்போது உள்ளவர்கள் யாரும் ஜெயலலிதாவின் இடத்தை ஈடு செய்யமுடியாத நிலை தொடர்கிறது. செய்யவும் முடியாது.

திமுக தலைவர் கருணாநிதியின் மகளாக அறியப்பட்ட நீங்கள், மாநிலங்களவை உறுப்பினராக செயலாற்றினீர்கள். தற்போது முதல் முறையாக மக்களை சந்தித்து, வாக்குகளை பெறவேண்டும், நேரடியாக தேர்தலை சந்திக்கிறீர்கள். உங்கள் தந்தையின் வழிநடத்தல் இல்லாத இந்த முதல் தேர்தலை எவ்வாறு பார்க்கிறீர்கள். ஒரு மகளாக எவ்வாறு உணருகிறீர்கள்?

நிச்சயமாக அவரின் இழப்பை உணருகிறேன். ஒரு தந்தையாகவும், தலைவராகவும் அவர் என்ன சொல்லியிருப்பார், எப்படி வழிநடத்தியிருப்பார் என நினைக்காத நாளே இல்லை. அவர் வாழக்கையில் அவர் கடந்து வந்த அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்களை எனக்கு மட்டுமல்ல அவரைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அன்போடு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக இருந்தவர். கலைஞரின் இழப்பு என்பதை ஒவ்வொரு தொண்டரும் உணருகின்றனர். ஒவ்வொருவருக்கும் அவரோடு ஒரு அறிமுகம், நட்பு என உணர்வு ரீதியாக பிணைக்கப்பட்ட தலைவர் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்