‘சிறுநீரக விற்பனை, வாடகைத் தாய்’ - இரு நதிகள் பாய்ந்தும் துரத்தும் துயரம்: திணைகளின் கதை

  • மு.நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்
சிறுநீரகம்

மக்களவைத் தேர்தலின் பொருட்டு மக்களின் குறைகள் தேவைகள் குறிப்பாக தேர்தல் குறித்து அவர்களது மனநிலை குறித்து அறிய இந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்ந்தெடுத்து பிபிசி தமிழ் பயணித்தது.

மலைகளுக்கு வாக்கு இயந்திரங்களை கழுதையில் எடுத்து செல்லும் சின்னராஜ், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் சிற்றூர் (குறிஞ்சி), வாழ்வாதாரத்திற்காக சிறுநீரகத்தை விற்கும் மக்கள் (மருதம்), பூச்சிக் கொல்லியால் இறந்த விவசாயி குடும்பத்தினர் (முல்லை), உப்பளம் அருகே கழிப்பறை இல்லாமல் தவிக்கும் மக்கள் (நெய்தல்) என்று பலரை சந்தித்தோம்.

அதன் தொகுப்பு இது.

திணை: மருதம் | இடம்: ஈரோடு

"அன்று என்னிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் இருந்திருந்தால், நானும் உங்களைப் போல ஆரோக்கியமாக இருந்திருப்பேன்" என்று தன் உரையாடலை தொடங்குகிறார் செல்வி.

செல்வி பணத் தேவைக்காக தனது சிறுநீரகத்தை சில ஆண்டுகளுக்கு முன் விற்றவர். இப்போதும் ஏழ்மையில் உழன்று கொண்டிருப்பவர். தனது தினசரி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள போராடிக் கொண்டிருப்பவர்.

இரு நதிகள் ஓடும் மருத நிலமான ஈரோட்டில் அவரை சந்தித்தோம்.

செல்வியின் கதை

"பெரிதாக வசதி இல்லாவிட்டாலும், வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகதான் சென்று கொண்டிருந்தது, அந்த கடன் வாங்கும் வரை. அந்த பத்தாயிரம் ரூபாய் வாழ்க்கையின் திசையையே திருப்பிப் போட்டுவிட்டது," என்கிறார் செல்வி.

"ஒரு பக்கம் வாங்கிய கடனை கேட்டு கடன் கொடுத்தவர்கள் நெருக்க தொடங்குகிறார்கள். இன்னொரு பக்கம் தினசரி வாழ்வை கடத்தவே போதுமான பணம் இல்லை. இந்த சூழலில்தான் நான் அந்த முடிவை எடுத்தேன்," என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் அவர்.

ஒரு நண்பரின் மூலம் கோவையில் உள்ள ஒருவருக்கு சில ஆயிரங்களுக்கு சிறுநீரகத்தை விற்று அந்த கடனை அடைத்து இருக்கிறார்.

சிறுநீரகத்தை விற்ற பின் உடல்நிலை மோசமடைந்ததாக தெரிவிக்கிறார் அவர்.

சொகுசான வாழ்வுக்காகவெல்லாம் இல்லை. அடிப்படை தேவைக்காகதான் கிட்னியை விற்றேன். அதன்பின் வாழ்க்கை மேலும் மோசமானது. கண்பார்வை மங்க தொடங்கியது. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. வாழ்வின் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாக கூறுகிறார் செல்வி.

மூர்த்தியின் கதை

செல்வியின் கதைக்கும் மூர்த்தியின் கதைக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை. செல்வி பத்தாயிரம் ரூபாய்க்காக சிறிநீரகத்தை மூர்த்தி ஏழாயிரம் ரூபாய்க்கு விற்று இருக்கிறார்.

அதே கதைதான். பத்தாயிரம் கடனுக்காக வங்கதேசத்தவர் ஒருவருக்கு சிறுநீரகத்தை முப்பதாயிரம் ரூபாய்க்கு விற்று இருக்கிறார். பின்னர் இவரே சிலருக்கு சிறுநீரகம் விற்கவும் உதவி இருக்கிறார்.

மூர்த்தி, "கடனில் தத்தளித்த சிலர் என்னை அணுகி இருக்கிறார்கள். அவர்கள் கிட்னியை விற்க உதவி இருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்தில் அதனை நிறுத்திவிட்டேன். யாராவது இப்போது என்னை அணுகினார்கள் என்றால் அவர்களுக்கு புத்திமதி சொல்லி அனுப்பிவிடுகிறேன்," என்கிறார் அவர்.

இப்போது மூர்த்தி தேநீர் கடை நடத்தி வருகிறார்.

ஈரோட்டின் கதை

இது செல்வியின் கதை, மூர்த்தியின் கதை மட்டுமல்ல... ஈரோட்டில் வசிக்கும் பலரின் கதை.

சிறுநீரகம் மட்டுமல்ல பணத் தேவைக்காக பலர் இப்போது வாடகைத் தாயாகவும் இருக்கிறார்கள்.

வாடகைத் தாயாக இருந்த ஒரு பெண்ணை சந்தித்தோம்.

பெயரை வெளியிட விரும்பாத ஒரு பெண், "விசைதறி தொழில் நன்றாக இருந்தபோது எல்லாம் இங்கே சரியாக இருந்தது. தொழில் நசிந்தது, ஒரு தலைமுறையே நசிந்துவிட்டது," என்கிறார் அவர்.

பணமதிப்பழிப்பு விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வில் பெரும் ஆதிக்கம் செலுத்தியதாக கூறுகிறார்கள்.

விசைத்தறி நடத்தி வரும் ஆர்.செல்வராஜ், "பதினைந்து தறி வரை வைத்திருந்தேன். முதலில் மின் வெட்டு தொழிலில் தாக்கம் செலுத்தியது. பின் பணமதிப்பிழப்பு எங்கள் தொழிலை அழித்தொழித்துவிட்டது," என்கிறார்.

என்ன முன்னேற்றம்?

சிறுநீரகத்தை கொடுக்கும் அளவுக்கு ஒருவர் செல்கிறார் என்றால் வறுமை எந்த அளவுக்கு அவர்களை வதைக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவரும் செயற்பாட்டாளருமான ஜீவானந்தம்.

"மனம் விரும்பி எல்லாம் யாரும் சிறுநீரகத்தை கொடையாக தருவதில்லை. பெற்ற மகனுக்கோ மகளுக்கோ வேண்டுமானால் தரலாம். பெரும்பாலும் பணம்தான் நோக்கமாக இருக்கிறது. வறுமைதான் காரணமாக இருக்கிறது," என்கிறார் அவர்.

இப்போது வாடகைதாய்மார்களும் இங்கே அதிகரித்துவிட்டார்கள். அதற்கும் பிரதானமாக வறுமைதான் இருக்கிறது என்கிறார் ஜீவானந்தம்.

சிறுநீரகத்தை விற்கும் அளவுக்கு ஒரு சமூகத்தை கொண்டுவந்து நிறுத்தியதா முன்னேற்றம் என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :