அன்று இந்திரா, சோனியா; இன்று ராகுல் தென்னிந்தியாவில் போட்டியிடுவதேன்?

இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி (இடமிருந்து வலமாக) படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இந்திரா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி (இடமிருந்து வலமாக)

தனது அரசியல் பயணத்தில் முதல் முறையாக, 1977ஆம் ஆண்டு இந்திரா காந்தி தோல்வியடைந்ததை அடுத்து, கர்நாடகாவின் சிக்மங்களூரிலிருந்து போட்டியிட்டு அடுத்த ஆண்டே மக்களவை உறுப்பினரானார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வழக்கமாக தானோ அல்லது குடும்பத்தினரோ போட்டியிடும் உத்தரப்பிரதேசத்திலுள்ள அமேதி தொகுதி மட்டுமின்றி, மக்களவைத் தேர்தலில் கேரளாவிலிருந்தும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ராகுல் காந்தியை விமர்சிப்பதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காத்திருந்த நிலையில் இந்த தகவலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அமேதி தொகுதியிலிருந்து வெற்றிபெற முடியாது என்ற பயத்தின் காரணமாகவே ராகுல் காந்தி தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது, இந்திரா காந்தி, சோனியா காந்தியைத் தொடர்ந்து தற்போது ராகுலும் வாக்கு அரசியலில் தென்னிந்தியாவை சார்ந்து இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

வரலாற்றை திரும்பி பார்த்தால் அந்த கூற்றில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது.

புதிய போக்கின் தொடக்கம்

படத்தின் காப்புரிமை Getty Images

1977ஆம் ஆண்டு வரை நேரு-காந்தி குடும்பத்தினரின் வலிமையான அரசியல் களமாக உத்தரப்பிரதேசம் விளங்கி வந்தது. ராகுல் காந்தியின் பாட்டியான இந்திரா காந்தி உத்தரப்பிரதேசத்திலுள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதியிலிருந்து பலமுறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், 1977ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது ஜனதா கட்சியை சேர்ந்த ராஜ் நரேனிடம் ரேபரேலி தொகுதியில், தனது அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாக தோல்வியடைந்தார் இந்திரா காந்தி.

இருந்தபோதிலும், அடுத்த ஆண்டே கர்நாடகாவின் சிக்மங்களூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திர கௌடா பதவி விலக, அந்த தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு சென்றார் இந்திரா காந்தி.

இதன் மூலம், நேரு-காந்தி குடும்பத்தை சேர்ந்த ஒருவர், தென்னிந்திய மாநிலங்களில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதை முதல் முறையாக இந்திரா காந்தி தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து 1980ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதி மட்டுமல்லாது, அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்த மேடக் தொகுதிலிருந்தும் போட்டியிட்ட இந்திரா, அந்த இரண்டு தொகுதிகளிலுமே வெற்றிபெற்றார்.

நீளும் பட்டியல்

தென்னிந்திய மாநிலத்திலுள்ள மேடக் தொகுதியில் இந்திரா காந்தி வெற்றிபெற்ற இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, அவரது குடும்பத்தை சேர்ந்த மற்றொருவர் மீண்டும் தென்னிந்தியாவில் போட்டியிட்டார்.

1999ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் மருமகளான சோனியா காந்தி அரசியலில் நுழைந்தார்.

தனது குடும்பத்தினர் வழக்கமாக போட்டியிடும் அமேதி தொகுதியில் அவர் போட்டியிட விரும்பினாலும், அச்சமயத்தில் பாஜகவை சேர்ந்த ஒருவர் அந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்ததால், வேறு வழியின்றி கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சோனியா காந்தி

பெல்லாரி தொகுதி சென்னை மாகாணத்திலிருந்து, கர்நாடக மாநிலத்திற்குட்பட்ட தொகுதியாக மாறியது வரை பல தசாப்தங்களுக்கு அது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்து வந்தது.

இருப்பினும், சோனியா காந்தியின் வெற்றி சுலபமாக இல்லை. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜை விட 56,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் சோனியாவால் வெற்றிபெற்ற முடிந்தது.

பின்தொடரும் ராகுல் காந்தி

சோனியா காந்தி பெல்லாரி தொகுதியில் வெற்றிபெற்ற இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் அதே குடும்பத்தை சேர்ந்த ராகுல் காந்தி தென்னிந்தியாவிலிருந்து போட்டியிடுகிறார்.

2004ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அமேதி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றிபெற்று வந்தாலும், அதோடு சேர்த்து கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

ராகுல் வயநாட்டில் போட்டியிடுவது ஏன்?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராகுல் காந்தி

2004ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் முதல் முறையாக வென்றதிலிருந்து, தொடர்ந்து அந்த தொகுதியில் ராகுல் காந்தி வெற்றிபெற்று வந்தாலும், அவரது வாக்கு சதவீதம் சமீபத்திய தேர்தலில் சரிந்துள்ளது.

ஏனெனில், 2004ஆம் ஆண்டு முதல் முறையாக அமேதி தொகுதியில் போட்டியிட்டபோது, 3,90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ராகுல், 2009இல் இன்னும் சற்று அதிகமாக 4,64,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிருதி ராணியைவிட 1,07,000 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருந்தார் ராகுல்.

இந்நிலையில், ராகுல் காந்தியிடம் தோற்றாலும், அந்த தேர்தலுக்கு பின்னரும் ஸ்மிருதி ராணி அமேதி தொகுதிக்கு அடிக்கடி சென்று தனது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அமேதி தொகுதியில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தின் காரணமாகவே ராகுல் காந்தி இரண்டாவதாக வயநாடு தொகுதியிலிருந்து போட்டியிடுவதாக பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவே ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஸ்மிருதி ராணி

அதுமட்டுமின்றி, வயநாட்டில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளதும் ராகுலின் தேர்வுக்கு முக்கிய காரணமென்று கருதப்படுகிறது.

ஏனெனில், 2009ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் நடந்துள்ள இரண்டு மக்களவை தேர்தல்களிலுமே காங்கிரஸ் கட்சியின் ஷாநவாஸ் வெற்றிப்பெற்றார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஷாநவாஸ் உயிரிழக்க, தேர்தலுக்காக காத்திருக்கிறது அந்த தொகுதி.

இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், பாஜக ஒருமுறைகூட 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று தலைமுறைகள், மூன்று மாநிலங்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திரா காந்தி அன்றைய ஆந்திராவிலிருந்தும், சோனியா காந்தி கர்நாடகாவிலிருந்தும் போட்டியிட்ட நிலையில், தற்போது ராகுல் காந்தி கேரளாவிலிருந்து போட்டியிட உள்ளார்.

எப்போதெல்லாம் தங்களது குடும்பத்துக்கு விருப்பமான தொகுதிகளில் போட்டி கடுமையாகிறதோ, அப்போதெல்லாம் தென்னிந்திய மாநிலங்களிலிருந்து களம் காண்கின்றனரா இவர்கள் என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில், காந்தி குடும்பத்தினரின் இந்த போக்கு குறித்து அரசிய விமர்சகர் பண்டாரு ஸ்ரீநிவாசாவிடம் கேட்டபோது, "தேசிய கட்சிகளின் அரசியல் தலைவர்கள் தங்களது சொந்த மாநிலத்திலிருந்து மட்டுமின்றி, மற்ற மாநிலங்களில் போட்டியிடுவது இயல்பான ஒன்றே.

தனது கட்சியின் கட்டமைப்பை நாடு முழுவதும் வலுப்படுத்துவதற்காக பல தலைவரால் இருவேறு தொகுதிகளில் போட்டியிடுவதுண்டு. இதேபோன்று, கடந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதி தனது சொந்த மாநிலம் மட்டுமின்றி, உத்தரபிரதேசத்தின் வாரணாசியிலும் போட்டியிட்டார். இருப்பினும், அமேதி தொகுதியில் ராகுலுக்கு வீழ்ச்சியடைந்து வரும் வாக்குகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது" என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :